அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா 2025 ஆம் ஆண்டுக்குள் 150 பில்லியன் டாலர் உயிரி பொருளாதாரத்தை எட்டும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
22 AUG 2023 5:37PM by PIB Chennai
இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் 150 பில்லியன் டாலர் உயிரி பொருளாதாரத்தை எட்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை (பயோடெக்னாலஜி) மற்றும் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுச் செயல்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி புது தில்லியில் இன்று (22.08.2023) கையெழுத்தானது. இந் நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர், இந்தியாவில் வளர்ந்து வரும் உயிரி பொருளாதாரம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு கணிசமாக பங்களிக்கும் என்றார். உலகளாவிய உயிரி தொழில்நுட்பத் துறையில் இந்தியா 3 முதல் 5 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது என்றும் இத்துறையில் இந்தியா உலக அளவில் 12 வது இடத்திலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 3 வது இடத்திலும் உள்ளது என்று அவர் கூறினார்.
உலகளவில் இந்தியா 3-வது பெரிய புத்தொழில் அமைப்பைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான தற்சார்பு இந்தியா என்ற கொள்கைக்கு ஏற்ப எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப தளத்தை உருவாக்கும் நோக்கில் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
உயிரி தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் உயிரி உற்பத்தித் துறையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பை இந்த கூட்டு செயல்பாட்டு ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று அமைச்சர் கூறினார். இது உயிரி தொழில்நுட்பம் தொடர்பான தொழில்களை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் உயிர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பங்களிக்கும் என்று திரு ஜிதேந்திர்ர சிங் கூறினார்.
***
AP/ANU/PLM/RS/KPG
(Release ID: 1951177)
Visitor Counter : 145