பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கைத்தறி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களின் களஞ்சியம் (பாரதிய வஸ்திரா ஏவம் ஷில்பா கோஷ்) என்ற ஜவுளி மற்றும் கைவினை களஞ்சியத் தொகுப்பு குறித்த தளத்தை அறிமுகப்படுத்தினார்

“இன்றைய இந்தியா உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், அவற்றை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கான உலகளாவிய தளத்தையும் வழங்குகிறது”

"சுதேசி எனப்படும் உள்ளூர் பொருட்கள் குறித்து நாட்டில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது"

"உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்கும் உத்வேகத்துடன், மக்கள் முழு மனதுடன் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குகிறார்கள். இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது"

"இலவச உணவு தானியங்கள், பாதுகாப்பான வீடு, ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை - இது மோடியின் உத்தரவாதம்"

"நெசவாளர்களின் பணிகளை எளிதாக்குவதற்கும், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், தரம் மற்றும் வடிவமைப்புகளை மேம்படுத்துவதற்கும் அரசு தொடர்ந்து முன் முயற்சிகளை எடுத்து வருகிறது”

"ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டத்திலிருந்தும் தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை ஒரே குடையின் கீழ் ஊக்குவிக்க மாநிலங்களின் தலைநகரங்களில் அரசால் ஏக்தா மால் என்ற விற்பனை நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது"

“நெசவாளர்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை வழங்க தெளிவான செயல்திட்டத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது“

"தற்சார்பு இந்தியாவுக்கான கனவுகளை நனவாக்குபவர்களும் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு வலு சேர்ப்பவர்களும், கதர் ஆடையை வெறும் ஆடையாக மட்டுமல்லாமல் ஆயுதமாகவும் கருதுகின்றனர்”

"வீடுகளின் மேல்கூரைகளில் மூவர்ணக் கொடி ஏற்றப்படும்போது, அது நமக்குள்ளும் பறக்கிறது"

Posted On: 07 AUG 2023 3:22PM by PIB Chennai

புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய கைத்தறி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஆடைவடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட  ‘ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களின் களஞ்சியம்' என்ற தளத்தை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்ட பிரதமர், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பாரத் மண்டபத்தின் திறப்பு விழா நடைபெறுவதற்கு முன்பு பிரகதி மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரு கூடாரத்தில் காட்சிப்படுத்தியதை நினைவு கூர்ந்தார். இந்தியாவின் கைத்தறித் தொழிலின் சிறப்புகளை எடுத்துரைத்த பிரதமர், பழைய மற்றும் புதியவற்றின் சங்கமம் இன்றைய புதிய இந்தியாவை வரையறுக்கிறது என்றார். இன்றைய இந்தியா உள்ளூர் பொருட்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அதை உலகளவில் எடுத்துச் செல்வதற்கான  தளத்தையும் வழங்குகிறது என்று அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு நெசவாளர்களுடனான தமது உரையாடல்கள் குறித்து பேசிய பிரதமர், இன்றைய பிரமாண்ட கொண்டாட்டங்களில் நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கைத்தறிக் குழுவினர் இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை வரவேற்றார்.

"ஆகஸ்ட் மாதம் 'கிராந்தி' மாதம்" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு தியாகத்தையும் நினைவுகூர வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார். சுதேசி இயக்கம் குறித்துப் பேசிய பிரதமர், அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஜவுளிகளை புறக்கணித்ததோடு நின்றுவிடாமல், இந்தியாவின் சுதந்திரப் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளித்தது என்று கூறினார். அந்த இயக்கம் நெசவாளர்களை மக்களுடன் இணைக்கும் இயக்கம் என்றும், அந்த இயக்கம் தொடங்கப்பட்ட இந்த நாளை தேசிய கைத்தறி தினமாக அரசு தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான் என்றும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில், கைத்தறித் தொழில் மற்றும் நெசவாளர்களின் வளர்ச்சிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். சுதேசி குறித்து நாட்டில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். நெசவாளர்களின் சாதனைகள் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றி குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார்.

