தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்குப் பதிவு செய்ய ஊடகப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

கோவா மாநிலத்தில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான  ஊடகப் பிரதிநிதி பதிவுகளைத் தொடங்குவதில் ஐ.எஃப்.எஃப்.ஐ பெருமிதம் கொள்கிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சமகால மற்றும் பழைய திரைப்படங்களில் மிகச் சிறந்தவற்றைத் திரையிடும் ஒரு விழாவாக இது இருக்கும்.

ஐ.எஃப்.எஃப்.ஐ 54-இல், உலகின் சிறந்த திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள் மற்றும் சக திரைப்பட ஆர்வலர்கள் ஆகியோருடன் கலந்துகொள்ளும் வாய்ப்பை இதன் மூலம் ஊடகப் பிரதிநிதிகள்  பெறுவார்கள்.

ஓர் ஊடகப் பிரதிநிதியாக மாற, நீங்கள் ஜனவரி 1, 2023 அன்று 21 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் அச்சு, மின்னணு, டிஜிட்டல் அல்லது ஆன்லைன் மீடியா அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பைப் பூர்த்தி செய்யும் சுயேச்சையான பத்திரிகையாளர்களும் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். https://my.iffigoa.org/extranet/media/ என்ற தளத்தில் ஆன்லைனில்  பதிவு செய்து கொள்ளலாம்.

ஐ.எஃப்.எஃப்-ஐ ஒரு மகத்தான வெற்றியாக மாற்றுவதற்கும், சினிமாவைப் பாராட்டும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், திரைப்படத் தயாரிப்புக் கலையின் மீது உண்மையான ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் தகவல் மற்றும் தொடர்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்விழாவிற்கு பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு ஊடகப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், ஊடகங்களின் சக்தியைப் பயன்படுத்தி ஐ.எஃப்.எஃப்.ஐ கொண்டாட்டத்தில் பங்களிக்கும் தொழில்முறை சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அழைப்பும் வருகிறது

சினிமாவின் அபரிமிதமான மகிழ்ச்சி மற்றும் இந்த திரைப்படங்கள் பின்னப்பட்ட வசீகரிக்கும் கதைகள், ஒவ்வொன்றும் அவற்றின் படைப்பாளிகளின் வாழ்க்கை, கனவுகள், அபிலாஷைகள் மற்றும் போராட்டங்கள் குறித்த தனித்துவமான பார்வையை வழங்குகின்றன. திரைப்படங்களின் கொண்டாட்டம் திரைகளுடன் நின்றுவிடாமல், அதற்கு அப்பாலும், ஐ.எஃப்.எஃப்.ஐ மற்றும் பிற சிறந்த திரைப்பட விழாக்களின் சாராம்சத்தை வரையறுக்கும் உரைகள், குழு விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் உரையாடல்களும் இடம் பெறும்.

பதிவு செயல்பாட்டின் போது ஏதேனும் சந்தேகங்களுக்கு, (https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/oct/doc20231011259501.pdf) என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும். மேலும் உதவிக்கு பத்திரிகை தகவல் அலுவலகத்தை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +91-832-2956418 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். அனைத்து வேலை நாட்களிலும் இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தத் தொலைபேசி சேவை கிடைக்கும்.

பதிவு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 18, 2023 அன்று இந்திய நேரப்படி இரவு 11:59:59 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனத்தின் காலவரிசை, பார்வையாளர்கள் எண்ணிக்கை, சினிமாவில் கவனம் செலுத்துதல் மற்றும் ஐ.எஃப்.எஃப்.ஐ-இன் எதிர்பார்க்கப்படும் ஊடக செய்தி வெளியீடு போன்ற காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊடக நிறுவனத்திற்கும் வழங்கப்பட வேண்டிய அங்கீகாரங்களின் எண்ணிக்கையைப் பத்திரிகை தகவல் அலுவலகம் தீர்மானிக்கும்.

ஐ.எஃப்.எஃப்.ஐ பற்றி:

1952 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) ஆசியாவின் முதன்மையான திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். ஐ.எஃப்.எஃப்.ஐ தொடங்கப்பட்டதிலிருந்து, திரைப்படங்கள், அவற்றின் வசீகரமான கதைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள திறமையான நபர்களைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்படங்கள் மீதான ஆழமான பாராட்டு மற்றும் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும், பரப்பவும், மக்களிடையே புரிதல் மற்றும் தோழமையின் பாலங்களை உருவாக்கவும், தனிப்பட்ட மற்றும் கூட்டுச் சிறப்பின் புதிய உயரங்களை அடைய அவர்களை ஊக்குவிக்கவும் இந்த விழா முயல்கிறது.

ஐ.எஃப்.எஃப்.ஐ இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் கோவாவின் பொழுதுபோக்கு சங்கம், கோவா அரசு ஆகியவற்றுடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் பொதுவாக இந்த விழாவை வழிநடத்தி வந்த நிலையில், திரைப்பட ஊடக பிரிவுகள் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் (என்.எஃப்.டி.சி) இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, என்.எஃப்.டி.சி விழாவை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது. 54-வது ஐ.எஃப்.எஃப்.ஐ பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு, www.iffigoa.org திருவிழா வலைத்தளத்தைப் பார்வையிடலாம், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களிலும், கோவா பிஐபி-யின் சமூக ஊடகங்களிலும் ஐ.எஃப்.எஃப்.ஐ-யை பின்பற்றலாம்.

***

ANU/SMB/PKV/KPG

iffi reel

(Release ID: 1966614) Visitor Counter : 173