சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியான நடவடிக்கைகளை வழிநடத்த ஜி20 உறுப்பு நாடுகள் மகத்தான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன” - மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

Posted On: 28 JUL 2023 10:27AM by PIB Chennai

“முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் நிலையான, நெகிழ்தன்மை வாய்ந்த மற்றும் சமமான எதிர்காலத்திற்கான உலகளாவிய முயற்சிகளை வழிநடத்த ஜி20 உறுப்பு நாடுகள் மகத்தான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன” என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறினார்.

சென்னையில் இன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், உறுப்பு நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் முன்னோக்குகள் வேறுபட்டிருந்தாலும், ஜி20 அமைப்பு  பூமி மீது கொண்டுள்ள பொதுவான அக்கறையால் ஒன்றிணைந்துள்ளதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் பகிர்ந்து கொள்கிறது என்றார்.

 

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆற்றிய முழுமையான துவக்க உரை பின்வருமாறு:

மேதகு தலைவர்களே,

• இந்திய தலைமைத்துவத்தின் கீழ் ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்திற்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் துடிப்பான சென்னை நகருக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

 

• சென்னை ஒரு நகரம் அல்ல, ஒரு உணர்வு. இந்தியா பெருமிதம் கொள்ளும் நகரம், இது. அதற்கு ஒரு காரணம் இல்லாமல் இல்லை. இது, திறமை, வண்ணம், படைப்பாற்றல் மற்றும் வரலாறு ஆகியவற்றின் இடமாகும். வரலாறு தவிர, சுவையான உணவு, இசை, நடனம் மற்றும் திரைப்படம் ஆகியவற்றை சென்னை வழங்குகிறது. நீங்கள் இப்போது இருக்கும் நகரம் கல்வி, மருத்துவம், கனரக பொறியியல், வாகனங்கள், தோல் பொருட்கள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றின் மையமாக உள்ளது.

• சென்னை, பழமையையும் புதுமையையும் இலகுவாக இணைப்பதோடு, வாழ்வு ஆற்றல் மற்றும் வாய்ப்புகளுக்கு வலிமை சேர்க்கிறது. முதல் நகர்ப்புற மாநகராட்சி இங்கு உருவானது.

 

• சென்னையை உள்ளடக்கிய தமிழ்நாடு மாநிலம், ஒரு பெரிய கடல் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து, சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப திட்டமிட்ட வளர்ச்சியில் கோலோச்சிய சோழ மன்னர்களின் நிலமாகும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள், நீரோட்டத்தை சேமிக்கவும், ஒழுங்குபடுத்தவும் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

• மாநிலத்தின் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் வளமான கடலோர மற்றும் கடல்சார் வளங்கள், நிலையான வளர்ச்சி அணுகுமுறைக்கு சான்றாக உள்ளன.

மேதகு தலைவர்களே,

• சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், உறுதியான நடவடிக்கைகள் மூலம் நிலையான, நெகிழ்தன்மை வாய்ந்த மற்றும் சமத்துவமான எதிர்காலத்திற்கான உலகளாவிய முயற்சிகளை வழிநடத்துவதற்கான மகத்தான பொறுப்பை நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம்.

• மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் எழுச்சியூட்டும் உரைக்கும், நிலையான உலகத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கும்  நன்றி கூறுகிறேன்.

மேதகு தலைவர்களே,

• நமது 20 நாடுகளின் குழு, வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த காரணத்திற்காக, நமது வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் இலக்குகள் வேறுபடலாம். இருப்பினும், இந்த பூமி மீதான நமது பொதுவான அக்கறையால் நாம் ஒன்றிணைந்துள்ளோம், மேலும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் பகிர்ந்து கொள்கிறோம்.

• எல்லாவற்றிற்கும் மேலாக, நாம்  அனைவரும் ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கூற்றுக்கு இணங்க அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, நிலையான மற்றும் நெகிழ்தன்மை வாய்ந்த உலகின் பொதுவான பார்வைக்காக நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

• 2022-ஆம் ஆண்டில் இந்தோனேசிய பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தில், வளங்களின் சமமான பகிர்வுடன் பணிகள், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையின் முக்கியத்துவத்தை நாம் உறுதிப்படுத்தினோம்.

• இப்போது, முக்கியத்துவம் வாய்ந்த பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதில் உலகளாவிய முயற்சிகளை எவ்வாறு வழிநடத்தலாம் என்பது குறித்த நமது ஒருங்கிணைந்த புரிதலை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

மேதகு தலைவர்களே,

• 2023-ஆம் ஆண்டில் பல புதிய மற்றும் முக்கியமான கருப்பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை விவாதங்களுக்கு நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

 

• ஜி20 மன்றத்தில் முதல் முறையாக, காட்டுத் தீ மற்றும் சுரங்கம் தோண்டப்பட்ட பகுதிகள் ஆகிய பிரச்சனைகளை முன்னுரிமை அடிப்படையில் ஆராய்ந்துள்ளோம். அவற்றை மீட்டெடுப்பதற்கான எங்கள் அனுபவங்களும் சிறந்த நடைமுறைகளும் தலைமைத்துவ ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இவை நில சீரழிவு நடுநிலைமைக்கான எங்கள் இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பயனுள்ளதாகவும் இருக்கும்.

• ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை பிரச்சனை பற்றி நாங்கள் ஆலோசித்திருப்பதோடு,  ஜி20 அமைப்பின் சிறந்த நடைமுறைகளை, ஒரு பயனுள்ள ஆதாரமாக இருக்கக்கூடிய தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

 

• கடல்சார்ந்த துறையில்,  நிலையான மற்றும் நெகிழ்வான கடல்சார் பொருளாதாரத்தை வளர்ப்பது தொடர்பான சவால்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். ஓஷன் 20 நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பை நாங்கள் ஏற்பாடு செய்து, கடலோர மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல், கடல் சார்ந்த திட்டமிடலை மேம்படுத்துதல், கடல்சார் கழிவுகளுக்கு எதிராக போராடுதல் மற்றும் நிதி மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம்.

• 'கடல் நெகிழிக் குப்பைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஜி20 அறிக்கையின்’ ஐந்தாவது பதிப்பை வெளியிடவும் நாங்கள் ஜப்பானுடன் இணைந்து பணியாற்றினோம். பல ஜி20 நாடுகளில் ஒரு மெகா கடற்கரை தூய்மைப்பணி நிகழ்வை ஏற்பாடு செய்து, கடல் குப்பைகளின் பரவலான பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்க்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்தோம்.

• நிலையான வாழ்க்கைமுறைகளை ஆதரிக்கும் மற்றும் நடத்தை மாற்றத்தின் சக்தியை அங்கீகரிக்கும் பூமிக்கு ஏதுவான மக்களின் வெகுஜன இயக்கத்தை எவ்வாறு கட்டமைக்க முடியும் என்பதைக் காட்டிய இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து ஜி20 மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நிலையான வளர்ச்சிக்கான வாழ்க்கைமுறை பற்றிய விரிவான கொள்கைகளின் தொகுப்பை மேம்பாட்டு அமைச்சர்கள் வாயிலாக ஜி20 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 

• ‘நிலையான மற்றும் நெகிழ்திறன் கொண்ட கடல் அடிப்படையிலான பொருளாதாரத்திற்கான ஜி20 உயர் மட்டக் கோட்பாடுகளை' உருவாக்குவதில் நாங்கள் பணியாற்றியுள்ளோம். இந்தக் கோட்பாடுகளை, கடல்சார் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதற்கான ஒரு கட்டமைப்பாக தன்னார்வ அடிப்படையில் பயன்படுத்தப்படலாம். உலகளாவிய பெருங்கடல், கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆதாரமாக உள்ளது.

• கடலோர நாடுகளான அனைத்து ஜி20 உறுப்பு நாடுகளும் கடலோர மற்றும் கடல்சார் வளங்களைப் பாதுகாத்து, அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்தும் தீவிர பொறுப்பைக் கொண்டுள்ளன.

 

• எஃகு போன்ற துறைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புடைமை (ஈ.பி.ஆர்) போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய வளங்களின் செயல்திறன் மற்றும் சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பல தொழில்துறை கூட்டாளிகளுடன்  ஆதார வளங்களின் செயல்திறன் மற்றும் சுழற்சி பொருளாதாரத்திற்கானகூட்டணியை (RECEIC) நேற்று தொடங்கியதில் எங்களது முயற்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்தன.

மேதகு தலைவர்களே,

• உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடு மற்றும் துடிப்பான வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற முறையில், ஜி20 உடன் இணைந்து பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வழிநடத்த இந்தியா விரும்புகிறது.

• உலகளாவிய ஒட்டுமொத்த வெளியீடுகளில் இந்தியாவின் பங்களிப்பு 4%க்கும் குறைவாக உள்ளது என்பதையும், எங்கள் தனிநபர் வெளியீடு உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

• வரலாற்று ரீதியாக பிரச்சினைகளின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், இந்தியா தொடர்ந்து தீர்வுகளின் ஆதாரமாக இருந்து வருகிறது. ஐ.எஸ்.ஏ, சி.டி.ஆர்.ஐ, லைஃப் இயக்கம் மற்றும் சர்வதேச புலிகள் கூட்டணி போன்ற பல்வேறு முன்முயற்சிகள் மூலம் தீர்க்கமான உள்நாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளதோடு, சர்வதேச முயற்சிகளை தீவிரமாக வழிநடத்துகிறோம்.

 

மேதகு தலைவர்களே,

• நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும், நமது வளர்ச்சி மற்றும் பருவநிலை இலக்குகளை அடைவதற்கான பாதையில் நாம் இன்னும் பயணிக்கவில்லை. வறுமையை ஒழித்தல், எரிசக்தி மற்றும் வளங்களுக்கான சமமான அணுகல், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை நாம் மேலும் அதிகரிக்க வேண்டும்.

 

• பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, பாலைவனமாதல் மற்றும் மாசு போன்ற சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய சவால்களைச் சமாளிக்க நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது.

 

• நாள் முழுவதும் நடைபெறும் விவாதங்கள் மற்றும் எங்கள் ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளைப் பிரதிபலிக்கும் தலைமைத்துவ ஆவணங்கள், முடிவுகளின் ஆவணம் மற்றும் தலைவர்கள் உரையின் சுருக்கம் ஆகியவற்றை நாங்கள் எதிர்நோக்குகிறோம். உலகளாவிய நல்வாழ்வை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும். மேலும் சென்னையில் இன்று நாம் மேற்கொள்ளும் முடிவுகள் இந்த நோக்கத்தை அடைவதற்கான  உத்வேகத்தை வழங்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி

 

***



(Release ID: 1943527) Visitor Counter : 143