பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திறன் பட்டமளிப்பு விழா 2023-ல் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

"திறன் பட்டமளிப்பு விழா இன்றைய இந்தியாவின் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கிறது"

"வலுவான இளைஞர் சக்தியுடன் நாடு மேலும் வளர்ச்சியடைகிறது, அதன் மூலம் நாட்டின் வளங்களுக்கு நீதி கிடைக்கும்"

"இன்று, இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று முழு உலகமும் நம்புகிறது"

“திறமையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட எங்கள் அரசு, அதற்குத் தனி அமைச்சகத்தை உருவாக்கி, தனி பட்ஜெட்டை ஒதுக்கியது”

"தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் தற்போதைய காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியம்"

"இந்தியாவில் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எந்திரம் பழுதுபார்ப்பவர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பம் அல்லது வேறு எந்த சேவையுடனும் நாங்கள் நின்றுவிடவில்லை”

"இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் உள்ளது"

"அடுத்த 3-4 ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் என சர்வதேச செலாவணி நிதியம் நம்புகிறது"

Posted On: 12 OCT 2023 1:05PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறன் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார்.

திறன் மேம்பாட்டிற்கான இந்தத் திருவிழா தனித்துவமானது என்றும், நாடு முழுவதும் உள்ள திறன் மேம்பாட்டு நிறுவனங்களின் கூட்டுப் பட்டமளிப்பு விழாவின் இன்றைய நிகழ்வு மிகவும் பாராட்டத்தக்க முயற்சி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். திறன் பட்டமளிப்பு விழா இன்றைய இந்தியாவின் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்திருப்பதைப் பாராட்டிய பிரதமர், அனைத்து இளைஞர்களுக்கும் தது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டின் இயற்கை அல்லது கனிம வளங்கள் அல்லது அதன் நீண்ட கடற்கரைகள் போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்துவதில் இளைஞர் சக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, வலுவான இளைஞர் சக்தியுடன் நாடு மேலும் வளர்ச்சியடைகிறது, இதன் மூலம் நாட்டின் வளங்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறினார். ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பிலும் முன்னெப்போதும் இல்லாத மேம்பாடுகளைச் செய்துவரும் இந்திய இளைஞர்களுக்கு, இதேபோன்ற சிந்தனை அதிகாரமளிப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். "இதில், நாட்டின் அணுகுமுறை இருமுனையாக உள்ளது" என்று கூறி பிரதமர், ஏறத்தாழ 4 தசாப்தங்களுக்குப் பிறகு நிறுவப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த இந்தியா தனது இளைஞர்களைத் தயார்படுத்துகிறது என்று  தெரிவித்தார். அரசு ஏராளமான புதிய மருத்துவக் கல்லூரிகளையும், ஐஐடி, ஐஐஎம், ஐடிஐ போன்ற திறன் மேம்பாட்டு நிறுவனங்களையும் நிறுவி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெற்று வருவதாகத் தெரிவித்தார். மறுபுறம், வேலைவாய்ப்புகளை வழங்கும் பாரம்பரிய துறைகளும் வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் புதிய துறைகளும் ஊக்குவிக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார். பொருட்கள் ஏற்றுமதி, மொபைல் ஏற்றுமதி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, சேவைகள் ஏற்றுமதி, பாதுகாப்புத்தளவாட ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியா புதிய சாதனைகளைப் படைத்து வருவதாகவும், அதே நேரத்தில் விண்வெளி, ஸ்டார்ட்அப், ட்ரோன்கள், அனிமேஷன், மின்சார வாகனங்கள், செமிகண்டக்டர்கள் போன்ற பல துறைகளில் இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

"இன்று, இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று முழு உலகமும் நம்புகிறது" என்று பிரதமர் கூறினார். உலகின் பல நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா நாளுக்கு நாள் இளமையாகி வருகிறது என்று திரு. மோடி தெரிவித்தார். "இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை உள்ளது" என்று  கூறிய அவர், திறமையான இளைஞர்களுக்காக உலகம் இந்தியாவை நோக்குகிறது என்று குறிப்பிட்டார். உலகளாவிய திறன்  மேம்பாடு தொடர்பான இந்தியாவின் முன்மொழிவு அண்மையில் ஜி 20 உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, இது வரும் காலங்களில் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று அவர் தெரிவித்தார். உருவாக்கப்படும் எந்த வாய்ப்பையும் வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய பிரதமர், இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்தார். முந்தைய அரசுகளில் திறன் மேம்பாடு புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திரு மோடி, "எங்கள் அரசு திறமையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதற்குத் தனி அமைச்சகத்தை உருவாக்கி தனி பட்ஜெட்டை ஒதுக்கியது" என்று கூறினார். இந்தியா தனது இளைஞர்களின் திறன்களில் முன்னெப்போதையும் விட அதிக முதலீடு செய்து வருகிறது என்பதை  விளக்கிய பிரதமர், பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்தை உதாரணமாகக் கூறினார், இது அடித்தளத்தில் இளைஞர்களை வலுப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1.5 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். தொழில் குழுமங்களுக்கு அருகில் புதிய திறன் மையங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தொழில்துறை அதன் தேவைகளைத் திறன் மேம்பாட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும், இளைஞர்களிடையே சிறந்த வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

 

திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் அளித்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், விரைவாக மாறிவரும் தேவைகள் மற்றும் வேலைகளின் தன்மையைக் குறிப்பிட்டு, அதற்கேற்ப திறன்களை மேம்படுத்த வலியுறுத்தினார். தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் தற்போதைய காலத்திற்கு ஏற்ப இருப்பது மிகவும் முக்கியம் என்று பிரதமர் தெரிவித்தார். திறன்களில் மேம்பட்ட கவனம் செலுத்தப்படுவதுபற்றி குறிப்பிட்ட பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 5 ஆயிரம் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும், ஐடிஐ-களில் 4 லட்சத்துக்கும் அதிகமான புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். சிறந்த நடைமுறைகளுடன் திறமையான மற்றும் உயர்தரப் பயிற்சியை வழங்கும் நோக்கத்துடன் நிறுவனங்கள் மாதிரி தொழிற்பயிற்சி நிலையங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

"இந்தியாவில் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாங்கள் எந்திரம் பழுதுநீக்குவோர், பொறியாளர்கள், தொழில்நுட்பம் அல்லது வேறு எந்த சேவையுடனும்  நின்றுவிடுவதில்லை", என்று கூறிய பிரதமர், ட்ரோன் தொழில்நுட்பத்திற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயார்செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நமது அன்றாட வாழ்க்கையில் விஸ்வகர்மாக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு. மோடி, பிரதமர் விஸ்வகர்மா திட்டம் பற்றி தெரிவித்தார். இது விஸ்வகர்மாக்கள் தங்கள் பாரம்பரிய திறன்களை நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகளுடன் இணைக்க உதவுகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் விரிவடைந்து வரும் நிலையில் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றும், சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் உள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலையின்மை வேகமாகக் குறைந்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியின் பயன்கள் கிராமங்களையும், நகரங்களையும் சமமாகச் சென்றடைவதாகவும், இதன் விளைவாக, கிராமங்களிலும் நகரங்களிலும் புதிய வாய்ப்புகள் சமமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாகக் கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இயக்கங்களின் தாக்கத்தைப் பாராட்டினார்.

 

சர்வதேச செலாவணி நிதியம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களை எடுத்துரைத்த பிரதமர், வரும் ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இருக்கும் என்று தெரிவித்தார். உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவைக் கொண்டு செல்வதற்கான தது தீர்மானத்தையும் அவர் நினைவு கூர்ந்தார், மேலும் அடுத்த 3-4 ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் என்று சர்வதேச செலாவணி நிதியம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றார். இது நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர்  கூறினார்.

 

ஸ்மார்ட் மற்றும் திறமையான மனிதவளத் தீர்வுகளை வழங்குவதற்காக இந்தியாவை உலகின் மிகப்பெரிய திறன்வாய்ந்த மனிதவள மையமாக மாற்ற வேண்டும் என்று  பிரதமர் வலியுறுத்தினார். கற்றல், கற்பித்தல் மற்றும் முன்னோக்கிச் செல்லும் செயல்முறை தொடர வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும்" என்று கூறி பிரதமர் தது உரையை  நிறைவு செய்தார்.

***

(Release ID: 1966958)

ANU/SMB/PKV/AG/KRS


(Release ID: 1967094) Visitor Counter : 118