நிலக்கரி அமைச்சகம்

சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் 600 மெகாவாட் சூரிய சக்தி திட்டங்களை உருவாக்க திட்டம்

Posted On: 11 JUL 2023 3:33PM by PIB Chennai

கோல் இந்தியா நிறுவனத்தின்  மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்களில் ஒன்றான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் , அதன் விரிவாக்க உத்தியின்  ஒரு பகுதியாக, வரும் ஆண்டுகளில் 600 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி திட்டங்களை உருவாக்கவுள்ளது.  2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டும் என்ற  பிரதமர் திரு நரேந்திர மோடியின் குறிக்கோளுக்கு இணங்க இந்த உத்தி மேற்கொள்ளப்படுகிறது. மினிரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம் ரூ.1000 கோடிக்கு மேல் முதலீட்டுடன் இதனைச் செயல்படுத்தவுள்ளது.

சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பரவியுள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின்  செயல்பாட்டுப் பகுதிகளில் 180 மெகாவாட்டிற்கும் அதிகமான சூரிய மின்சக்தித் திட்டங்கள் ஏற்கனவே பல்வேறு கட்ட செயல்பாட்டில்  உள்ளன.

  கோல் இந்தியா லிமிடெட், 2026 ஆம் ஆண்டுக்குள் 3000 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுவுவதன் மூலம் நிகர பூஜ்ஜிய நிலையை அடைவதற்கான லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது, இது நிறுவனத்தின் கார்பன் தடயத்தைக் குறைத்து மேலும் நிலையான எதிர்காலத்தை நோக்கி நகரும்.

2022-23 நிதியாண்டில் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் அளித்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி சுரங்கத்தின் கார்பன் தடயத்தைக் குறைப்பதற்கும், நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை நோக்கி நகர்வதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இது ஊக்குவித்து வருகிறது. மேற்கூறிய திட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம், நிலக்கரி சுரங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு அதன் மின் தேவைகளை ஈடுகட்ட  நிறுவனம் முயற்சிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938679

*****



(Release ID: 1938747) Visitor Counter : 135