பிரதமர் அலுவலகம்
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிரதமர் பதிலுரை
"அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை காட்டிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் நான் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க வந்துள்ளேன்"
Posted On:
10 AUG 2023 8:24PM by PIB Chennai
அவையில் உரையாற்றிய பிரதமர், அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை காட்டியதற்காக இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க வந்துள்ளதாக அவர் கூறினார். இது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு அல்ல, 2018 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை அவையில் அறிமுகம் செய்தவர்களுக்கானது என்று குறிப்பிட்டதை அவர் நினைவுகூர்ந்தார். "2019 ஆம் ஆண்டில் நாங்கள் தேர்தலைச் சந்தித்தபோது, மக்கள் அவர்கள் மீது மிகுந்த பலத்துடன் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தனர்" என்று பிரதமர் கூறினார், தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிஜேபி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வென்றன என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒருவகையில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அதிர்ஷ்டம் என்று பிரதமர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பிஜேபியும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து மக்களின் ஆசீர்வாதத்துடன் 2024-ல் வெற்றி பெறும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் உரிய கவனத்துடன் பங்கேற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பிரதமர் கூறினார். கடந்த சில நாட்களில் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்த முக்கியமான மசோதாக்களைவிட அரசியலுக்கு முன்னுரிமை அளித்த எதிர்க்கட்சிகளால் அவை விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மீனவர்கள், தரவுகள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடிகள் தொடர்பான பல மசோதாக்கள் இருந்தன, ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அவற்றில் ஆர்வம் இல்லை. இது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம். அவர்களைப் பொறுத்தவரை, கட்சி நாட்டிற்கு மேலானது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்", என்று அவர் கூறினார். எதிர்க்கட்சிகளை நாடு கவனித்து வருவதாகவும், அவர்கள் எப்போதும் மக்களை ஏமாற்றி வருவதாகவும் பிரதமர் கூறினார்.
ஒரு தேசம் பழைய தளைகளில் இருந்து விடுபட்டு புதிய ஆற்றலுடனும் உறுதியுடனும் முன்னேறும் காலம் வருகிறது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். "21 ஆம் நூற்றாண்டின் இந்தக் காலகட்டம் நமது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் காலமாகும். இந்தக் காலக்கட்டத்தில் என்ன வடிவமைக்கப்படுகிறதோ அது அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நமக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது, நாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க முழு அர்ப்பணிப்பு என்ற ஒற்றைக் கவனம் இருக்க வேண்டும்" என்பதை அவர் வலியுறுத்தினார். நமது மக்களின் மற்றும் இளைஞர்களின் பலம் நம்மை இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் என்று அவர் கூறினார்.
2014 ஆம் ஆண்டிலும், அதற்குப் பின்னரும், அவர்களின் கனவுகளை நனவாக்கும் திறன் எங்குள்ளது என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால், நாடு ஒரு முழு பெரும்பான்மை அரசைத் தேர்ந்தெடுத்தது என்று கூறி அவர் உரையைத் தொடர்ந்தார். ஊழல் இல்லாத ஆட்சியை இந்திய இளைஞர்களுக்குக் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு தைரியத்தையும், திறந்த வானில் பறக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளோம். உலகில் இந்தியாவின் நிலையை நாங்கள் சரிசெய்துள்ளோம், மேலும் அவர்களை புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றுள்ளோம்" என்று அவர் உறுதிபட தெரிவித்தார். "நம்பிக்கையில்லா தீர்மானம் என்ற போர்வையில் மக்களின் நம்பிக்கையை உடைக்க எதிர்க்கட்சிகள் தோல்விகாணும் முயற்சியை மேற்கொண்டுள்ளன", என்று அவர் கூறினார். ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பின் வளர்ச்சி, சாதனை, வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதியின் புதிய உச்சங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட திரு மோடி, "இன்று ஏழைகளின் இதயத்தில் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற ஒரு நம்பிக்கை உருவாகியுள்ளது" என்றார். 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வருவது குறித்த நித்தி ஆயோக் அறிக்கை குறித்தும் அவர் பேசினார்.
இந்தியா ஏறத்தாழ வறுமையை ஒழித்துவிட்டது என்ற சர்வதேச செலாவணி நிதியத்தின் ஆய்வறிக்கையைப் பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச செலாவணி நிதியத்தை மேற்கோள் காட்டி, இந்திய நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டம் மற்றும் பிற சமூக நலத் திட்டங்கள் ஒரு 'திட்டமிடலின் அதிசயம்' என்று பிரதமர் கூறினார். ஜல் ஜீவன் இயக்கம் நாட்டில் 4 லட்சம் உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது, தூய்மை இந்தியா இயக்கம் 3 லட்சம் உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுவதை அவர் மேற்கோள் காட்டினார். "இவர்கள் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசிக்கும் நாட்டின் ஏழை மக்கள்", என்று அவர் மேலும் கூறினார். தூய்மை இந்தியா திட்டம் குறித்து யுனிசெப்பை மேற்கோள் காட்டிய பிரதமர், நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 சேமிக்க இது உதவுகிறது என்றார்.
எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை விமர்சித்த பிரதமர், அவர்கள் அவநம்பிக்கையில் மூழ்கியுள்ளதால் மக்களின் நம்பிக்கையை அவர்களால் பார்க்க முடியவில்லை என்று கூறினார். எதிர்க்கட்சிகளின் மோசமான மொழியும், இடைவிடாத பேச்சும் 'கலா டிக்கா' (கெட்ட சகுனத்தை விரட்டுவது) போல செயல்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தால் இலக்கு அமைப்புகள் அனைத்தும் எப்போதும் பிரகாசிக்கின்றன என்று கூறிய பிரதமர், இது 'எதிர்க்கட்சிகளின் ரகசிய வரம்' என்று கூறினார். "அவர்கள் யாருக்குக் கெட்டதை விரும்புகிறார்களோ, அவர்கள் நன்றாகவே செயல்படுவார்கள்" என்று அவர் கூறினார்.
வங்கித் துறையின் முன்னேற்றங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை நினைவுகூர்ந்த பிரதமர், தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் மக்களைக் குழப்புவதற்கும் அவர்கள் தங்களால் முடிந்தவரை முயன்றனர் என்று கூறினார். ஆனால், பிரதமர் குறுக்கிட்டு, பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டை வாராக் கடன் நெருக்கடியை நோக்கித் தள்ளிய போன் பேங்கிங் மோசடி குறித்தும் அவர் குறிப்பிட்டார். நாடு இதிலிருந்து மீண்டு இப்போது முன்னேறி வருகிறது என்றார். எதிர்க்கட்சிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட எச்.ஏ.எல் நிறுவனத்தையும் திரு மோடி உதாரணம் காட்டினார். எச்ஏஎல் வெற்றியின் புதிய உயரங்களைத் தொட்டு வருவதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். எல்.ஐ.சி குறித்து எதிர்க்கட்சிகள் பேசும் அவதூறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், எல்.ஐ.சி நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகக் கூறினார்.
"நாட்டின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை" என்று குறிப்பிட்ட பிரதமர், தனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று சில நாட்களுக்கு முன்பு கூறியதை நினைவு கூர்ந்தார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில், இந்த இலக்கை அடைவதற்கான அவர்களின் செயல்திட்டம் குறித்து அவர்கள் அரசிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஆலோசனைகளை வழங்கியிருக்க வேண்டும், ஆனால் அப்படி நடக்கவில்லை என்று பிரதமர் கூறினார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு எதுவும் செய்யத் தேவையில்லை என்று கூறும் எதிர்க்கட்சிகளின் மெத்தனத்தை அவர் சாடினார். எதிர்க்கட்சிகளின் இத்தகைய அணுகுமுறை, கொள்கைகள், நோக்கங்கள், தொலைநோக்குப் பார்வை, உலகப் பொருளாதாரம் பற்றிய அறிவு, இந்தியாவின் திறன்கள் பற்றிய புரிதல் ஆகியவற்றின் பற்றாக்குறையைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
1991-ல் இந்தியா எப்படி வறுமையில் மூழ்கியது, திவால்நிலையின் விளிம்பில் இருந்தது என்பதைப் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இருப்பினும், 2014 க்குப் பிறகு, உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் இந்தியா இடம் பிடித்தது. சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்புடன் 'சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்' என்ற மந்திரத்தின் மூலம் இது சாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார். இது தொடரும், தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். "2028 ஆம் ஆண்டில், நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்போது, இந்தியா முதல் 3 இடங்களுக்குள் இருக்கும்" என்று அவர் அவையில் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் அவநம்பிக்கை அணுகுமுறையை விமர்சித்த பிரதமர், தூய்மை இந்தியா, ஜன்தன் கணக்கு, யோகா, ஆயுர்வேதம், ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற பிரச்சாரங்களில் அவர்களின் நம்பிக்கையின்மை குறித்து பேசினார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவியதை சுட்டிக்காட்டிய பிரதமர், அப்போதைய அரசு பாகிஸ்தானுடன் உடன்பட்டு ஒரே நேரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையையும் தொடர்ந்தது என்றார். காஷ்மீர் மக்களுக்குப் பதிலாக ஹுரியத் உடனான அவர்களின் தொடர்பு குறித்தும் அவர் குறிப்பிட்டார். துல்லிய தாக்குதல் குறித்து பேசிய பிரதமர், இந்த நடவடிக்கையில் அரசை நம்புவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் எதிரியின் கதையை எவ்வாறு நம்பத் தேர்வு செய்தன என்று வினவினார்.
"நாட்டைப் பற்றி தவறாகப் பேசுபவர்களை எதிர்க்கட்சிகள் விரைவாக நம்புகின்றன" என்று கூறிய பிரதமர், உணவுப் பாதுகாப்பின்மையைக் கையாளும் ஒரு நாடு சில அளவுகோல்களில் இந்தியாவை விட முன்னணியில் இருப்பதாக ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தவறான அறிக்கையைக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட்டு, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை களங்கப்படுத்த முயற்சிக்கின்றன என்று அவர் கூறினார். மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசியின் உதாரணத்தையும் அவர் கூறினார், எதிர்க்கட்சிகள் அதை நம்பவில்லை, மாறாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை நோக்கின என்று கூறினார். இந்தியா மற்றும் அதன் மக்களின் திறன்களை எதிர்க்கட்சிகள் நம்பவில்லை என்பதையும், அதேபோல், மக்களின் பார்வையில் எதிர்க்கட்சிகள் மீதான நம்பிக்கையின் அளவு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
கூட்டணிக் கட்டமைப்பின் ஒப்பனை மாற்றங்கள் நாட்டு மக்களை முட்டாளாக்க முடியாது என்றும், ஒரு சாதாரண பெயர் மாற்றம் எதிர்க்கட்சி கூட்டணியின் எதிர்காலத்தை மாற்றாது என்றும் பிரதமர் கூறினார். "அவர்கள் உயிர்வாழ தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உதவியை நாடியுள்ளனர், ஆனால் இரண்டு 'திமிர் பிடித்த 'ஐ', முதலாவது 'ஐ; 26 கட்சிகளின் ஈகோவுக்கு, இரண்டாவது 'ஐ' ஒரு குடும்பத்தின் ஈகோவுக்கு. அவர்கள் இந்தியாவை ஐ.என்.டி.ஐ.ஏ என பிளவுபடுத்தினர். "எதிர்க்கட்சிகள் பெயர்களை மாற்றுவதை நம்புகின்றன, ஆனால் அவர்கள் தங்கள் பணிக் கலாச்சாரத்தை மாற்ற முடியாது", என்று அவர் குறிப்பிட்டார். தமிழக அரசின் அமைச்சர் ஒருவரின் பிளவுபடுத்தும் கருத்தைக் குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தின் மீதான தனது நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார், மேலும் தேசபக்தியின் நீரோடை தொடர்ந்து பாயும் மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார். பெயர்களால் எதிர்க்கட்சிகளின் ஈர்ப்பைப் பற்றி பேசிய பிரதமர், ஒவ்வொரு திட்டத்திற்கும் முக்கிய அடையாளத்திற்கும் ஒரு குடும்பத்து உறுப்பினர்களின் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டது என்பதைக் குறிப்பிட்டார். ஐ.என்.டி.ஐ.ஏ.வை ஒரு 'காம்டியா' கூட்டணி (திமிர் பிடித்த கூட்டணி) என்று அழைத்த பிரதமர், பங்காளிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களும், நாட்டின் நிறுவனர்களும் எப்போதுமே வாரிசு அரசியலை எதிர்த்தனர் என்பதை திரு. மோடி வலியுறுத்தினார். வாரிசு அரசியலால் முக்கிய தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இது போன்ற அரசியலால் பாதிக்கப்பட்ட பல ஜாம்பவான்களின் உருவப்படங்கள் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்களின் பிந்தைய ஆண்டுகளில் மட்டுமே நாடாளுமன்றத்தில் இடம் பெற்றன என்று அவர் கூறினார். ஒற்றுமை சிலை மற்றும் பிரதமர்களின் அருங்காட்சியகம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். இந்த அருங்காட்சியகம் அனைத்துப் பிரதமர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மக்கள் இரண்டு முறை முழு பெரும்பான்மை அரசைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'கரிப் கா பேட்டா'வால் எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். தடுப்பூசிகளைக் கொண்டு செல்வதற்கும், வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வருவதற்கும் கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களை தவறாக பயன்படுத்தியது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இலவச அரசியலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த பிரதமர், அத்தகைய அரசியல் கொண்டு வரும் அழிவுக்கு அண்டை நாடுகளின் நிலைமையை ஒரு எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டினார். பொறுப்பற்ற வாக்குறுதிகள் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் போக்கு காணப்படுவதாகவும், வளர்ச்சித் திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதால் மக்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை என்று பிரதமர் கூறினார். உள்துறை அமைச்சர் எந்த அரசியலும் இல்லாமல் பொறுமையாக பிரச்சினைகளை விரிவாக விளக்கினார் என்று அவர் கூறினார். உள்துறை அமைச்சரின் விளக்கம் நாடு மற்றும் தேசத்தின் கவலையை வெளிப்படுத்தும் முயற்சியாகும், இது மணிப்பூருக்கு அவையின் நம்பிக்கையை தெரிவிக்கும் முயற்சியாகும். விவாதித்து வழிகளைக் கண்டறிவதற்கான நேர்மையான முயற்சி இது.
மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர், மணிப்பூரில் நடந்த வன்முறை வருத்தமளிக்கிறது என்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசும், மாநில அரசும் பாடுபடும். வரும் காலங்களில் மணிப்பூரில் அமைதி நிலவும் என்று நாங்கள் எடுக்கும் முயற்சியின் அடிப்படையில் இந்திய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்" என்று பிரதமர் கூறினார். மணிப்பூர் மக்களுக்கும், மணிப்பூரின் தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கும் தேசம் துணை நிற்கும் என்றும், அவை அவர்களுக்கு துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார். மணிப்பூர் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அவையில் மா பாரதிக்கு ஆட்சேபகரமான மொழியைப் பயன்படுத்தியதற்குப் பிரதமர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார், மேலும் பிரிவினைக்கு காரணமானவர்கள் மற்றும் வந்தே மாதரத்தை இழிவுபடுத்தியவர்கள் இவர்கள் என்று கூறினார். எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு கச்சத்தீவு விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு என்றும் மோடி குறிப்பிட்டார்.
வடகிழக்கு தொடர்பாக மூன்று சம்பவங்களை பிரதமர் குறிப்பிட்டார். முதலாவதாக, 1966 மார்ச் 5 அன்று, மிசோரமில் மக்களைத் தாக்க விமானப்படை பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, 1962 ஆம் ஆண்டில் சீனப் படையெடுப்பின் போது வடகிழக்கு மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள விடப்பட்டபோது அப்போதைய பிரதமர் நேருவால் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இப்பகுதி புறக்கணிக்கப்படுவதாக ராம் மனோகர் லோகியா கூறிய குற்றச்சாட்டையும் அவர் மேற்கோள் காட்டினார். தற்போதைய அரசில், அமைச்சர்கள் வடகிழக்கின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் 400 இரவுகள் தங்கியிருப்பதாகவும், பிரதமரே 50 முறை பயணம் செய்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். "வடகிழக்குடன் எனக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு உள்ளது. பிரதமராவதற்கு முன்பே, நான் பிராந்தியம் முழுவதும் பயணம் செய்துள்ளேன்" என்று திரு மோடி கூறினார்.
