சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் ஒட்டுமொத்த தூரம் 59 சதவீதம் அதிகரித்திருக்கிறது: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி
Posted On:
27 JUN 2023 5:34PM by PIB Chennai
கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் ஒட்டுமொத்த தூரம் 59 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா தற்போது, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இரண்டாவது மிகப்பெரிய சாலை நெட்வொர்க்-ஐ கொண்ட நாடாகத் திகழ்கிறது.
புதுதில்லியில் இன்று (2023 ஜூன் 27) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 2013-14-ம் ஆண்டில் 91 ஆயிரத்து 287 கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலையின் ஒட்டுமொத்த தூரம், 2022-23-ம் ஆண்டில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 240 கிலோ மீட்டராக அதிகரித்து இருக்கிறது என்றார்.
சுங்கவரி வசூலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டட ஃபாஸ்-டேக் (FASTag) மூலம் சுங்கவரி வசூல் கணிசமாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார். 2013-14-ம் ஆண்டில் 4 ஆயிரத்து 770 கோடி ரூபாயாக இருந்த சுங்கவரி வருவாய், 2022-23-ம் ஆண்டில் 41 ஆயிரத்து 342 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் நிதின் கட்கரி கூறினார். அதே நேரத்தில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் சுங்கவரி வருவாயை 1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஃபாஸ்-டேக் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரம் கடந்த 2014-ம் ஆண்டு 734 விநாடிகளாக இருந்ததாகவும், அந்தக் காத்திருப்பு நேரம் தற்போது, 47 விநாடிகளாக குறைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனை 30 விநாடிகளாக விரைவில் குறைப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், எரிபொருளுக்கு செலவிடப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாய் தற்போது சேமிப்பாக மாறியிருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான முதலீடு அறக்கட்டளை மாதிரிக்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதாக தெரிவித்த நிதின் கட்கரி, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முன்வருமாறும் அழைப்பு விடுத்தார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொழில்நுட்ப மேம்பாடு மூலம் 7 உலக சாதனைகளைப் படைத்திருப்பதாகவும், இதன்மூலம் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இரண்டாவது மிகப்பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியாவை உருமாற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கழிவுகளை மேலாண்மை செய்து நீடித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் விதமாக, புதுதில்லி சுற்றுவட்டச் சாலைத் திட்டத்தில் 30 லட்சம் டன் குப்பைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.
மின்சார வாகன நிலையான எதிர்காலத்திற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தூய்மையான ஆற்றலை ஊக்குவித்தல், கார்பன் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவற்றில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கான கண்ணோட்டத்தையும் மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டார்.
***
AP/ES/RJ/KRS
(Release ID: 1935718)
Visitor Counter : 158