பிரதமர் அலுவலகம்
சந்திரயான்-3 வெற்றி குறித்து உலகத் தலைவர்கள் தெரிவித்த வாழ்த்துக்கு பிரதமர் நன்றி
Posted On:
24 AUG 2023 11:45PM by PIB Chennai
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை அடுத்து இந்தியாவுக்கு பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
வாழ்த்துச் செய்தி அனுப்பிய தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் தரையிறங்கியதற்கு இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் நம்பமுடியாத சாதனையாகும். இந்தப் பணி மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் உங்களுடன் இன்னும் பரந்த அளவில் கூட்டு சேர்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அமெரிக்க துணை அதிபரின் இந்த வாழ்த்து செய்திக்கு பிரதமர் பதிலளித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடகப்பதிவு வருமாறு:-
துணை அதிபர் கமலா ஹாரீசின் வாழ்த்துக்களுக்கு நன்றி. சந்திரயான்-3 வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக விண்வெளி ஆராய்ச்சி முழுமைக்கும் ஒரு மைல்கல்லாகும். விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேற்றத்திற்கான கூட்டுமுயற்சியை நமது பயணம் அதிகரிக்கிறது.
மொரிஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜூகநாத் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
வரலாறு படைத்த பிரதமர் @narendramodi மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள். நிலவின் தென்துருவம் அருகே சந்திரயான்-3 பத்திரமாக தரையிறங்கியது அறிவியல் கண்டுபிடிப்புகளின் புதிய சகாப்தத்தைத் திறந்துள்ளது.
மொரிஷியஸ் பிரதமரின் வாழ்த்துச் செய்திக்கு பிரதமரின் பதில் வருமாறு:-
எனது நண்பர் பிரதமர் குமார் ஜூக்நாத்தின் அன்புமிக்க வார்த்தைகளுக்கு நன்றி. சந்திரயான் -3 வெற்றி இந்திய மக்களின் கூட்டு உறுதிப்பாட்டுக்கு சான்றாகும்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியின் வாழ்த்து செய்தி
விண்வெளி ஆய்வில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவது ஒரு பெரிய அறிவியல், தொழில்துறை மற்றும் நிறுவன அர்ப்பணிப்பின் நனவாகும்.
இத்தாலி பிரதமரின் வாழ்த்துச் செய்திக்கு பிரதமர் வெளியிட்டுள்ள நன்றி பதிவு,
மேதகு ஜியார்ஜியா மெலோனியின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இத்தாலியுடனான கூட்டாண்மையை நாங்கள் மதிக்கிறோம். ஜி20 உச்சிமாநாட்டுக்கு தில்லியில் தங்களை வரவேற்பதை எதிர்நோக்கியுள்ளேன்.
ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவின் வாழ்த்துச் செய்தி வருமாறு,
நிலவில் சந்திரயான் -3 தரையிறங்கிய வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஜாக்ஸா மற்றும் இஸ்ரோ இடையே நிலவு ஆய்வுத் துறையில் ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்.
ஜப்பான் பிரதமரின் வாழ்த்துச் செய்திக்கு பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவு வருமாறு
பிரதமர் கிஷிடாவின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி. இந்த சிறப்பான சாதனை உலக முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும்.
அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி,
மிகப்பெரிய சாதனை படைத்த இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு. லட்சியம் மற்றும் திறனுக்கு ஒரு பெரிய சான்று.
அயர்லாந்து பிரதமரின் வாழ்த்துச் செய்திக்கு பிரதமர் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பு,
எங்களது முயற்சிகளை அங்கீகரித்தமைக்கு நன்றி. இந்த சாதனை 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களையும், எங்களது விஞ்ஞானிகளின் ஆற்றலையும் பிரதிபலிக்கிறது.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இதுவரை மனிதர்களால் ஆராயப்படாத நிலவின் தென்துருவத்தில் இந்தியாவின் விண்கலமான சந்திரயான் -3 நேற்றிரவு வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசின் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசிய பிரதமரின் வாழ்த்துச் செய்திக்கு பிரதமர் வெளியிட்டுள்ள நன்றி செய்தி வருமாறு,
பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு நன்றி. எங்கள் சாதனையில் மலேசியாவின் ஆதரவும், பெருமிதமும் மிகவும் போற்றுதலுக்குரியது.
***
AP/PKV/AG/KPG
(Release ID: 1952119)
Visitor Counter : 130
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam