எரிசக்தி அமைச்சகம்

மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமையில் அமைச்சர்கள் நிலையிலான 14-வது தூய எரிசக்தி (சி.இ.எம்) அமைப்பின் கூட்டம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு இயக்கlதின் (எம்.ஐ) 8-வது கூட்டம் கோவாவில் நடைபெற்றது

Posted On: 21 JUL 2023 6:21PM by PIB Chennai

கோவாவில்  தூய்மை எரிசக்தி தொடர்பான அமைச்சர்கள் நிலையிலான 14வது கூட்டம் (Clean Energy Ministerial -CEM) மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு இயக்கத்தின் 8-வது கூட்டம் இன்று (21.07.2023) மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் தலைமையில் கோவாவில் தொடங்கியது. இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்கே சிங், எரிசக்தி மாற்றத்திற்கான பாதையில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைக் கடப்பதற்கான வழிகள் குறித்து பேசினார். பருவநிலை மாற்றம் அனைவருக்கும் கவலை அளிப்பதாகவும் அதை எதிர்த்துப் போராட ஒவ்வொருவரும் பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்திய மக்களின் எளிமையான வாழ்க்கை முறை காரணமாக தனிநபர் கார்பன் உமிழ்வு இங்கு குறைவாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

2030-ம் ஆண்டுக்குள்  எரிசக்தித் தேவையில் 50 சதவீதத்தை புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து பூர்த்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை இந்தியா எட்டும் என்றும் அமைச்சர் திரு ஆர்.கே. சிங் தெரிவித்தார்.

 

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விஜய் குமார் சரஸ்வத் பேசுகையில், மனிதகுலத்தின் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக புதைபடிவ எரிபொருள்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

 

உலகளாவிய எரிசக்தி மாற்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு அமெரிக்க எரிசக்தி அமைச்சர் திருமதி ஜெனிபர் எம் கிரான்ஹோம் பாராட்டுத் தெரிவித்தார்.

 

மிஷன் இன்னோவேஷன் (எம்.) எனப்படும் புதுமைக் கண்டுபிடிப்பு இயக்கத்தின் தலைவர் டாக்டர் எலினோர் வெப்ஸ்டர், பருவநிலை மாற்ற நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து விளக்கினார். பிரேசில் எரிசக்தி அமைச்சர் திரு அலெக்சாண்டர் சில்வேராடி ஒலிவேரா, அடுத்த ஆண்டு ஜி 20 தலைமைப் பதவியுடன் எம். அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை பிரேசில் ஏற்கும் என்று கூறினார்.

 

 

தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான, 29 நாடுகளின் உயர்மட்ட மன்றமாக தூய்மை எரிசக்தி அமைச்சர்கள் அமைப்பு (சிஇஎம்) உள்ளது.

 

மிஷன் இன்னோவேஷன் (MI) எனப்படும் புதுமைக் கண்டுபிடிப்பு இயக்கம் என்பது தூய்மையான எரிசக்தி புரட்சியை விரைவுபடுத்துவதற்கும், பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கும் 23 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணையம் (ஐரோப்பிய யூனியன் சார்பாக) அடங்கிய அமைப்பாகும்.

 

CEM / MI –ன் இணையதளம்:  https://www.cem-mi-india.org/

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1941492  

********

 

ANU/PLM/KRS



(Release ID: 1941613) Visitor Counter : 148


Read this release in: Telugu , English , Urdu , Hindi