ஒருவரின் அடையாளம் அவர்கள் அணியும் ஆடைகளுடன் தொடர்புடையது என்பதை  என்று கூறிய பிரதமர், இந்த நிகழ்ச்சியில் காணக்கூடிய மாறுபட்ட ஆடை வகைகளை எடுத்துரைத்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை பல்வேறு பகுதிகளின் ஆடைகள் மூலம் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது என்று அவர் கூறினார். இந்தியா ஆடைகளின் அழகான பலவகைகளையும், வண்ணங்களையும் கொண்டுள்ளது என்று கூறிய பிரதமர், தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்கள் தொடங்கி, பனி படர்ந்த மலைகளில் வாழும் மக்கள், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் முதல் பாலைவனத்தில் வசிப்பவர்கள் வரை ஆடைகளில் பன்முகத்தன்மை இருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவின் பல்வேறுபட்ட ஆடைகளை பட்டியலிட்டு தொகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இன்று ‘ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்களின் களஞ்சியம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியாவின் ஜவுளித் தொழில் கடந்த பல நூற்றாண்டுகளைக் கொண்டது என்று குறிப்பிட்ட பிரதமர், சுதந்திரத்திற்குப் பிறகு அதை வலுப்படுத்த உறுதியான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். கதர்துறைகூட கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது என்று அவர் கூறினார். கதர் அணிந்தவர்கள் இழிவாகப் பார்க்கப்பட்டனர். 2014-க்குப் பிறகு, இந்த சூழ்நிலையையும் கதரின் பின்னணியில் உள்ள சிந்தனையையும் மாற்ற அரசு முயற்சித்தது என்று பிரதமர் கூறினார். மனதின் குரல் உரை நிகழ்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் கதர் பொருட்களை வாங்குமாறு மக்களை தாம் வலியுறுத்தியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இதன் விளைவாக கடந்த 9 ஆண்டுகளில் கதர் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கதர் ஆடைகளின் விற்பனை 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், வெளிநாடுகளிலும் அதன் தேவை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமது பாரிஸ் பயணத்தின் போது ஒரு பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை சந்தித்ததையும் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார், அவர் கதர் மற்றும் இந்திய கைத்தறி மீது அதிகரித்து வரும் ஈர்ப்பு குறித்து தம்மிடம் தெரிவித்ததாக பிரதமர் கூறினார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கதர் மற்றும் கிராமத் தொழில்களின் விற்பனை சுமார் 25-30 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது என்று பிரதமர் தெரிவித்தார். ஆனால் தற்போது அது ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது என்று அவர் கூறினார். இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி கிராமங்களில் உள்ள கைத்தறித் துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று நித்தி ஆயோக் அறிக்கையை மேற்கோள் காட்டிய பிரதமர், இதற்கு அதிகரித்து வரும் மக்களின் வருவாய்தான் காரணம் என்று கூறினார். உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிப்போம் என்ற உணர்வோடு மக்கள் முழு மனதுடன் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குகிறார்கள் எனவும் இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். வரவிருக்கும் ரக்ஷா பந்தன், கணேஷ் உத்சவ், தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் சுதேசி தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

ஜவுளித் துறைக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் சமூக நீதிக்கான முக்கிய சாதனமாக மாறி வருவதாக  தெரிவித்த பிரதமர், நாடு முழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். இவர்களில் பெரும்பாலோர் பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், அரசின் முயற்சிகள் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளன என்று கூறினார். மின்சாரம், குடிநீர், எரிவாயு போக்குவரத்து, தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், இதுபோன்ற திட்டங்களால் பின்தங்கிய மக்கள் அதிகபட்ச பலன்களைப் பெற்றுள்ளனர் என்று கூறினார். இலவச உணவுதானியங்கள், பாதுகாப்பான வீடு, ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை- இது இந்த மோடியின் உத்தரவாதம் என்று கூறிய பிரதமர், அடிப்படை வசதிகளுக்காக நெசவாளர் சமூகத்தினர் பல ஆண்டு காலம் காத்திருந்ததற்கு தற்போதைய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று கூறினார்.

 இந்திய ஜவுளித்துறையுடன் தொடர்புடைய மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், உலகை ஈர்க்கவும் அரசு பாடுபடுகிறது என்று பிரதமர் கூறினார். இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் கல்வி, பயிற்சி மற்றும் வருமானம் போன்றவற்றில்  அரசு அக்கறை செலுத்துகிறது என்றும், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் பிரதமர் கூறினார். நெசவாளர்களின் குழந்தைகளுக்கு ஜவுளி நிறுவனங்களில் திறன் பயிற்சி அளிக்க ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட கைத்தறிக் குழுமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். நெசவாளர்களின் பணிகளை எளிதாக்குவதற்கும், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், தரம் மற்றும் வடிவமைப்புகளை மேம்படுத்துவதற்கும் அரசு தொடர்ச்சியான முயற்சிகளை  மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். கணினி மூலம் இயங்கும் பஞ்சிங் மெஷின்கள் வழங்கப்படுவதால், புதிய வடிவமைப்புகளை வேகமாக உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மோட்டார் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் மூலம் வார்ப்புகள் தயாரிப்பதும் எளிதாகி வருகிறது. இதுபோன்ற பல உபகரணங்கள், இதுபோன்ற பல இயந்திரங்கள் நெசவாளர்களுக்கு கிடைக்கின்றன என்று அவர் கூறினார். கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களை சலுகை விலையில் வழங்குவதுடன், மூலப்பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது என்று அவர் தெரிவித்தார். முத்ரா கடன் திட்டத்தைக் குறிப்பிட்ட பிரதமர், நெசவாளர்களுக்கு இப்போது உத்தரவாதம் இல்லாமல் கடன் பெறுவது சாத்தியமாகி உள்ளது என்றார்.

