பிரதமர் அலுவலகம்

மனிதகுலத்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கல்: எவரையும் விட்டுவிடாமல் கடைக்கோடி வரை ஜி20- யை கொண்டு செல்லுதல் -நரேந்திர மோடி

Posted On: 07 SEP 2023 10:41AM by PIB Chennai

'வசுதைவ குடும்பகம்' என்ற இந்த இரண்டு சொற்களும் ஆழமான தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 'உலகம் ஒரே குடும்பம்' என்பது இதன் பொருளாகும். இது, எல்லைகள், மொழிகள் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து, ஒரு உலகளாவிய குடும்பமாக முன்னேற நம்மை ஊக்குவிக்கும் அனைத்தையும் தழுவிய கண்ணோட்டமாகும். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் போது, இது மனிதகுலத்தை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்கான அழைப்பாக மாறியுள்ளது. ஒரே பூமியாக, நமது கிரகத்தை மேம்படுத்த நாம் ஒன்றிணைகிறோம். ஒரே குடும்பமாக, வளர்ச்சியைத் தேடுவதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறோம். ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்தை நோக்கி நாம் ஒன்றாக நகர்கிறோம் - ஒரே எதிர்காலம் என்பது இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தருணத்தில் மறுக்க முடியாத உண்மையாகும்.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலக நிலை அதற்கு முந்தைய உலகத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. இதில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

முதலாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட உலகைப் பற்றிய கண்ணோட்டத்திலிருந்து, மனிதகுலத்தை மையமாகக் கொண்ட கண்ணோட்டத்திற்கு மாறுவது அவசியம் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது.

இரண்டாவதாக, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் மீள்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை உலகம் அங்கீகரித்துள்ளது.

மூன்றாவதாக, உலகளாவிய நிறுவனங்களை சீர்திருத்துவதன் மூலம் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கான கூட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களில் நமது ஜி20 தலைமைத்துவம் ஒரு வினையூக்கியின் பங்கைக் கொண்டுள்ளது.

2022 டிசம்பரில், இந்தோனேசியாவில் இருந்து நாம் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, ஜி20 அமைப்பால் ஒரு மனநிலை மாற்றம் தூண்டப்பட வேண்டும் என்று நான் எழுதியிருந்தேன். வளரும் நாடுகள், உலகளாவிய தெற்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் விளிம்புநிலை விருப்பங்களை முதன்மைப்படுத்தும் சூழலில் இது முக்கியமாகத் தேவைப்பட்டது.

125 நாடுகளைச் சேர்ந்த உலகளாவிய தெற்கின் குரல் என்னும் உச்சிமாநாடு, நமது தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதன்மையான முன்முயற்சிகளில் ஒன்றாகும். உலகளாவிய தெற்கிலிருந்து உள்ளீடுகளையும், யோசனைகளையும் சேகரிப்பதற்கான ஒரு முக்கியமான பயிற்சியாக இது இருந்தது. மேலும், ப்பிரிக்க நாடுகளிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பங்களிப்பை நமது தலைமைத்துவம் கண்டதோடு மட்டுமல்லாமல், ப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20-யின் நிரந்தர உறுப்பினராக சேர்க்கவும் வலியுறுத்தியுள்ளது

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகம் என்பது களங்களில் உள்ள நமது சவால்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதாகும். இது 2030 இலக்கின் நடுப்பகுதியாகும், மேலும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம் தடம் புரண்டுள்ளது என்று பலர் மிகுந்த கவலையுடன் குறிப்பிடுகின்றனர். நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஜி-20 2023 செயல் திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதை நோக்கிய ஜி-20 இன் எதிர்கால திசையை வழிநடத்தும்.

இந்தியாவில் பண்டைக்காலத்தில் இருந்தே இயற்கையுடன் இயைந்து வாழ்வது ஒரு நடைமுறையாக உள்ளது. நவீன காலத்திலும் கூட, பருவ நிலை செயல் திட்டத்திற்கு நமது பங்களிப்பை நாம் செய்து வருகிறோம்.

வளரும் நாடுகளில் பல வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில்  உள்ளன. இவை பருவ நிலை செயல்திட்டத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். பருவ நிலை செயல்திட்டத்திற்கான விருப்பங்களை நிறைவேற்ற பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் இருக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எதை செய்யக்கூடாது என்பதில் கடுமையாக இருப்பதைவிட, எதை செய்ய வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான அணுகு முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

நீடிக்கவல்ல உறுதியான நீலப் பொருளாதாரத்திற்கு ஏற்ப நமது கடல்களின் தூய்மைத் தன்மையை பராமரிப்பதில் சென்னை உயர்நிலைக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன.

பசுமை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையத்துடன் நமது தலைமைத்துவத்தில் இருந்து, தூய்மையான பசுமை ஹைட்ரஜனுக்கான உலகளாவிய சூழல் அமைப்பு உருவாகும்.

2015-ல், நாம் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியைத் தொடங்கினோம். தற்போது உலகளாவிய உயிரி எரிபொருள்கள் கூட்டணி மூலம், சுழற்சிப் பொருளாதாரப் பயன்களுடன் உலக எரிசக்தி மாற்றத்திற்கு உலகளவில் நாம் ஆதரவாக இருப்போம்.

பருவ நிலை செயல்திட்டத்தை ஜனநாயப்படுத்துவது இந்த இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். தனிநபர்கள் தங்களின் நீண்ட கால ஆரோக்கியத்தின் அடிப்படையில் அன்றாட முடிவுகளை மேற்கொள்வது போல, இந்தப் புவிக் கோளின் ஆரோக்கிய அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை முறை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.  உடல் நலத்திற்கு உலகளாவிய மக்கள் திரள் இயக்கமாக யோகா மாறியிருப்பது போல், நீடிக்கவல்ல சூற்றுச்சூழலுக்கான வாழ்க்கை (லைஃப்) முறையுடனும் உலகத்தை நாம் உத்வேகப்படுத்தி வருகிறோம்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக உணவுப் மற்றும் சத்துணவு பாதுகாப்பை உறுதி செய்வது  முக்கியமானதாக இருக்கும்.  இதற்கு சிறுதானியங்கள் அல்லது  ஸ்ரீ அன்னா  உதவியாக இருப்பதோடு பருவநிலைக்கு உகந்த வேளாண்மையையும் ஊக்கப்படுத்தும்.  சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டில் சிறுதானியங்களை நாம் உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளோம்.  இந்த இசை வடிவில் உணவு பாதுகாப்பு மற்றும்  ஊட்டச்சத்து குறித்த  உயர் நிலைக் கோட்பாடுகள் உதவிகரமாக உள்ளன.

தொழில்நுட்பம் மாற்றத்திற்கானதாக மட்டுமின்றி,  அனைவரையும் உள்படுத்துவதற்கான தேவையாகவும் இருக்கிறது. கடந்த காலத்தில்  தொழில்நுட்ப முன்னேற்றங்கள்  சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சமமான பயனை அளிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலையை அதிகப்படுத்துவதற்கு மாறாக, தொழில்நுட்பம் சமத்துவமின்மையை எவ்வாறு குறைக்கும் என்பதில் இந்தியா  கவனம் செலுத்துகிறது.

உதாரணமாக, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் வங்கிக் கணக்கு பெற்றிடாத நிலையில் அல்லது டிஜிட்டல் அடையாளங்கள்  இல்லாத நிலையில், இந்தியாவில் டிஜிட்டலுக்கான பொதுக் கட்டமைப்பு மூலம் பொருளாதார ரீதியாக அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது ஜி20 மூலம் அனைவரையும் உட்படுத்திய வளர்ச்சியின்  அதிகாரத்தை அளிப்பதற்கு டிபிஐ முறையை வளரும் நாடுகளுக்கு நாம் வழங்கி உதவலாம்.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் என்பது தற்செயலானது அல்ல. நமது எளிய, அதிகப்படியான, நீடிக்கவல்ல தீர்வுகள்  சாமானிய மக்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளன. நமது  வளர்ச்சிக்கு நலிவடைந்த பிரிவு மக்கள் தலைமை தாங்குகிறார்கள். விண்வெளியில் இருந்து விளையாட்டுகள் வரை, பொருளாதாரத்தில் இருந்து தொழில் முனைவு வரை, இந்தியப் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள். பெண்களின் மேம்பாடு என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்பதற்கு மாறியிருக்கின்றனர். பாலின ரீதியிலான டிஜிட்டல் பாகுபாடுகளைக் குறைப்பதற்கும் தலைமைத்துவத்திலும்  முடிவுகள் எடுப்பதிலும் பெண்களுக்கான பங்கினை  அதிகரிப்பதற்கும் நமது ஜி20 தலைமைத்துவம்  பாடுபட்டு வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜி20 தலைமைத்துவம் என்பது வெறும் உயர்நிலை ராஜ்ஜிய பதவி அல்ல. ஐனநாயகத்தின் அன்னை பன்முகத்தன்மையின் முன்மாதிரி என்ற நிலையில், இந்த அனுபவத்தின் கதவுகளை உலகத்திற்கு நாம் திறந்து வைத்துள்ளோம்.

இன்று அதிகளவிலான பொருட்களின்  தரம் என்பது இந்தியாவோடு இணைந்ததாக இருக்கிறது. ஜி20 தலைமைத்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இது மக்கள் பங்கேற்புள்ள இயக்கமாக மாறியிருக்கிறது. நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 60 நகரங்களில்  200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நமது தலைமைப் பொறுப்பு நிறைவடையும் காலத்திற்குள் நடத்தப்பட்ட கூட்டங்களில் 125 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். எந்தவொரு தலைமைத்துவமும் இவ்வளவு பெரிய அளவில், பலதரப்பட்ட புவியியல் சூழலில் கூட்டங்களை  நடத்தியதில்லை.

இந்தியாவின் மக்கள் தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும்  வளர்ச்சி குறித்து பலரும் பேசுவதைக் கேட்கமுடிகிறது. இவற்றை முதன் முறையாக அவர்கள் பேசுவது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கிறது.  நமது ஜி20 பிரதிநிதிகள் இதற்கு சான்று என நான் உறுதியாக நம்புகிறேன்.

நமது ஜி20 தலைமைத்துவம் பாகுபாடுகளை இணைக்கவும், தடைகளை உடைக்கவும் பாடுபட்டுள்ளது. முரண்பாடுகளை நீக்கி ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், ஒத்துழைப்புக்கான விதைகளை நாம் விதைத்துள்ளோம். அனைவரின் குரலைக் கேட்பதையும், அனைத்து நாடுகளும் பங்களிப்பு செய்வதையும் உறுதிப்படுத்த ஜி20 தலைமைத்துவம் என்ற முறையில் உலகளாவிய பங்கேற்பை அதிகப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் வழியாக நமது உறுதிமொழியை நாம் இணைத்திருப்பதாக நான் நம்புகிறேன்.

 

***

ANU/AD/PKV/AG/KPG

 



(Release ID: 1955389) Visitor Counter : 177