குடியரசுத் தலைவர் செயலகம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர், யானைகளைப் பராமரிப்பவர்களுடன் கலந்துரையாடினார்

Posted On: 05 AUG 2023 7:02PM by PIB Chennai

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றான தெப்பக்காடு யானைகள் முகாமை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (05.08.2023) பார்வையிட்டார். அத்துடன் யானைகளைப் பராமரிப்பவர்களுடன் (MAHOUTS AND CAVADIES) அவர் கலந்துரையாடினார்.

 

அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஆஸ்கர் விருது பெற்ற "எலிஃபெண்ட் விஸ்பரெர்ஸ்" ஆவணப்படத்தின் மூலம் தமிழக வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் யானைகள் பராமரிப்பு மேலாண்மைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரியது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, யானைகளைப் பாதுகாப்பது நமது  பொறுப்பு என்று அவர் கூறினார். ஆசியாவில் யானைகள் பாதுகாப்பில் முன்னோடியாகத் திகழும் வகையில் தெப்பக்காடு யானைகள் முகாமில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் அமைக்கப்படுவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். எனவே, அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்வதும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதும் மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். தெப்பக்காடு யானைகள் முகாமை நிர்வகிப்பதற்கு, பெட்டக்குறும்பர், காட்டுநாயக்கர் மற்றும் மலசர் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவம் பயன்படுத்தப்படுவதைக் கண்டு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்தார்.

***

SM/PLM/DL



(Release ID: 1946089) Visitor Counter : 168