குஜராத் நெசவாளர்களுடனான தனது தொடர்பை நினைவுகூர்ந்த பிரதமர், தமது தொகுதியான காசி பகுதியில் கைத்தறித் தொழிலின் சிறப்புகளை எடுத்துரைத்தார். நெசவாளர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் எதிர்கொள்ளும் விநியோகச்சங்கிலி மற்றும் சந்தைப்படுத்தல் சவால்களை சுட்டிக்காட்டிய அவர், பாரத் மண்டபத்தைப் போலவே நாடு முழுவதும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். இலவச விற்பனை அரங்க வாய்ப்புகள்  வழங்கப்படுகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். குடிசைத் தொழில்கள் மற்றும் கைத்தறி பொருட்களுக்கான தொழில்நுட்ப நடைமுறைகளில் புதுமையைக் கொண்டு வந்த இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களைப் பாராட்டிய பிரதமர், அவற்றுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறினார். 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' என்ற திட்டம் குறித்து பேசிய பிரதமர், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சிறப்பு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்றார். இதுபோன்ற தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக நாட்டின் ரயில் நிலையங்களில் சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். கைத்தறித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மாவட்டத்திலிருந்தும் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை ஒரே குடையின் கீழ் ஊக்குவிக்க மாநிலங்களின் தலைநகரங்களில் அரசால் உருவாக்கப்பட்டு வரும் ஏக்தா மால்  எனப்படும் விற்பனை நிலையங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். ஒற்றுமை சிலையில் உள்ள ஏக்தா மாலையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இது சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவின் ஒற்றுமையை உணரவும், ஒரே குடையின் கீழ் பல்வேறு மாநிலங்களின் பொருட்களை வாங்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

மது வெளிநாட்டுப் பயணங்களின் போது முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கும் பல்வேறு பரிசுகள் குறித்துப் பேசிய பிரதமர், இது அவர்களால் பாராட்டப்படுவது மட்டுமல்லாமல், அதை தயாரிப்பவர்களைப் பற்றி அந்த பிரமுகர்கள் அறியும்போது ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்றார்.

ஜெம் (ஜிஇஎம்)  எனப்படும் அரசு மின் சந்தை இணையதளம் குறித்து பேசிய பிரதமர், மிகச் சிறிய கைவினைஞர்கள் மற்றும்  நெசவாளர்களும், இதில் தங்கள் பொருட்களை நேரடியாக அரசுக்கு விற்க முடியும் என்று கூறினார். கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் தொடர்பான சுமார் 1.75 லட்சம் நிறுவனங்கள் இன்று அரசு மின் சந்தை தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். கைத்தறித் துறையில் உள்ள நமது சகோதர சகோதரிகள் டிஜிட்டல் இந்தியாவின் பயன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார். 

