பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்


1.25 லட்சத்துக்கும் அதிகமான பிஎம் கிசான் சம்ரிதி மையங்களை அர்ப்பணித்தார்

பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் சுமார் ரூ .17,000 கோடியின் 14 -வது தவணைத் தொகையை வெளியிட்டார்

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பில் (ஓ.என்.டி.சி) 1600 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்

யூரியா கோல்டு - கந்தகம் பூசப்பட்ட யூரியா அறிமுகம் செய்தார்

5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தார், 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

"விவசாயிகளின் வலிகளையும் தேவைகளையும் மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது"

“யூரியா விலை, விவசாயிகளை பாதிக்க அரசு அனுமதிக்காது. ஒரு விவசாயி யூரியா வாங்கச் செல்லும்போது, மோடியின் உத்தரவாதம் இருக்கிறது என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது”

"வளர்ச்சியடைந்த கிராமங்கள் இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடைந்ததாக இருக்க முடியும்"

"ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவது எங்கள் முன்னுரிமை"

" முழு உலகிலும் ராஜஸ்தானின் பெருமை மற்றும் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை நாம்

Posted On: 27 JUL 2023 1:03PM by PIB Chennai

ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களை (பி.எம்.கே.எஸ்.கே) நாட்டிற்கு அர்ப்பணித்தல். கந்தகம் பூசப்பட்ட புதிய வகை யூரியா கோல்டு அறிமுகம் செய்தல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) 1600 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைத்தல், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியின் கீழ் 8.5 கோடி பயனாளிகளுக்கு சுமார் ரூ. 17,000 கோடி 14-வது தவணைத் தொகையை விடுவித்தல் சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தல், பரன், பண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், உதய்பூர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், துங்கர்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 6 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்து வைத்தல், திவ்ரி, ஜோத்பூர் ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயாக்களைத் திறந்து வைத்தல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதமர், பிரதமரின் வேளாண் வள மையத்தின் மாதிரியைப் பார்வையிட்டார். இந்த நிகழ்வில், திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், நாட்டின் பல இடங்களிலிருந்து இன்றைய நிகழ்வில் இணைந்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தினார். கட்டு ஷியாம் அவர்களின் பூமி இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வருகின்ற யாத்ரீகர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று அவர் கூறினார். ஷெகாவதியின் வீர பூமியிலிருந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்காக நன்றி தெரிவித்த அவர், பிரதமரின் விவசாய கௌரவிப்பு நிதியின் (பி.எம்-கிசான்) கீழ் தவணைத் தொகை கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக மாற்றப்படுவதைக் குறிப்பிட்டார். நாட்டில் 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களின் அர்ப்பணிப்பு குறித்து பேசிய பிரதமர், இது கிராம மற்றும் வட்டார அளவில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கும் என்றார். டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். இது நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதை எளிதாக்கும் என்று அவர் கூறினார். யூரியா கோல்டு, புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஏகலவ்யா மாதிரிப் பள்ளிகள் ஆகியவை பற்றியும் அவர் எடுத்துரைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்திய மக்களுக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

சிகார் மற்றும் ஷெகாவதி பிராந்திய விவசாயிகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட பிரதமர், நிலப்பரப்பு கடினமாக இருந்தபோதும் அவர்களின் கடின உழைப்புக்கு மரியாதை செலுத்தினார். விவசாயிகளின் வலிகளையும், தேவைகளையும் மத்தியில் உள்ள தற்போதைய அரசு புரிந்து கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் விதை முதல் சந்தை வரை புதிய அமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் விவரித்தார். 2015-ம் ஆண்டு சூரத்கரில் மண்வள அட்டை திட்டம் தொடங்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். இந்தத் திட்டத்தின் மூலம், கோடிக்கணக்கான விவசாயிகள் மண்ணின் வளம் குறித்த அறிவின் அடிப்படையில் உகந்த முடிவுகளை எடுத்து வருகின்றனர். 1.25 லட்சம் பிரதமரின் வேளாண் வள மையங்கள் (பி.எம்.கே.எஸ்.கே) விவசாயிகளின் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். இந்த மையங்கள் விவசாயிகளின் தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதாக இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த மேம்பட்ட, நவீன தகவல்களை வழங்கும். மேலும் அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த தகவல்களையும் இந்த மையங்கள் சரியான நேரத்தில் வழங்கும். விவசாயிகள் தொடர்ந்து இந்த மையங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கும் தகவலை கொண்டு பயனடைய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 1.75 லட்சம் பிரதமரின் வேளாண் வள மையங்கள் (பி.எம்.கே.எஸ்.கே) நிறுவப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

விவசாயிகளின் செலவினங்களைக் குறைக்கவும், அவர்களுக்குத் தேவையான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் தற்போதைய அரசு முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி பற்றி குறிப்பிட்ட பிரதமர், இது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படும் உலகின் மிகப்பெரிய திட்டம் என்று கூறினார். இன்றைய 14-வது தவணையை சேர்த்தால் இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது விவசாயிகளுக்கு பல்வேறு செலவுகளுக்கு பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  நாட்டில் யூரியாவின் விலை என்பது விவசாயிகளின் செலவுகளை அரசு மிச்சப்படுத்துகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயும், ரஷ்யா-உக்ரைன் போரும் உரத் துறையில் பெரும் இடையூறுகளுக்கு வழிவகுத்தாக குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய அரசு இவை நாட்டின் விவசாயிகளை பாதிக்க அனுமதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். உரங்களின் விலை குறித்து பேசிய பிரதமர், இந்தியாவில் ஒரு மூட்டை யூரியா ரூ. 266 ஆக உள்ள நிலையில், பாகிஸ்தானில் ரூ. 800, பங்களா தேஷில் ரூ. 720, சீனாவில் ரூ. 2100, அமெரிக்காவில் ரூ.3000 ஆக உள்ளது. "யூரியா விலை விவசாயிகளை பாதிப்பதற்கு அரசு அனுமதிக்காது", என்று திரு மோடி கூறினார், "ஒரு விவசாயி யூரியா வாங்கச் செல்லும்போது, அது மோடியின் உத்தரவாதம் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது" என்று கூறினார்.

சிறுதானியங்களை ஊக்குவிப்பது, சிறுதானியங்களை ஸ்ரீ அன்னா என்று குறிப்பிடுவது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசினார். ஸ்ரீ அன்னாவின் ஊக்குவிப்பு மூலம், அதன் உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். தமது சமீபத்திய பயணத்தின் போது வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ விருந்தில் சிறுதானியங்கள் இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

கிராமங்கள் வளர்ச்சியடைந்தால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாகும் என்று பிரதமர் கூறினார். வளர்ச்சியடைந்த கிராமங்கள் இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடைந்ததாக இருக்க முடியும். அதனால்தான் இதுவரை நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த அனைத்து வசதிகளையும் கிராமங்களில் கிடைக்கச் செய்ய அரசு செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார். விரிவடைந்து வரும் சுகாதார உள்கட்டமைப்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர், ராஜஸ்தானில் 9 ஆண்டுகளுக்கு முன் வரை பத்து மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன என்றும், இன்று இந்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார். இது அருகிலுள்ள பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதோடு, மருத்துவ மாணவர்களுக்கு தரமான கல்விக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. இன்று திறக்கப்படும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அடிக்கல் நாட்டப்படும் கல்லூரிகள் மாநிலத்தின் பல பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று அவர் கூறினார். மருத்துவக் கல்வியை தாய் மொழியில் வழங்கவும், அதை மேலும் ஜனநாயகப்படுத்தவும், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு வழிகளைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இனி ஆங்கிலம் தெரியாததால் ஏழையின் மகனோ, மகளோ டாக்டராகும் வாய்ப்பை இழக்க மாட்டார்கள். இதுவும் மோடியின் உத்தரவாதம்தான்.

பல தசாப்தங்களாக, கிராமங்களில் நல்ல பள்ளிகள் மற்றும் கல்வி இல்லாததால் கிராமங்களும், ஏழைகளும் பின்தங்கியுள்ளனர் என்று கூறிய பிரதமர், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களின் குழந்தைகள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற எந்த வழியும் இல்லை என்று கவலை தெரிவித்தார். தற்போதைய அரசு கல்விக்கான வரவுசெலவுத் திட்டத்தையும் வளங்களையும் அதிகரித்ததுடன் ஏகலவ்யா உறைவிடப் பள்ளிகளைத் திறந்தது. இது பழங்குடி இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

"கனவுகள் பெரிதாக இருக்கும்போதுதான் வெற்றி பெரிதாகிறது" என்று பிரதமர் கூறினார். ராஜஸ்தான் பல நூற்றாண்டுகளாக உலகை கவர்ந்த ஒரு மாநிலமாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், ராஜஸ்தானை நவீன வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் அதே நேரத்தில் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தினார். அதனால்தான், ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவது எங்கள் முன்னுரிமை என்று பிரதமர் கூறினார். கடந்த சில மாதங்களில் இரண்டு உயர் தொழில்நுட்ப அதிவேக நெடுஞ்சாலைகளின் தொடக்கத்தை குறிப்பிட்ட அவர், தில்லி - மும்பை விரைவுச்சாலை மற்றும் அமிர்தசரஸ் - ஜாம்நகர் விரைவுச்சாலையின் ஒரு முக்கிய பகுதி மூலம் ராஜஸ்தான் வளர்ச்சியின் புதிய கதையை எழுதுகிறது என்றார். மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதில் அரசு முதலீடு செய்து வருவதாகவும், இதன் விளைவாக ராஜஸ்தானுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் திரு. மோடி கூறினார். "எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள் என்று ராஜஸ்தான் அழைக்கும்போது விரைவுச் சாலைகள் மற்றும் சிறந்த ரயில் வசதிகள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும்" என்று அவர் கூறினார். சுதேச தரிசனம் திட்டத்தின் கீழ் கட்டு ஷியாம் கோவிலில் வசதிகளை விரிவுபடுத்துவது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும் ஸ்ரீ கட்டு ஷியாமின் ஆசீர்வாதத்துடன் ராஜஸ்தானின் வளர்ச்சி மேலும் வேகம்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். " முழு உலகிலும் ராஜஸ்தானின் பெருமை மற்றும் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை நாம் அனைவரும் வழங்குவோம்" என்று திரு மோடி கூறினார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் சில காலமாக நோய்வாய்ப்பட்டு நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலையில், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

ராஜஸ்தான் ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ரா, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. கைலாஷ் சௌத்ரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

விவசாயிகளுக்கு பயனளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பிரதமர் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதமரின் வேளாண் வள மையங்களை (பி.எம்.கே.எஸ்.கே) நாட்டுக்கு அர்ப்பணித்தார். அனைத்து விவசாயிகளின் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் வகையில் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. வேளாண் இடுபொருட்கள் (உரங்கள், விதைகள், கருவிகள்) பற்றிய தகவல்கள் முதல் மண், விதைகள் மற்றும் உரங்களுக்கான சோதனை வசதிகள், அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றிய தகவல்கள் வரை, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நம்பகமான ஆதரவு அமைப்பாக இந்த மையங்கள் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டார / மாவட்ட அளவிலான விற்பனை நிலையங்களில் உரங்களின் சில்லறை விற்பனையாளர்களின் வழக்கமான திறன் மேம்பாட்டையும் இவை உறுதி செய்யும்.

யூரியா கோல்டு எனும் கந்தகம் பூசப்பட்ட புதிய வகை யூரியாவைப் பிரதமர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் மண்ணில் உள்ள கந்தக குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும். இந்த புதுமையான உரம் வேம்பு பூசப்பட்ட யூரியாவை விட சிக்கனமானது மற்றும் செயல்திறன் கொண்டது, தாவரங்களில் நைட்ரஜன் பயன்பாட்டு திறனை மேம்படுத்துகிறது, உர நுகர்வைக் குறைக்கிறது மற்றும் பயிரின் தரத்தை மேம்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியின் போது, 1600 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பில் (ஓ.என்.டி.சி) இணைக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் சந்தைப்படுத்தல், ஆன்லைன் கட்டணம், வணிகத்திலிருந்து வணிகம் (பி 2 பி) மற்றும் வணிகத்திலிருந்து நுகர்வோர் பரிவர்த்தனைகளுக்கு நேரடி அணுகல் மூலம் இந்த திட்டம் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் உள்ளூர் மதிப்பு கூட்டலையும், கிராமப்புறங்களில் தளவாடங்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதியின் (பி.எம்-கிசான்) கீழ் சுமார் ரூ .17,000 கோடியை 14 வது தவணைத் தொகையாக 8.5 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் வழங்கியது விவசாயிகள் நலனுக்கான பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார் மற்றும் ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்ததோடு, பரன், பூண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் ஏழு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். "தற்போதுள்ள மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக" மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுகின்றன. பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட 5 மருத்துவக் கல்லூரிகள் ரூ.1400 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளன, அடிக்கல் நாட்டப்படும் ஏழு மருத்துவக் கல்லூரிகள் ரூ. 2275 கோடி செலவில் கட்டப்படும். 2014 ஆம் ஆண்டு வரை, ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. மத்திய அரசின் அர்ப்பணிப்பு முயற்சியால், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது, இது 250% அதிகரித்துள்ளது. இந்த 12 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதன் மூலம் மாநிலத்தில் 2013-14 ஆம் ஆண்டில் 1750 இடங்களாக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6275 ஆக உயரும், இது 258% அதிகரிக்கும்.

உதய்பூர், பன்ஸ்வாரா, பர்தாப்கர் மற்றும் துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆறு ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளை பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜோத்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா திவ்ரியையும் அவர் தொடங்கி வைத்தார்.

 

***

ANU/ SMB/RS/KPG



(Release ID: 1943260) Visitor Counter : 162