பிரதமர் அலுவலகம்
மகளிர் அதிகாரமளித்தல் தொடர்பான ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் உரை
"பெண்கள் முன்னேறினால் உலகமும் முன்னேறும்"
"இந்தியாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.4 மில்லியன் பிரதிநிதிகளில் 46% பெண்கள்"
"இந்தியாவில் உள்ள பெண்கள் - சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையான மிஷன் லைஃப் இயக்கத்தின் விளம்பரத் தூதர்களாக உள்ளனர்"
"இயற்கையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள பெண்கள், பருவநிலை மாற்றத்திற்கான புதுமையான தீர்வுகளைக் காணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்"
"சந்தைகள், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள், நிதி பெறுதல் ஆகியவற்றிற்கான பெண்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் தடைகளை அகற்ற நாம் பாடுபடவேண்டும்"
"இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ், 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' குறித்த ஒரு புதிய பணிக்குழுவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது
Posted On:
02 AUG 2023 12:14PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மகாத்மா காந்தியின் பெயரிடப்பட்ட நகரமான காந்திநகருக்கு அதன் நிறுவன தினத்தை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களை வரவேற்றார், மேலும் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தைப் பார்வையிடும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகளுக்கு அவசரமான மற்றும் நிலையான தீர்வுகளைக் காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், காந்திஜியின் வாழ்க்கை முறையின் எளிமையையும், நிலைத்தன்மை, தற்சார்பு மற்றும் சமத்துவம் குறித்த அவரது தொலைநோக்கு சிந்தனைகளையும் காந்தி ஆசிரமத்தில் நேரடியாகக் காணலாம் என்று கூறினார். பிரமுகர்களுக்கு இது உத்வேகம் அளிக்கும் என்று திரு. மோடி நம்பிக்கை தெரிவித்தார். தண்டி குதீர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டதை நினைவுகூர்ந்த அவர், காந்திஜியின் புகழ்பெற்ற ராட்டையை, அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கங்காபென் என்ற பெண் கண்டுபிடித்ததை சுட்டிக்காட்டினார். அப்போதிருந்து, காந்திஜி கதர் அணியத் தொடங்கியதாக கூறிய பிரதமர், இது தற்சார்பு மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக மாறியது என்று தெரிவித்தார்.
"பெண்கள் முன்னேறும்போது, உலகமும் முன்னேறும்" என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் பொருளாதார மேம்பாடு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும், கல்விக்கான அணுகல் உலகளாவிய முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது என்றும் குறிப்பிட்டார். அவர்களின் தலைமைத்துவம் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதுடன், அவர்களின் குரல்கள் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மிகவும் பயனுள்ள வழி பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அணுகுமுறையாகும் என்றும், இந்தத் திசையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஒரு உத்வேகமூட்டும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்று பிரதமர் தெரிவித்தார். அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழிநடத்துவதாகவும், சாதாரண பழங்குடி பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், உலகின் இரண்டாவது பெரிய பாதுகாப்புப் படையின் தலைவராக (கமாண்டராக) பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் தாயகமாகத் திகழும் இந்த நாட்டில், இந்திய அரசமைப்புச் சட்டம் தொடக்கத்திலிருந்தே பெண்கள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் சமமாக 'வாக்களிக்கும் உரிமை'யை வழங்கியுள்ளது என்றும், சமத்துவத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றத்தின் முக்கிய முகவர்களாக உள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.4 மில்லியன் பிரதிநிதிகளில் 46% பேர் பெண்கள் என்று கூறினார். சுய உதவிக் குழுக்களாக பெண்களை அணிதிரட்டுவதும் மாற்றத்திற்கான ஒரு சக்தி ஆகும் என்று கூறிய பிரதமர், பெருந்தொற்றின்போது சுய உதவிக் குழுவில் இடம் பெற்ற பெண்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளும் நமது சமூகங்களுக்கு ஆதரவு தூண்களாக விளங்கியதை சுட்டிக்காட்டினார். அவர்களின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், முகக்கவசங்கள், சானிடைசர்கள் தயாரித்தல், தொற்றுநோயைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். "இந்தியாவில் உள்ள செவிலியர்கள் மற்றும் தாதியர்களில் 80% க்கும் அதிகமானோர் பெண்கள். தொற்றுநோய்களின் போது அவர்கள் நமது முதல் பாதுகாப்பு கவசமாக இருந்தனர். மேலும், அவர்களின் சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்", என்று அவர் மேலும் கூறினார்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அரசின் முக்கிய முன்னுரிமை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் குறு அளவிலான அலகுகளை ஆதரிப்பதற்காக ஒரு மில்லியன் ரூபாய் வரையிலான கடன்களில் சுமார் 70% பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதேபோல், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், கிரீன் ஃபீல்டு வங்கிக்கடன்களை பெற்றவர்களில் 80% பயனாளிகள் பெண்கள் ஆவர். சுத்தமான சமையல் எரிவாயு பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தை எடுத்துரைத்தார். கிராமப்புற பெண்களுக்கு கிட்டத்தட்ட 100 மில்லியன் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 2014 முதல் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொழில்நுட்ப கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், இந்தியாவில் ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 43 சதவீதம் பேர் பெண்கள் என்றும், இந்தியாவில் விண்வெளி விஞ்ஞானிகளில் நான்கில் ஒரு பகுதியினர் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார். "சந்திரயான், ககன்யான் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கான பயணம் போன்ற நமது முதன்மை திட்டங்களின் வெற்றிக்குப் பின்னால் இந்த பெண் விஞ்ஞானிகளின் திறமையும், கடின உழைப்பும் உள்ளது" என்று அவர் கூறினார். இன்று, இந்தியாவில் ஆண்களை விட அதிகமான பெண்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள் என்று பிரதமர் கூறினார். சிவில் விமானப் போக்குவரத்தில் அதிக சதவீத பெண் விமானிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், அதே நேரத்தில் இந்திய விமானப்படையில் பெண் விமானிகளும் போர் விமானங்களை இயக்குகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நமது அனைத்து ஆயுதப் படைகளிலும், பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று திரு. மோடி குறிப்பிட்டார்.
கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் முதுகெலும்பாகவும், சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களாகவும் பெண்கள் வகிக்கும் முக்கியப்பங்கை பிரதமர் எடுத்துரைத்தார். இயற்கையுடனான அவர்களின் நெருங்கிய தொடர்பை சுட்டிக்காட்டிய பிரதமர், பருவநிலை மாற்றத்திற்கான புதுமையான தீர்வுகளை காண்பதில் பெண்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர் என்று கூறினார். 18 ஆம் நூற்றாண்டில் அம்ரிதா தேவி தலைமையிலான ராஜஸ்தானின் பிஷ்னோய் சமூகம் கட்டுப்பாடற்ற மரம் வெட்டுவதைத் தடுக்க 'சிப்கோ இயக்கத்தை' தொடங்கியபோது இந்தியாவில் முதல் முக்கிய பருவநிலை நடவடிக்கைக்கு பெண்கள் எவ்வாறு தலைமை தாங்கினர் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். மேலும் பல கிராமவாசிகளுடன் சேர்ந்து இயற்கைக்காக தனது இன்னுயிரை அவர் தியாகம் செய்ததாக பிரதமர் தெரிவித்தார். "இந்தியாவில் உள்ள பெண்கள் 'மிஷன் லைஃப் - சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை'க்கான விளம்பரத் தூதர்களாகவும் உள்ளனர்", என்று கூறிய பிரதமர், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றுக்கான அவர்களின் பாரம்பரிய அறிவை எடுத்துரைத்தார். பல்வேறு முன்முயற்சிகளின் கீழ், சூரியசக்தி தகடுகள் மற்றும் விளக்குகள் தயாரிப்பதில் பெண்கள் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர் என்று பிரதமர் கூறினார். இந்த விஷயத்தில் உலகளாவிய தெற்கு நாடுகளின் கூட்டான்மையுடன் ஒத்துழைப்பதில் பெற்ற வெற்றியை அவர் குறிப்பிட்டார்.
"உலகப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களாக உள்ளனர்" என்று கூறிய பிரதமர், இந்தியாவில் பெண் தொழில்முனைவோரின் பங்கை விளக்கினார். பல தசாப்தங்களுக்கு முன்பு, 1959 ஆம் ஆண்டில், மும்பையில் ஏழு குஜராத்தி பெண்கள் ஒன்றிணைந்து ஸ்ரீ மகிளா கிரிஹ் உத்யோக் என்ற ஒரு வரலாற்று கூட்டுறவு இயக்கத்தை உருவாக்கினர். இது கோடிக் கணக்கான பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அவர்களின் மிகவும் பிரபலமான தயாரிப்பான லிஜ்ஜத் அப்பளத்தை அவர் சுட்டிக்காட்டினார். இது அநேகமாக குஜராத்தின் உணவு மெனுக்களில் இருப்பதை அவர் எடுத்துரைத்தார். பால்வளத் துறையை உதாரணமாகக் கூறிய அவர், குஜராத்தில் மட்டும் இத்துறையில் 3.6 மில்லியன் பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்தியாவில், சுமார் 15% யூனிகார்ன் ஸ்டார்ட்-அப்கள் குறைந்தது ஒரு பெண் நிறுவனரைக் கொண்டுள்ளன என்றும், இந்த பெண்கள் தலைமையிலான யூனிகார்ன்களின் ஒட்டுமொத்த மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்றும் திரு மோடி சுட்டிக்காட்டினார். பெண் சாதனையாளர்களைக் கொண்ட ஒரு நிலையான தளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். சந்தைகள், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள், நிதி பெறுதல் ஆகியவற்றிற்கான பெண்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் தடைகளை அகற்ற நாம் பாடுபடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் சுமைகள் ஒரே நேரத்தில் பொருத்தமாக நிவர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
மகளிர் தொழில்முனைவு, தலைமைத்துவம் மற்றும் கல்வி குறித்த அமைச்சர்கள் மாநாட்டின் கவனத்தைப் பாராட்டியதோடு, பெண்களுக்கான டிஜிட்டல் மற்றும் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்காக 'டெக்-ஈக்விட்டி பிளாட்ஃபார்ம்' தொடங்கப்பட்டதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ், 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' குறித்த ஒரு புதிய பணிக்குழு நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். காந்திநகரில் மேற்கொள்ளப்படும் அயராத முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மகத்தான நம்பிக்கையை அளிக்கும் என்று கூறிய பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
***
ANU/AD/PKV/AG/KPG
(Release ID: 1944975)
Visitor Counter : 448
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada