உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, ஒடிசாவின் புவனேஸ்வரில் இன்று, காமாக்யாநகர்-துபூரி அகலப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, மற்றொரு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்
நாட்டின் வளர்ச்சி நெடுஞ்சாலைகளுடன் தொடர்புடையது - பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
05 AUG 2023 4:08PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, ரூ.761 கோடி செலவில் 4 வழிப்பாதையாக அகலப்படுத்தப்பட்ட காமாக்யாநகர்-துபூரி பிரிவை ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மோடார் முதல் பானேர் வரையிலான சாலையை ரூ. 34 கோடி செலவில் அகலப்படுத்தும் பணிகளுக்கும் அவர் இன்று அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி 370 வது பிரிவை ரத்து செய்து ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார் என்று கூறினார். அதனால் இன்று காஷ்மீர் பிரதான நீரோட்டத்தில் இணைந்தது மட்டுமல்லாமல், அங்கு அமைதியுடன் கூடிய வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஒடிசாவின் கனிம வளம் நிறைந்த அங்குல் மற்றும் தேன்கனல் மாவட்டங்களை தேசிய நெடுஞ்சாலை மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுடனும் நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைப்பதில் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை முக்கியமானதாக இருக்கும் என்றார். நாட்டின் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் நெடுஞ்சாலைகளுடன் இணைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டிற்காக அதிக பணிகளைச் செய்துள்ளார் என்று திரு. அமித் ஷா கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். ஒரு காலத்தில் இந்த பகுதி நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது என்று அவர் தெரிவித்தார். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து வெற்றிகரமாக அதை முறியடிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதனால் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் இயற்கை பேரிடரால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய மாநிலம் என்று திரு அமித் ஷா கூறினார். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 1999-ல் ஒடிசாவைத் தாக்கிய புயலின்போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் எனவும் ஆனால் தற்போது ஒடிசாவை புயல் தாக்கும் போதெல்லாம் உயிரிழப்புகள் ஏற்படுவது இல்லை என்றும் அவர் கூறினார். இது உலகம் முழுவதும் பாராட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு. நரேந்திர மோடி பேரிடர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் இதற்கு ஒடிசா அரசு முழு ஆதரவை வழங்கியுள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஒடிசா முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
SM/PLM/DL
(Release ID: 1946051)
Visitor Counter : 162