பாதுகாப்பு அமைச்சகம்

ஹிந்துஸ்தான் டர்போ பயிற்சி எச்.டி.டி-40 விமானத்தில் பறந்த விமானப்படை துணை தளபதி

Posted On: 08 SEP 2023 1:27PM by PIB Chennai

பெங்களூருவில் இந்துஸ்தான் டர்போ பயிற்சி விமானம் - 40 (எச்.டி.டி-40) என்ற அடிப்படை பயிற்சி விமானத்தில் விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று பறந்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தயாரித்துள்ள இந்த விமானம் எச்ஏஎல்லின் விமான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது இந்திய ஆயுதப்படைகளின் பயிற்சி தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.

எச்.டி.டி-40 ஒரு முழுமையான ஏரோபேடிக் விமானமாகும், இது நான்கு பிளேடுகள் கொண்ட டர்போ-பிராப் இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. அதிநவீன கண்ணாடி காக்பிட், நவீன ஏவியோனிக்ஸ் மற்றும் ஜீரோ-ஜீரோ எஜெக்ஷன் இருக்கை உள்ளிட்ட சமீபத்திய பாதுகாப்பு அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. பயிற்சியாளர் அதிகபட்சமாக மணிக்கு 450 கிலோமீட்டர் வேகமும், அதிகபட்ச சேவை உச்சவரம்பு 6 கிலோமீட்டர்களும் கொண்டது. எச்.டி.டி-40 முதன்முதலில் 31 மே 2016 அன்று பறந்தது மற்றும் 06 ஜூன் 2022 அன்று கணினி அளவிலான சான்றிதழைப் பெற்றது. முழு விமானத்திற்கான இராணுவ வான் தகுதி மற்றும் சான்றிதழ் மையத்தின் ஒப்புதல் அளிப்பதற்கான நடைமுறை இப்போது நடைபெற்று வருகிறது.

70 விமானங்களை வழங்குவதற்காக இந்திய விமானப்படை, எச்ஏஎல் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, ந்த விமானங்களை படையில் சேர்க்கும் பணி 15 செப்டம்பர் 2025 முதல் 15 மார்ச் 2030 வரை தொடரும். எச்.டி.டி-40 இந்திய ஆயுதப்படைகளின் ஏபி-இனிடியோ விமானிகளின் பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும். இந்தக் கொள்முதலில் விமானத்திற்கான முழு மிஷன் சிமுலேட்டரும் அடங்கும், இது வான்வழி பயிற்சிக்கு துணையாக இருக்கும், இது விமானிகள் கள அளவில் வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கும்.

'தற்சார்பு இந்தியா' என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் அதிக தற்சார்பை அடைவதற்கான மற்றொரு படியாக எச்.டி.டி-40 உள்ளது.

***

ANU/AD/BS/KPG



(Release ID: 1955608) Visitor Counter : 117