குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தேசிய புவி அறிவியல் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 24 JUL 2023 6:48PM by PIB Chennai

தேசிய புவி அறிவியல் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

புதுதில்லி, ஜூலை 24, 2023

 குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 24, 2023) குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில், தேசிய புவி அறிவியல் விருதுகள் -2022 ஐ வழங்கினார். புவி அறிவியலின் பல்வேறு துறைகளில் அசாதாரண சாதனைகள் மற்றும் சிறந்த பங்களிப்புகளுக்காக தனிநபர்கள் மற்றும் குழுக்களை கௌரவிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தால் தேசிய புவி அறிவியல் விருது நிறுவப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், புவி அறிவியல் துறை மிகவும் பரவலானது என்றும்,  நிலச்சரிவு, பூகம்பம், வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் குறித்த ஆய்வும் இதில் அடங்கும் என்றும் கூறினார்.  இவைகள் மக்கள் நலன் சார்ந்த புவி அறிவியல் என்று அழைக்கப்படுவதாக தெரிவித்தார். ஏனெனில் அவை அதிக எண்ணிக்கையிலான மக்களின் பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

நமது பொருளாதாரத்தின் முக்கியத்  துறையாக சுரங்கத் தொழில் காணப்படுவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கனிமவள மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், கடந்த சில ஆண்டுகளில், சுரங்கத் துறையில் பல முற்போக்கான மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்த மாற்றங்கள் சுரங்கத் துறையின் திறனையும், உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.

அறிவியல் மற்றும் வளர்ச்சிப் பாதை மட்டுமே மனித குலத்தின் நலனுக்கானது என்பதை நிரூபிப்பதாக  குடியரசுத் தலைவர் கூறினார். கனிமங்களை திறம்பட பயன்படுத்துவதில் பங்களிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியதற்காக இந்திய புவியியலாளர்களை அவர் பாராட்டினார்.

தற்காலத்தில் அரிய பூமித் தனிமங்கள், பிளாட்டினம் குழு தனிமங்கள் மற்றும் செமிகண்டக்டிங் தனிமங்கள் போன்ற கனிமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு, சில பாரம்பரிய கனிமங்களின் சுரங்கம் மற்றும் அவற்றின் முடிவுகள் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இன்றைய விருதுகளில் நிலையான கனிம வளர்ச்சித் துறையில் பங்களிப்பை அங்கீகரித்ததற்காக சுரங்க அமைச்சகத்தை அவர் பாராட்டினார்.  நிலையான கனிம மேம்பாட்டிற்காக, பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பரிமாணங்களுக்கும் சமமான கவனம் செலுத்தப்பட்டு வருவதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.

*****

(Release ID: 1942176)

ANU/IR/KRS


(Release ID: 1942285) Visitor Counter : 155