அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உலகின் நவீனமான எஃகு சாலைத் தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 17 JUL 2023 6:23PM by PIB Chennai

உலகின் நவீனமான எஃகு சாலைத் தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு);  பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புது தில்லியில் 1952-ல் நிறுவப்பட்ட சிஎஸ்ஐஆர் - மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சிஆர்ஆர்ஐ), புரட்சிகரமாக  எஃகு கழிவு சாலை தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னோடியாகும். இது சாலை கட்டுமானத்தில் எஃகு ஆலைகளின் கழிவு எஃகு கசடுகளை பெரிய அளவில் பயன்படுத்த உதவுகிறது.

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இன்று வருகை தந்த அமைச்சர், வழக்கமான சாலைகளுக்காகும் செலவைவிட இத்தகைய சாலை 30% மலிவானது மட்டுமின்றி நீடித்து உழைக்கக்கூடியது பருவநிலை மாற்றங்களைத் தாங்கவல்லது என்றார்.

ஜூன் 2022-ல், குஜராத்தின் சூரத் நகரில் கூட்டு முயற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக பதப்படுத்தப்பட்ட எஃகு கசடு (தொழில்துறை கழிவு) சாலை அமைக்கப்பட்டதை அடுத்து நாட்டிலேயே இத்தகைய சாலை வசதியைப்  பெற்ற  முதல் நகரமாக சூரத் மாறியது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

சாலைகளை அமைப்பதில் எஃகு கழிவு தொழில்நுட்பம் பிரதமர் நரேந்திர மோடியின் "கழிவுப் பொருள்களிலிருந்து  செல்வம்" என்ற மந்திரத்துடன் ஒத்துப்போகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். "இந்தப் புதுமையான தொழில்நுட்ப முயற்சி, கழிவு எஃகு கசடு மற்றும் நீடிக்க முடியாத சுரங்கம் மற்றும் இயற்கையாக தூர்ந்துபோன குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் சிக்கலுக்கும் தீர்வுகாண்கிறது என்று அவர் கூறினார்.

****

SM/SMB/KRS

 
 
 
 


(Release ID: 1940306) Visitor Counter : 170