மணிப்பூரில் சமீபத்தில் மோதல் எழுந்த நிலையில், மணிப்பூரில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம் காங்கிரசும் அதன் அரசியலும்தான் என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். "மணிப்பூர் வளமான இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்தது. மணிப்பூர் எண்ணற்ற தியாகங்களின் பூமி", என்று அவர் கூறினார். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தீவிரவாத அமைப்புகளின் அழைப்பின் பேரில் செயல்பட்டதையும், அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தியின் படத்தை வைக்க தடை விதிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். மொய்ராங்கில் உள்ள ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் அருங்காட்சியகத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மீது குண்டு வீசப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். மணிப்பூர் பள்ளிகளில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்பட்டதையும், நூலகங்களில் இருந்து புத்தகங்களை எரிக்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது இப்பகுதியில் நடந்த தீவிரவாத நடவடிக்கைகளின் பல எடுத்துக்காட்டுகளை பிரதமர் குறிப்பிட்டார், மாலை 4 மணிக்கு கோயில்களின் கதவுகளை மூடுவது, இம்பாலில் உள்ள இஸ்கான் கோயில் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, உயிர் இழப்புக்கு வழிவகுத்தது மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரவாதிகளுக்கு வழங்கிய பாதுகாப்பு பணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாட்களில், வடகிழக்கு வளர்ச்சி மையமாக மாறும் என்று பிரதமர் கூறினார். உலகளாவிய அமைப்பில் உள்ள இயக்கங்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற உண்மையையும், அது வடகிழக்கில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் தாம் அறிவதாக அவர் கூறினார். அதனால்தான் வடகிழக்கின் வளர்ச்சிக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்றார் பிரதமர். வடகிழக்கில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது குறித்து பேசிய திரு மோடி, நவீன நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் எவ்வாறு வடகிழக்கின் அடையாளமாக மாறி வருகின்றன என்பதைக் குறிப்பிட்டார். "அகர்தலா முதல் முறையாக ரயில் இணைப்புடன் இணைக்கப்பட்டது, சரக்கு ரயில் முதல் முறையாக மணிப்பூரை அடைந்தது, முதல் முறையாக வந்தே பாரத் போன்ற நவீன ரயில் இப்பகுதியில் ஓடியது, அருணாச்சல பிரதேசத்தில் முதல் கிரீன்பீல்டு விமான நிலையம் கட்டப்பட்டது, சிக்கிம் விமானப் பயணத்துடன் இணைக்கப்பட்டது, வடகிழக்கில் முதல் முறையாக எய்ம்ஸ் திறக்கப்பட்டது, மணிப்பூரில் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மற்றும் மிசோராமில் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம் முதன்முறையாக திறக்கப்பட்டது. அமைச்சரவையில் பங்கேற்பு அதிகரித்தது, முதல் முறையாக, ஒரு பெண் மாநிலங்களவையில் நாகாலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல் முறையாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன, மேலும் லச்சித் பர்ஃபுகன் போன்ற ஒரு நாயகன் குடியரசு தினத்தன்று கொண்டாடப்பட்டார். ராணி கெய்டின்லியுவின் பெயரில் ஒரு அருங்காட்சியகம் நிறுவப்பட்டது", என்று அவர் கூறினார்.
"எங்களைப் பொறுத்தவரை, அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்பது ஒரு முழக்கம் அல்ல, மாறாக நம்பிக்கையின் ஒரு தொகுப்பு, அர்ப்பணிப்பு" என்று கூறிய பிரதமர், "உடலின் ஒவ்வொரு துகள்களையும் ஒவ்வொரு கணத்தையும் நாட்டு மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.
"நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கான மேடை அல்ல. நாடாளுமன்றம் நாட்டின் மிக உயர்ந்த அமைப்பாகும். எனவே, உறுப்பினர்கள் இதில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். இவ்வளவு நிதி இதற்கு ஒதுக்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு விநாடியும் நாட்டுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். தீவிரத்தன்மை இல்லாமல் ஒருவர் அரசியல் செய்யலாம், ஆனால் நாட்டை நடத்த முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில், சாமானிய குடிமக்களின் நம்பிக்கை புதிய உயரங்களுக்கு முன்னேறி வருவதாகவும், ஒவ்வொரு இந்தியரும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் பிரதமர் கூறினார்."இன்றைய இந்தியா அழுத்தத்தால் நொறுங்கவில்லை. இன்றைய இந்தியா வளைவதில்லை, சோர்வடைவதில்லை, நிற்பதில்லை" என்ற திரு மோடி நம்பிக்கையுடனும், உறுதியுடனும் முன்னேறுமாறு குடிமக்களை வலியுறுத்தினார். சாமானிய மக்களின் நம்பிக்கைதான் இந்தியாவை நம்ப உலகுக்கு உத்வேகம் அளிக்கிறது என்றார். இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கை, சாமானிய மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நம்பிக்கைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு வலுவான அடித்தளங்களை அமைப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த நம்பிக்கைதான் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மோசமான சூழ்நிலைகளில் இருந்து நாடு ஒன்றிணைந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், மணிப்பூர் நிலத்தை அற்ப அரசியலுக்கு அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தினார். "வலி மற்றும் துன்பத்திற்கு நாம் அனுதாபம் கொள்ள வேண்டும்; மீட்புக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இதுதான் முன்னோக்கி செல்லும் வழி" என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
***
AD/SMB/KRS
(Release ID: 1947645)
Visitor Counter : 174
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam