பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
கிராம ஊராட்சிகள் டிஜிட்டல் மயமாக்கல்
Posted On:
02 AUG 2023 3:27PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், ஊராட்சிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஊராட்சிகளின் செயல்பாடுகளை சீரமைத்து, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். திட்டமிடல், கணக்கியல் மற்றும் வரவு செலவுத் திட்டம் போன்ற ஊராட்சிப் பணிகளை எளிமைப்படுத்த அமைச்சகம் இ-கிராம் ஸ்வராஜ் என்ற கணக்கியல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்க பாரத்நெட் திட்டத்தை தொலைத்தொடர்புத் துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு லட்சம் கிராம ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தின் முதல் கட்டம் 2017 டிசம்பரில் நிறைவடைந்தது. பாரத்நெட்டின் முதல் கட்டத்தின் கீழ், 1.23 லட்சம் ஊராட்சிகளில், சுமார் 1.22 லட்சம் ஊராட்சிகள் சேவைக்கு தயாராக உள்ளன. மீதமுள்ள ஊராட்சிகளை இணைக்கும் வகையில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரத்நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1.44 லட்சம் கிராம ஊராட்சிகளில் 77,000 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் சேவைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஊரக வளர்ச்சி முகமைகளை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை ஊக்குவித்தல், ஊராட்சிகளின் திறன் மேம்பாட்டிற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், நிதிநிலை அறிக்கை, கணக்கியல் மற்றும் தணிக்கை முறைகளை வலுப்படுத்துதல், ஊராட்சிகளின் பங்கேற்பு கிராம ஊராட்சி மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதில் மாநிலங்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஸ்வர் பாட்டீல் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
***
ANU/AP/PKV/AG/KPG
(Release ID: 1945164)
Visitor Counter : 168