ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, 500 பிரதமரின் வேளாண் வள மையங்களின் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்

Posted On: 12 SEP 2023 3:11PM by PIB Chennai

"நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதமரின் வேளாண் மையங்கள் (பி.எம்.கே.எஸ்.கே) செயல்படுகின்றன என்றும்  விவசாயம் மற்றும் விவசாய நடைமுறைகள் குறித்த புதிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதே இவற்றின் நோக்கம் என்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.   7 மாநிலங்களைச் சேர்ந்த 500 பிரதமரின் வேளாண் வள மையங்களின் (பி.எம்.கே.எஸ்.கே) 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் காணொலி மூலம்  இன்று (12.09.2023)  கலந்துரையாடிய அவர்,  இதனை தெரிவித்தார்.

ஆந்திரா, பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த  விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின் போது, உரத்துறை இணை அமைச்சர் திரு பகவந்த் கூபாவும் உடனிருந்தார்.

பிரதமரின் வேளாண் வள மையங்கள் விரைவில் மேலும் பல வகைகளில்  மேம்படுத்தப்படும் என்று  திரு மாண்டவியா கூறினார்.  இவை உரங்கள், உபகரணங்கள் போன்றவற்றிற்கான விற்பனை நிலையம் மட்டுமல்ல எனவும்,  இவை விவசாயிகளின் நலனுக்கான அமைப்பு என்றும் அவர் கூறினார்.

நானோ யூரியா, நானோ டிஏபி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் எனவும், ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். வரும் ராபி பருவத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 20 சதவீதம் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரிப்பதன் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித ஆரோக்கியம் பாதிப்பதாக  அவர் கூறினார். அண்மையில் தொடங்கப்பட்ட பிரதமரின் பிராணம் திட்டம் (பூமித் தாயின் மறுசீரமைப்பு, விழிப்புணர்வு, ஊட்டச்சத்து மற்றும் மேம்பாட்டிற்கான பிரதமரின் திட்டம்) தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்தார். மாற்று உரங்களை பயன்படுத்துவதையும் இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு அக்டோபரில் 'கிரிஷி சம்ருதி மஹோத்சவ்' எனப்படும் வேளாண் வள விழாக்கள் நடத்தப்படும் என்றும், இவை  பலதரப்பு மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு அணுகுமுறையின் மூலம்  நடத்தப்படும் என்றும்  அவர்  கூறினார். மத்திய வேளாண்மை, ரசாயனம் மற்றும் உரங்கள், ஊரக வளர்ச்சி  ஆகிய அமைச்சகங்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சருடன் கலந்துரையாடிய விவசாயிகள் பிரதமரின் வேளாண் வள மையங்களின்  சேவைகள் தொடர்பான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உரத்துறை செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ரா, கூடுதல் செயலாளர் திருமதி ஏ நீரஜா மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை  அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

AP/ANU/PLM/RS/GK


(Release ID: 1956648) Visitor Counter : 140