சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        ஆயுஷ்மான் பவ இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
                    
                    
                        அனைவருக்கும்  தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்ய இது ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முயற்சி: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
ஆயுஷ்மான் பவ இயக்கத்தின் மூலம் இந்தியா ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
                    
                
                
                    Posted On:
                13 SEP 2023 4:22PM by PIB Chennai
                
                
                
                
                
                
                குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (13.09.2023) காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பவ இயக்கத்தை  காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஆயுஷ்மான் பவ இயக்கத்தின் குறிக்கோள், எந்த கிராமும் எந்தவொரு நபரும் தரமான சுகாதார சேவைகளில் இருந்து விடுபடக்கூடாது என்பதாகும் என கூறினார்.  உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இலக்கை அடைவதில் நமது நாட்டை இது வெற்றியடையச் செய்யும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருந்தால், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதி நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதற்கு பல  அமைச்சகங்கள் இணைந்து அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதுபோன்ற பெரிய இலக்குகளை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். அனைவருக்கும்  தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்ய இது ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முயற்சி என்று திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
 
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று கூறினார்.  ஆயுஷ்மான் பவ இயக்கம் சுகாதாரத் துறையில் ஒரு பெரிய முன்முயற்சியாக உருவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார். தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதில் யாரும் விடுப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்திற்கு ஏற்ப இந்த இயக்கம்  செயல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பவ முன்முயற்சி மூலம், இந்தியா ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று அவர் கூறினார். உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் தொடர்பான இயக்கங்களும் நடத்தப்படும் என்று  அவர் தெரிவித்தார். 
ஆரோக்கியமான பாரதம் மற்றும் ஆரோக்கியமான உலகம் என்பதே பிரதமரின் தொலைநோக்குப்பார்வை என்று அமைச்சர் தெரிவித்தார். மனிதநேய சேவைகளுக்கு பிரதமர்  அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். முன்பெல்லாம் உயர்தர மருத்துவச் சேவைகளைப் பெற மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது அனைத்தும் வீடுகளுக்கு அருகில் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில், நாட்டின் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,  இது ஜி 20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்களால் பாராட்டப்பட்டுள்ளது என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 
 
இந்நிகழ்ச்சியில்  சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியை  இணைய தளம் மூலம் பார்வையிட்டனர்.
***
AP/ANU/PLM/RS/KRS
                
                
                
                
                
                (Release ID: 1957134)
                Visitor Counter : 222