கலாசாரத்துறை அமைச்சகம்

இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மத்திய கலாச்சார அமைச்சகம் நூலகங்களின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்துள்ள "நூலகத் திருவிழா 2023"ஐ தொடங்கி வைக்கிறார்

Posted On: 19 JUL 2023 8:03PM by PIB Chennai

ஸ்ரீ அர்ஜுன் ராம் மேக்வால், "நூலகங்களின் திருவிழா 2023"ன் அட்டவணையை வெளியிட்டார்

நூலகங்கள் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து, வரலாற்றுக்கும் எல்லையற்ற எதிர்காலத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கின்றன. அரசின் டிஜிட்டல் நூலக முன்முயற்சி தடைகளை உடைத்து, அனைத்து மக்களுக்கும் அறிவை அணுகுவதற்கு அதிகாரம் அளிக்கிறது: திரு. அர்ஜுன் ராம் மேக்வால்

புதுதில்லியில் பிரகதி மைதானத்தின் அரங்கு எண் 5 ல், 2023 ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் நிகழ்வான சிறப்புமிக்க 'நூலகத் திருவிழா 2023' ஐ குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார். மத்திய கலாச்சார அமைச்சகம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சரும், கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வால் இன்று புதுதில்லியில் நூலகத் திருவிழாவின் அட்டவணையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு. கோவிந்த் மோகன் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் இணை செயலாளர் திருமதி. முக்தா சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவில் உள்ள நூலகங்களை நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் குறித்த உரையாடலைத் தொடங்குவதற்கான முன்முயற்சியாக உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற நூலகங்களையும் இந்த விழா எடுத்துக்காட்டும்.

திரு. அர்ஜூன் ராம் மேக்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நூலகத் திருவிழா 2023 அறிவையும் கற்பனையையும் கொண்டாடுகிறது. நூலகங்கள் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து, வரலாற்றுக்கும் எல்லையற்ற எதிர்காலத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கின்றன. அரசின் டிஜிட்டல் நூலக முன்முயற்சி தடைகளை உடைத்து, அனைத்து மக்களுக்கும் அறிவை அணுகுவதற்கு அதிகாரம் அளிக்கிறது. நூலகங்களின் உருமாற்ற சக்தியையும், ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் நூலகம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளையும் அரவணைத்து உற்சாகத்துடன் கொண்டாடுவோம்’’. அமைச்சர் மேலும் கூறுகையில், நூலகங்கள் மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான அணுகுமுறையின் இன்றியமையாத பகுதியாக இருப்பதால் நூலகங்களின் மேம்பாடு அரசின் முன்னுரிமையாக உள்ளது என்று கூறினார். புத்தகங்களாக கிடைக்கும் முறையில் உள்ள நூலகங்கள் நம் நாட்டில் பெருமைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளன, மக்களிடையே வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க அரசு விரும்புகிறது என்று அவர் விளக்கினார். புத்தகங்கள் கிடைப்பது மற்றும் டிஜிட்டல் நூலகங்களின் சமநிலையை நாம் பராமரிக்க வேண்டும் என்றும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நூலகங்களுக்குள் வாசிப்பை அனுபவிக்க சிறப்பு பகுதிகளை உருவாக்க வேண்டும் என்றும் திரு. அர்ஜூன்ராம் மேக்வால் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய, கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு. கோவிந்த் மோகன், நூலகங்களுக்கும் அருங்காட்சியகங்களுக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது. இவை புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் நூலகங்களின் பொருத்தமான கலவையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த இரண்டு பிரச்சினைகளும் நிகழ்ச்சியின் போது விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறினார். திரு. கோவிந்த் மோகன் மேலும் கூறுகையில், உணர்வு மற்றும் மன வளர்ச்சிக்கு நூலகங்கள் இன்றியமையாதவை. எனவே, மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுப்பது முக்கியமாகும். டெல்லியில் நடைபெறும் நூலகங்களின் திருவிழா தொடர்ச்சியான உற்சாகமான வெளியீட்டு நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் குழு விவாதங்களுடன் தொடங்கும். இது இந்தியா முழுவதும் உள்ள நூலகங்களுக்கு ஒரு சிறப்பு தரவரிசை முறையை அறிமுகப்படுத்தும். இது நூலக சுற்றுச்சூழல் அமைப்பில் ஆரோக்கியமான போட்டி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இணை செயலர், முக்தா சின்ஹா பேசிய போது, ‘’நுாலகங்கள், சமூகத்தின் வரவேற்பு அறைகள்; நுாலகங்கள் பெருகி வரும் நிலையில், புத்தகங்களை வெளியிடுவது குறைந்து வருவதைப் போன்று, நுாலகங்களுக்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. டிஜிட்டல், சமூக ஊடகங்கள் மற்றும் புதுயுக தொழில்நுட்பங்கள் வீட்டில் இருந்தபடியே படிப்பதை எளிதாக்கியுள்ளது. இந்நிலையில், நூலகங்கள் - அவற்றின் அரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் காப்பகங்களுடன் - அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய வகையில் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் பிற டிஜிட்டல் சாதன வசதிகளுடன் நூலகங்கள் அவற்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்டுதான் நூலகங்களின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையும், வெறும் வாசிப்பு அறைகளாக அல்லாமல் அவை எப்படி பண்பாட்டு மையங்களாக எப்படி மாற முடியும் என்பதையும் ஆராய்வதை நூலகத் திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி 'சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின்' இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும், நூலகங்களின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை வளர்ப்பதும் இந்தியாவில் வாசிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதும் பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப உள்ளது. நூலகங்களின் நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் குறித்த உரையாடலைத் தொடங்கி, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற நூலகங்களை எடுத்துக் காட்டுவதற்கான ஒரு தளமாக நூலகத் திருவிழா செயல்படும். இந்தியாவில் மாதிரி நூலகங்களை உருவாக்குவதற்கான செயல்பாடு சார்ந்த கொள்கைகளை கிராமம் மற்றும் சமூக அளவில் உருவாக்குவதற்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வு, இந்தியா முழுவதும் உள்ள நூலகங்களுக்கான சிறப்பு தரவரிசை முறையை அறிமுகப்படுத்துவதையும், நூலகத் துறையில் சிறப்பையும் புதுமையையும் மேலும் ஊக்குவிப்பதையும் குறிக்கிறது. இந்நிகழ்ச்சி நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் கலந்து கொள்ள உள்ளார்.

