எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதலாவது 800 மெகாவாட் அலகு உற்பத்தியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

இந்தியாவில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தின் மின் உற்பத்தி நிலைங்களில் மிகவும் நவீனமயமானது தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டம்: பிரதமர்

Posted On: 03 OCT 2023 6:37PM by PIB Chennai

 தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் முதலாவது 800 மெகாவாட் அலகு மின் உற்பத்தியை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெத்தபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த திட்டம் தெலங்கானாவுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். இது நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான மின் நிலையங்களில் ஒன்றாக இருக்கும்.

 

இந்நிகழ்ச்சியில்  உரையாற்றிய பிரதமர், இன்றைய திட்டங்களுக்காக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். எந்தவொரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சியும் மின்சார உற்பத்திக்கான அதன் தற்சார்பு திறனைப் பொறுத்தது என்று கூறினார். ஏனெனில் இது ஒரே நேரத்தில் வாழ்க்கை மற்றும் வணிகத்தை எளிதாக்குவதை மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார். பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் 800 மெகாவாட் அலகை அர்ப்பணிப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், "சீரான மின்சார விநியோகம் ஒரு மாநிலத்தில் தொழில்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டார். இரண்டாவது அலகும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அது முடிந்ததும் மின் நிலையத்தின் நிறுவு திறன் 4,000 மெகாவாட்டாக உயரும் என்றும் அவர் கூறினார்.

 

நாட்டில் உள்ள அனைத்து என்.டி.பி.சி மின் நிலையங்களில் தெலங்கானா சூப்பர் அனல் மின் நிலையம் மிகவும் நவீன மின் நிலையம் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். "இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி தெலங்கானா மக்களுக்குச் செல்லும்" என்று கூறிய பிரதமர், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை முடிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை குறிப்பிட்டார்.

 

கடந்த 2016-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், இன்று அதனைத் தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவித்தார். "இது எங்கள் அரசின் புதிய பணிக் கலாச்சாரம்", என்று அவர் மேலும் கூறினார்.

 

என்.டி.பி.சியின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள என்.டி.பி.சியின் தற்போதைய ராமகுண்டம் நிலைய வளாகத்தில் உள்ள இடத்தில்  ரூ.10,998 கோடி செலவில் நிறுவப்படுகிறது. இதன் மூலம் 85% மின்சாரம் தெலங்கானா மாநிலத்திற்கு வழங்கப்படும்.

 

அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்துடன் கூடிய பிட் ஹெட் மின் நிலையம் என்பதால், இந்த திட்டம் தெலுங்கானா மாநிலத்திற்கு குறைந்த செலவில் மின்சாரம் வழங்க உதவும். மேலும், இது இந்தியாவில் என்.டி.பி.சியின் மிகவும் திறமையான மின் நிலையமாக இருப்பதால், இது குறிப்பிட்ட நிலக்கரி நுகர்வு (உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் ஒரு யூனிட்டுக்கு நிலக்கரியின் மொத்த நுகர்வு) மற்றும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கும், இது இந்தியாவில் மிகவும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மின் நிலையங்களில் ஒன்றாகும்.

 

இந்த திட்டத்தின் முதல் அலகு செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், தெலங்கானா மாநிலத்திலும், நாட்டிலும் மின் விநியோக சூழ்நிலை மேம்பட்டுள்ளது. இந்த திட்டம் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த உதவும்.

 

தேசிய அனல் மின் கழகம் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் நிறுவனமாகும். இது நாட்டின் மின்தேவையில் நான்கில் ஒரு பங்கை பூர்த்தி செய்கிறது. 73 ஜிகாவாட்டிற்கும் அதிகமான நிறுவப்பட்ட திறன் மற்றும் அனல், நீர், சூரிய மற்றும் காற்றாலை மின் நிலையங்களின் மாறுபட்ட நிலைகளுடன், என்.டி.பி.சி நாட்டிற்கு நம்பகமான, விலை குறைவான மற்றும் நிலையான மின்சாரத்தை வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பசுமையான எதிர்காலத்திற்காக சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும், கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

***
 

(Release ID: 1963784)

AD/ANU/IR/RS/KRS


(Release ID: 1963820) Visitor Counter : 150