அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட , இந்தியாவின் முதலாவது குறைந்த விலையிலான , இலகுரக, அதிவேக, உயர் புல (1.5 டெஸ்லா), அடுத்த தலைமுறை காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேனரை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் அறிமுகப்படுத்தினார்.

Posted On: 01 AUG 2023 4:58PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதலாவது குறைந்த விலையிலான, இலகுரக, அதிவேக , உயர் புல (1.5 டெஸ்லா), அடுத்த தலைமுறை காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேனரை  இன்று புதுதில்லியில் அறிமுகப்படுத்தினார்.

உள்நாட்டு எம்ஆர்ஐ ஸ்கேனர் கிடைப்பதால்,  சாமானிய மக்களுக்கு இதற்கான செலவு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மேலும், சர்வதேச சந்தையிலிருந்து  எம்ஆர்ஐ ஸ்கேனர்களை வாங்குவதற்கான மூலதன முதலீடு கணிசமாகக் குறைக்கப்படும். இது அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும் என்று  அவர் குறிப்பிட்டார்.

உலகத் தரம் வாய்ந்த எம்.ஆர்.ஐ.யை உருவாக்க செலவிடப்பட்ட ரூ.17 கோடியில் ரூ.12 கோடி பி.ஐ.ஆர்.ஏ.சி-யின் டி.பி.டி மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

உலக மக்கள்தொகையில் 70% பேர் காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) கண்டறியும் முறையை அரிதாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை  டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் போன்ற பிற இமேஜிங் முறைகளை ஒப்பிடும்போது, எம்.ஆர்.ஐ ஸ்கேனர்களுக்கான அணுகல் குறைவாக இருப்பதற்கு  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிலவும் அதிக மூலதனச் செலவுகள்தான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே உள்ள இயந்திரங்களுடன் ஒப்பிடும்போது மலிவு விலையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் எம்ஆர்ஐ ஸ்கேனரை வழங்குவதன் மூலம் இந்தியா இந்த சிக்கல்களில் பலவற்றுக்குத் தீர்வு காணும் என்று அமைச்சர் கூறினார். குறைந்த செலவிலான மற்றும் நம்பகமான மருத்துவ இமேஜிங் தீர்வுகளை அணுக உதவும் வகையில் இந்த வெற்றியை வளரும் நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது என்று அவர் கூறினார்.

உயிரித் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

<><><><><>

(Release ID : 1944717)

ANU/AP/SMB/KRS


(Release ID: 1944822) Visitor Counter : 184