மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டெண் (பிஜிஐ-டி) குறித்த ஒருங்கிணைந்த அறிக்கையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இந்த பிஜிஐ-டி அறிக்கை 2020-21 ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 742 மாவட்டங்களையும், 2021-22 ஆம் ஆண்டில் 748 மாவட்டங்களையும் தரவரிசைப்படுத்தியுள்ளது

Posted On: 09 JUL 2023 5:13PM by PIB Chennai

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (டிஓஎஸ்இ & எல்) 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டு எண் பட்டியலை (பிஜிஐ-டி) இன்று (09-07-2023) வெளியிட்டது. இது விரிவான பகுப்பாய்வுக்கான குறியீட்டின் மூலம் மாவட்ட அளவில் பள்ளிக் கல்வியின் செயல்திறனை மதிப்பிடுகிறது.

 

சுமார் 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த சுமார் 26.5 கோடி மாணவர்கள் என பலதரப்பட்ட சூழலைக் கொண்ட இந்திய கல்வி முறை உலகின் மிகப்பெரிய கல்வி அமைப்புச் சூழல்களில் ஒன்றாகும். 2017-18-ம் ஆண்டு முதல் 2020-21-ம் ஆண்டு வரையில் மாநிலங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டை (பிஜிஐ) பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உருவாக்கி வெளியிட்டது. மாநில செயல்திறன் தரவரிசையின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, பள்ளிக் கல்வியில் அனைத்து மாவட்டங்களின் செயல்திறனையும் தரப்படுத்த மாவட்டங்களுக்கான 83 அம்சங்கள் அடிப்படையிலான செயல்திறன் தரவரிசைக் குறியீட்டுப் பட்டியல் (பி.ஜி.-டி) வடிவமைக்கப்பட்டது. இதற்கான தரவுகள் இணையதளம் மூலம் மாவட்டங்களால் நிரப்பப்படுகின்றன. இந்த தரவரிசையின் மூலமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி இடைவெளிகளைக் கண்டறிந்து அவற்றை நிரப்ப மாநில கல்வித் துறைகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டிற்கான பிஜிஐ-டி அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த அறிக்கையாகும்.

 

பி.ஜி.-டி கட்டமைப்பில் 83 குறியீட்டு அம்சங்கள் மொத்தம் 600 புள்ளிகளைக் கொண்டுள்ளது. அவை சிறந்த விளைவுகள், வகுப்பறைக் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கான உரிமைகள், பள்ளி பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, டிஜிட்டல் கற்றல், ஆளுமை செயல்முறை ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த வகைகள் மேலும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது கற்றல் விளைவுகள் மற்றும் தரம் (LO), அணுகல் வெளிப்பாடுகள் (AO), ஆசிரியரின் அணுகல் தன்மை மற்றும் தொழில்முறை மேம்பாட்டு விளைவுகள் (TAPDO), கற்றல் மேலாண்மை (LM), கற்றல் செறிவூட்டல் நடவடிக்கைகள் (LEA), உள்கட்டமைப்பு வசதிகள், பிற வசதிகள், மாணவர் உரிமைகள் (IF&SE), பள்ளி பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு (SS&CP), டிஜிட்டல் கற்றல் (DL), நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பயன்பாடு (FCV), சிஆர்சி-களின் செயல்திறனை மேம்படுத்துதல் (CRCP), வருகைப் பதிவுக் கண்காணிப்பு முறைகள் (AMS) மற்றும் பள்ளித் தலைமைத்துவ மேம்பாடு (SLD) ஆகியவையாகும்.

 

பிஜிஐ-டி மாவட்டங்களை பத்து தரத்தில் வகைப்படுத்துகிறது. அதாவது அதிக சாதிக்கக்கூடிய தரம் என்பது ஒட்டுமொத்தமாக மொத்த புள்ளிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறும் மாவட்டங்கள் தக்ஷ் என வகைப்படுத்தப்படுகின்றன. பிஜிஐ-டி-யில் மிகக் குறைந்த தரம் கொண்ட மாவட்டங்கள் அகன்ஷி -3 என்று அழைக்கப்படுகிறது, இது மொத்த புள்ளிகளில் 10 சதவீதத்துக்கும் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற மாவட்டங்கள் ஆகும். பள்ளிக் கல்வியில்  முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து எடுத்துரைப்பதும் அதன் மூலம் பள்ளிக் கல்வியில் உயர்ந்த தரத்தை அடைய உதவுவதுமே பிஜிஐ-டி-யின் முக்கிய நோக்கமாகும்.

 

2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான பிஜிஐ-டி ஒருங்கிணைந்த அறிக்கையை https://www.education.gov.in/statistics-new?shs_term_node_tid_depth=396&Apply=Apply என்ற இணைய தள இணைப்பில் காணலாம்.

***

AD/PLM/KRS

 

 


(Release ID: 1938326) Visitor Counter : 192