ஆயுஷ்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகள் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தில் பாரம்பரிய மருத்துவத்தை முன்னணியில் கொண்டு வந்துள்ளன - அமிதாப் காந்த், ஷெர்பா ஜி-20

Posted On: 23 JUL 2023 5:38PM by PIB Chennai

சுகாதாரம் குறித்த ஜி-20 விவாதத்தில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் பாரம்பரிய மருத்துவத்தை முன்னணியில் கொண்டு வந்துள்ளன என்றும், சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை ஜி-20 அங்கீகரிக்கும் என்றும் புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 ஈடுபாட்டுக் குழுக்களுடனான கலந்துரையாடலில், உறுப்பினர்கள் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ஜி-20 ஷெர்பா திரு அமிதாப் காந்த், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா, சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு.லாவ் அகர்வால், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு.அபய் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது உரையாற்றிய திரு.அமிதாப் காந்த் தனது உரையில், "அனைத்து குழுக்களுடனும் நன்கு ஒத்துழைத்ததற்காக ஆயுஷ் அமைச்சகத்தை நான் பாராட்டுகிறேன். முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடைவதில் ஆயுஷ் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை நாம் அதிகரிக்க வேண்டும்.

"பாரம்பரிய மருத்துவம்" மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கியத்தின் ஆதாரமாக உள்ளது. மேலும் முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடைவதில் ஆயுஷ் நடைமுறைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். பாரம்பரிய மருத்துவத்திற்கான ஒரு பிரத்யேக உலக சுகாதார மையத்தை (டபிள்யூ.எச்.ஓ ஜி.சி.டி.எம்) உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் கொண்டு வந்துள்ளது என்றும், இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்தின் திறனைப் பயன்படுத்தும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.  

லாவ் அகர்வால் தனது உரையில், "அனைத்து சுகாதார சவால்களையும் அணுகும் வகையில் ஒருங்கிணைந்த ஆரோக்கியம் அல்லது முழுமையான ஆரோக்கியம் என்ற கருத்தைப் பற்றி உலகம் பேசுகிறது. நாங்கள் ஜி-20 நாடுகளிடையே ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும் சுகாதாரத் துறையில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை ஏற்றுக்கொள்வதில் அனைவருக்கும் தெளிவான பார்வை உள்ளது" என்றார்.

இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய மருத்துவத் துறையில் தங்கள் பரிந்துரைகள் மற்றும் ஆழமான கலந்துரையாடல்கள் மூலம் பங்களித்த பணிக்குழுக்களை வைத்யா ராஜேஷ் கோட்டேச்சார் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ், ஆயுஷ் அமைச்சகத்தின் பங்களிப்பை பகிர்ந்து கொள்வதே முக்கிய நோக்கம் என்றும், அது வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு.ராகுல் சர்மா, ஜி-20 பணிக் குழுக்களுடன் பாரம்பரிய மருத்துவம் குறித்த உரையாடலை தீவிரமாக உருவாக்குவதில் ஆயுஷ் அமைச்சகத்தின் பங்கை எடுத்துரைத்தார். ஜி-20 உச்சிமாநாட்டிற்காக உலகின் முக்கிய தலைவர்கள் கூடும்போது, உலகளாவிய சமூக ஆரோக்கியத்தில் பாரம்பரிய மருத்துவம் வகிக்கக்கூடிய முக்கிய பங்கைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

(Release ID : 1940705)



(Release ID: 1941958) Visitor Counter : 111