பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்

Posted On: 29 JUL 2023 2:11PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகாக்கள் தர்மேந்திர பிரதான் அவர்களே, அன்னபூர்ணா தேவி அவர்களே, ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்களே, சுபாஷ் சர்க்கார் அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மதிப்பிற்குரிய அறிவுஜீவிகள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து எனது அன்பான மாணவர் நண்பர்களே!

நாட்டை வெற்றி பெறச் செய்யவும், நாட்டின் தலையெழுத்தை மாற்றவும் கல்விக்கு தான் அதிக சக்தி உள்ளது. தனது இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் 21 ஆம் நூற்றாண்டில், நமது கல்வி முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அறிவுக்கு விவாதம் அவசியம், கல்விக்கு உரையாடல் அவசியம் என்று நான் நம்புகிறேன். அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் இந்த அமர்வின் மூலம் நமது சிந்தனை மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, காசியில் புதிதாக கட்டப்பட்ட ருத்ராக்ஷ் ஆடிட்டோரியத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. இந்த முறை, தில்லியில் புதிதாக கட்டப்பட்ட இந்த பாரத மண்டபத்தில் இந்த சமகம் நடக்கிறது. பாரத மண்டபத்தின் முறையான திறப்பு விழாவுக்குப் பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது என்பதும்,  முதல் நிகழ்ச்சி கல்வி தொடர்பானது என்பதும்  கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.

நண்பர்களே,

காசி ருத்ராட்சம் முதல் இந்த நவீன பாரத மண்டபம் வரை, அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் பயணம் ஒரு செய்தியைக் கொண்டுள்ளது. தொன்மையும், நவீனமும் சங்கமிக்கும் செய்தி இது! ஒருபுறம், நமது கல்வி முறை இந்தியாவின் பண்டைய மரபுகளைப் பாதுகாத்து வருகிறது, மறுபுறம், நவீன அறிவியல் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறையிலும் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். இந்நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காகவும், கல்வி முறைக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் இந்த சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு வருவதற்கு முன்பு, அருகிலுள்ள அரங்கில்  அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இக்கண்காட்சி நமது திறன்கள் மற்றும் கல்வித் துறையின் வலிமையையும் அதன் சாதனைகளையும் வெளிப்படுத்துகிறது. புதிய மற்றும் புதுமையான முறைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொதுமக்களும், மாணவர்களும் இப்போது புதிய முறையை நன்கு அறிந்துள்ளனர். 'டென் ப்ளஸ் டூ' கல்வி முறைக்கு மாற்றாக, 'ஃபைவ் ப்ளஸ் 3 - பிளஸ் 3 பிளஸ் 4' முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி இப்போது மூன்று வயதிலிருந்து தொடங்கும். இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான நிலை ஏற்படும்.

நண்பர்களே,

இளைஞர்களை அவர்களின் திறமைக்கு பதிலாக அவர்களின் மொழியின் அடிப்படையில் மதிப்பிடுவது மிகப்பெரிய அநீதியாகும். தாய்மொழியில் கல்வி கற்பது இந்தியாவின் திறமையான இளைஞர்களுக்கு உண்மையான நீதியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது சமூக நீதியை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். உலகில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு மொழிகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்கள் தாய்மொழிகளை ஊக்குவிப்பதன் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இவ்வளவு வளமான மொழிகள் இருந்தபோதிலும், நமது மொழிகளை பின்தங்கியவையாக நாம் சித்தரித்துள்ளோம். இதைவிட வேறு என்ன துரதிர்ஷ்டம் இருக்க முடியும்? ஒருவர் எவ்வளவு புதுமையானவராகவும், திறமைசாலியாகவும் இருந்தாலும், அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், அவர்களின் திறமை எளிதில் அங்கீகரிக்கப்படுவதில்லை. இதில் மிகப் பெரிய இழப்பை நமது கிராமப்புறங்களைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய குழந்தைகள் சந்தித்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்த தாழ்வு மனப்பான்மையை அகற்ற நம் நாடு முன்முயற்சி எடுத்துள்ளது.

இனி, சமூக அறிவியல் முதல் பொறியியல் வரையிலான கல்வியும் இந்திய மொழிகளில் நடத்தப்படும். இளைஞர்கள் தங்கள் மொழியின் மீது நம்பிக்கை வைத்தால், அவர்களின் திறமைகள் வெளிப்படையாக முன்னணிக்கு வரும். மேலும், நாட்டிற்கு மற்றொரு நன்மையும் இருக்கும். அரசியல் நோக்கங்களுக்காக மொழியைப் பயன்படுத்தி வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு முடிவு கட்டப்படும்.  தேசிய கல்விக் கொள்கை மூலம், நாட்டின் ஒவ்வொரு மொழிக்கும் மதிப்பும், ஊக்கமும் கிடைக்கும்.

நண்பர்களே,

தரமான கல்வி உலகில் பல அளவுருக்கள் உள்ளன, ஆனால், இந்தியாவைப் பற்றி பேசும்போது, நமது முதன்மை குறிக்கோள் சமத்துவம்! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் சமமான கல்வியையும், சம வாய்ப்புகளையும் பெறுவதை உறுதி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் முன்னுரிமையாகும். இருப்பினும், சமமான கல்வி மற்றும் சம வாய்ப்புகளை அடைவது என்பது பள்ளிகளைத் திறப்பது மட்டுமல்ல. அதாவது கல்வியுடன் வளங்களுக்கும் சமமான அணுகலை வழங்குவதாகும். சமமான கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் புரிதல் மற்றும் தேர்வுகளின் அடிப்படையில் விருப்பங்களைப் பெறுவதை உறுதி செய்வதாகும். சமச்சீர் கல்வி என்பது குழந்தைகள் தங்கள் இடம், சாதி அல்லது பிராந்தியத்தின் காரணமாக கல்வியை இழக்கக்கூடாது என்பதாகும்.

அதனால்தான் கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என அனைத்துத் தரப்பினரும் சம வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் தொலைநோக்கு மற்றும் தேசத்தின் முயற்சியாகும். தொலைதூரப் பகுதிகளில் தரமான பள்ளிகள் இல்லாததால் பல குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற முடியாத ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் பி.எம்-ஸ்ரீ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. '5ஜி' யுகத்தில், இந்த நவீன உயர் தொழில்நுட்ப பள்ளிகள் இந்திய மாணவர்களுக்கு சமகால கல்விக்கான ஊடகமாக செயல்படும்.

உங்கள் முயற்சிகள் ஒரு புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் மற்றும் நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும். 2047 ஆம் ஆண்டில், நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் கொண்டாடும் போது, இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான நமது கனவும் தீர்மானமும் நிறைவேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த காலகட்டம் இன்று உங்களிடமிருந்து பயிற்சி பெறும் இளைஞர்களின் கைகளில் உள்ளது. உங்களால் ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்கள், நாளை நாட்டைத் தயார் செய்பவர்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கனவை நனவாக்கும் உறுதியுடனும், அந்த தீர்மானத்தை நனவாக்கும் அர்ப்பணிப்புடனும், வெற்றியை அடையவும் இளைஞர்கள் அனைவரும் முன்னேற வேண்டும்.  

=----

ANU/SM/PKV/KPG

 


(Release ID: 1945776) Visitor Counter : 115