நெசவாளர்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை வழங்குவதற்கான தெளிவான செயல்திட்டத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளின் தயாரிப்புகள் மற்றும் இந்தியாவின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளை உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள பெரிய கடைகள், சில்லறை கள், இணையதள நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களின் தலைவர்களுடன் தாம் நேரடியாக கலந்துரையாடியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அத்தகைய நிறுவனங்கள் இப்போது இந்தியாவின் உள்ளூர் தயாரிப்புகளை உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சிறுதானியங்கள் மற்றும் கைத்தறி தயாரிப்புகளை, இந்த பெரிய சர்வதேச நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளின்  இந்த விநியோகச் சங்கிலி பன்னாட்டு நிறுவனங்களால் பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜவுளித் தொழில் மற்றும் ஆடை வடிமைப்பு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்துப் பேசிய  பிரதமர், உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். நமது சிந்தனை மற்றும் பணிகளின் எல்லையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் கைத்தறி, கதர் மற்றும் ஜவுளித் துறையை உலக அளவில் கொண்டு செல்ல அனைவரின் முயற்சியும் தேவை என்று அவர் குறிப்பிட்டார். ஒரு நெசவாளரோ அல்லது ஒரு வடிவமைப்பாளரோ யாராக இருந்தாலும், ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். நெசவாளர்களின் திறனை தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில்  நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியை  எடுத்துரைத்த பிரதமர், ஒவ்வொரு பொருளுக்கும் பெரிய அளவில்  இளம் நுகர்வோர் வர்க்கம் உருவாக்கப்படுவதாகவும், இது ஜவுளி நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டார். எனவே, உள்ளூர் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதும், அதில் முதலீடு செய்வதும் இந்த நிறுவனங்களின் பொறுப்பாகும் என்று பிரதமர் கூறினார். ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அணுகுமுறைகள் சரியானதல்ல என்று அவர் கூறினார். உள்ளூர் விநியோகச் சங்கிலியில் முதலீடு செய்து எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்தத் துறையில் உள்ள பெரிய நிறுவனங்கள் இவற்றில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எதிர்காலத்தில் நாம் பயன்பெற விரும்பினால், நாம் இன்று உள்ளூர் யில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை நனவாக்குவதற்கும் இதுதான் வழி என்று அவர் கூறினார். இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் சுதேசி கனவு நிறைவேறும் என்று அவர் மேலும் கூறினார். தற்சார்பு  இந்தியா கனவுகளை நெசவாளர்கள் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு  வலுசேர்ப்பவர்கள் கதர் ஆடையை வெறும் ஆடையாக மட்டுமல்லாமல் ஒரு ஆயுதமாகவும் கருதுகிறார்கள் என்று பிரதமர் கூறினார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி குறித்துப் பேசிய பிரதமர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அந்த நாளில் தொடங்கப்பட்டதாகக் கூறினார்.  இந்தியாவின் இந்த மிகப்பெரிய இயக்கத்திற்கு இந்த தேதி ஒரு சான்றாக உள்ளது என்று அவர் கூறினார். அதன் பின்னர், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று பிரதமர் தெரிவித்தார். மன உறுதியுடன் நாடு முன்னோக்கிச் செல்லும்போது காலத்தின் தேவைகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களை வெளியேற்றவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும் தேசம் உறுதிபூண்டபோது  பயன்படுத்தப்பட்ட அதே செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார். ஊழல், பரம்பரை அதிகாரம், பாரபட்சம் ஆகியவை வெளியேற வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குரலில்  ஒலிப்பதாக திரு நரேந்திர மோடி கூறினார். இந்தியாவில் உள்ள இந்த தீமைகள் நாட்டிற்கு ஒரு பெரிய சவாலாகும் என்பதை சுட்டிக் காட்டிய அவர், இந்த தீமைகளை தேசம் தோற்கடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடு வெற்றி பெறும், இந்திய மக்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

பல ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை நெசவு செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண்களுடனான தனது கலந்துரையாடலை பிரதமர் எடுத்துரைத்தார். மூவர்ணக் கொடியை இல்லம்தோறும் ஏற்றி மீண்டும் 'ஹர் கர் திரங்கா' என்ற இல்லம்தோறும் தேசியக் கொடி இயக்கத்தை கொண்டாடுமாறு அவர் மக்களை வலியுறுத்தினார். வீடுகளின் மேற்கூரைகளில் மூவர்ணக் கொடி ஏற்றப்படும்போது, அது நமக்குள்ளும் பறக்கும் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

நாட்டின் வளமான கலை மற்றும் கைவினைக் கலை பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் பிரதமர் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறார். இந்த தொலைநோக்குப் பார்வையால்வழிநடத்தப்படும் அரசு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இந்த தினத்தின் முதல் கொண்டாட்டம் ஆகஸ்ட் 7, 2015 அன்று நடைபெற்றது. 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், உள்நாட்டுத் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காகவும்  இந்த  தேதி  தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு, 9-வது தேசிய கைத்தறி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது, தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனம் (என்ஐ.எஃப்.டி) உருவாக்கிய 'பாரதிய வஸ்திரா ஏவம் ஷில்பா கோஷ் - ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களின் களஞ்சியம்  என்ற தளத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் கதர் நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் துறையினர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் உள்ள கைத்தறிக் குழுமங்கள், தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிறுவன வளாகங்கள், நெசவாளர் சேவை மையங்கள், இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன வளாகங்கள், தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய (கேவிஐசி) நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மாநில கைத்தறித் துறைகளை இந்நிகழ்ச்சி ஒருங்கிணைத்தது.

***

ANU/AP/PLM/AG/KPG

 



(Release ID: 1946466) Visitor Counter : 149