 

பாட்னாவின் குடா பக்‌ஷ் ஓரியண்டல் பொது நூலகம், ராம்பூரின் ராம்பூர் ராஜா நூலகம் மற்றும் டோங்கின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அரபு பாரசீக ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய மூன்று முக்கிய நூலகங்களுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். ராம்பூர் ராஜா நூலகத்தின் 250 ஆண்டு கொண்டாட்டத்தைத் தொடங்குதல், ராம்பூர் ராஜா நூலகத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்துடன் சாசி நூலகத்தின் தொடரைத் தொடங்குதல் மற்றும் 22 வட்டார மொழிகளில் கூட்டெழுத்து புத்தகங்களின் தொகுப்பை வெளியிடுதல் ஆகிய நீண்ட கால கூட்டு நிகழ்வுகளும் அடங்கும்.

நூலகங்களின் திருவிழா என்பது ஒரு தனித்துவமான நிகழ்வாகும். இது நூலகங்களின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்து வாசகர்களை ஈடுபடுத்துவதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழாவில் புதிய முயற்சிகள் மற்றும் வெளியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில் வட்டமேஜை விவாதங்கள் மற்றும் குழுக்கள் அடங்கும். இதில் வாசகர்கள் இந்திய மாநிலங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நூலகங்களிலிருந்து நூலகங்களின் சிறந்த நடைமுறைகளை ஆராயலாம். இலக்கிய விழாக்களின் ஏற்பாட்டாளர்கள், இளம் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் மற்றும் பலருடன் சுவாரஸ்யமான உரையாடல்கள் நடைபெறும். நூலகங்களுக்கான தேசிய இயக்கங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்கள் உள்ளிட்ட நூலகங்கள் மற்றும் அவற்றின் சேகரிப்புகளுக்கான திட்டங்கள் குறித்து சிறப்பு அமர்வுகள் கவனம் செலுத்தும்.

பார்வையாளர்கள் வரைபடவியல், கைரேகை, கூட்டு எழுத்துருக்கள் மற்றும் கையெழுத்து பிரதிகளை வெளிப்படுத்தும் 10 கவர்ச்சிகரமான கண்காட்சிகளை கண்டு களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஆவணக் காப்பகங்களின் டிஜிட்டல் மயமாக்கல், குறிப்பாக தனியார் சேகரிப்புகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், வாசகர்கள் அரிய ஆவணக் காப்பக சேகரிப்புகள் மற்றும் ஒளிரும் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியை காணலாம்.

புத்தக ஆசிரியர்களின் அமர்வுகள், டிஜிட்டல் காட்சிபடுத்துதல், வலையொளி மற்றும் மனித நூலகத் திட்டம் ஆகியவற்றுடன் கலந்துரையாடும் வரவேற்பு அறைகள் இந்த விழாவில் இடம்பெறும். குழந்தைகளிடையே வாசிப்பு ஆர்வத்தை வளர்க்க ஒரு தனிப்பட்ட குழந்தைகள் பிரிவு நேரடி நடவடிக்கைகளை வழங்கும்.

நூலகர்கள் மற்றும் கல்வியாளர்கள் முதல் 100 ஆர்வமுள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாதிரி நூலகங்களின் இயக்குநர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து நூலகங்களை சமூகத்தின் வரவேற்பறைகளாக மாற்றுவதற்கும், வாசகர்கள் எதிர்காலத் தலைவர்களாக உருவெடுப்பதற்கும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. 

2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரசின் நூலகங்களுக்கான தேசிய இயக்கம் (என்எம்எல்) நாடு முழுவதும் உள்ள நூலகங்களை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாதிரி நூலகங்களை உருவாக்கவும், மாவட்ட நூலகங்களை டிஜிட்டல் தளங்களுடன் இணைக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்த இயக்கம் மொத்தம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.

அட்டவணைக்கு இங்கே கிளிக் செய்யவும்

***

 (வெளியீட்டு எண்: 1940832)



(Release ID: 1940939) Visitor Counter : 134