பிரதமர் அலுவலகம்
ஆகஸ்ட் 1-ம் தேதி புனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
புனே மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிகள் நிறைசெய்யப்பட்ட பகுதிகளில், மெட்ரோ ரயில்களை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளைப் பயனாளிகளுக்கு ஒப்படைத்து புதிய வீடுகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
கழிவுகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
பிரதமருக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது
Posted On:
30 JUL 2023 12:37PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் 1 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில் தக்துஷேத் மந்திரில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்கிறார். காலை 11.45 மணிக்கு அவருக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், மதியம், 12:45 மணிக்கு, மெட்ரோ ரயில்களை கொடியசைத்து துவக்கி வைத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் பணிகள் முடிக்கப்பட்ட பிரிவுகளில் சேவைகளைத் தொடங்கி வைக்கும் வகையில் மெட்ரோ ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பிரிவுகள் புகேவாடி நிலையத்திலிருந்து சிவில் நீதிமன்றம் ரயில் நிலையம் வரையிலும் கார்வேர் கல்லூரி ரயில் நிலையம் முதல் ரூபி ஹால் கிளினிக் ரயில் நிலையம் வரையும் இயக்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு 2016-ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். புதிய பிரிவுகள் புனே நகரின் முக்கிய இடங்களான சிவாஜி நகர், சிவில் நீதிமன்றம், புனே மாநகராட்சி அலுவலகம், புனே ஆர்டிஓ அலுவலகம் மற்றும் புனே ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும். நாடு முழுவதும் நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவான நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளை மக்களுக்கு வழங்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதன் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக இந்த மெட்ரோ தொடக்க விழா அமைந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் உள்ள சில மெட்ரோ நிலையங்களின் வடிவமைப்பு சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை முறைகளில் இருந்து உத்வேகம் பெற்றதாக அமைந்துள்ளது. சத்ரபதி சம்பாஜி உத்யான் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டெக்கான் ஜிம்கானா மெட்ரோ நிலையங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் படை வீரர்கள் அணியும் தலைக்கவசம் போன்ற ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இது "மாவாலா பகாடி" என்றும் அழைக்கப்படுகிறது. சிவாஜி நகர் சுரங்க மெட்ரோ நிலையம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது சத்ரபதி சிவாஜி மகாராஜால் கட்டப்பட்ட கோட்டைகளை நினைவூட்டுகிறது.
மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், சிவில் நீதிமன்றம் மெட்ரோ நிலையம் நாட்டின் ஆழமான மெட்ரோ நிலையங்களில் ஒன்றாகும். இது 33.1 மீ ஆழத்தைக் கொண்டுள்ளது. நடைமேடையில் நேரடியாக சூரிய ஒளி விழும் வகையில் நிலைய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியால் (பி.சி.எம்.சி) அமைக்கப்பட்டுள்ள கழிவுகளிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலையை பிரதமர் திறந்து வைக்கிறார். சுமார் ரூ. 300 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்.
அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியால் (பி.சி.எம்.சி.) கட்டப்பட்ட 1280 க்கும் மேற்பட்ட வீடுகளை ஒப்படைக்கிறார். புனே மாநகராட்சியால் கட்டப்பட்ட 2650-க்கும் மேற்பட்ட பிரதமரின் வீட்டு வசதித் திட்ட வீடுகளையும் பயனாளிகளிடம் அவர் ஒப்படைக்கிறார். மேலும், பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியால் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியால் கட்டப்படவுள்ள சுமார் 1190 பிரதமரின் வீட்டு வசதித் திட்ட வீடுகளுக்கும், புனே பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்படும் 6400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமருக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது ஆகஸ்ட் 1 அன்று வழங்கப்படுகிறது. லோக்மான்ய திலகரின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்பவர்களைக் கௌரவிக்கும் வகையில் 1983 ஆம் ஆண்டில் திலக் நினைவு மந்திர் அறக்கட்டளையால் இந்த விருது உருவாக்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்களுக்கு, அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி லோக்மான்ய திலகரின் நினைவு நாளில் வழங்கப்படுகிறது.
இந்த விருதைப் பெறும் 41-வது நபர் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார். டாக்டர் சங்கர் தயாள் சர்மா, பிரணாப் முகர்ஜி, அடல் பிகாரி வாஜ்பாய், இந்திரா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங், என்.ஆர்.நாராயண மூர்த்தி, டாக்டர் இ. ஸ்ரீதரன் போன்ற பல்வேறு சிறந்த ஆளுமைகளுக்கு இந்த விருது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
***
AP/PLM/DL
(Release ID: 1944135)
Visitor Counter : 191
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam