பிரதமர் அலுவலகம்

2023 சர்வதேச யோகா தினத்தின்போது பிரதமர் வெளியிட்ட காணொளிச் செய்தியின் தமிழாக்கம்

Posted On: 21 JUN 2023 7:15AM by PIB Chennai

வணக்கம்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! இந்த ஆண்டு பல்வேறு பணிகளின் காரணமாக தற்போது நான் அமெரிக்காவில் இருக்கிறேன். எனவே காணொளிச் செய்தியின் வாயிலாக உங்களுடன் இணைகிறேன்.

நண்பர்களே,

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5:30 மணி அளவில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவிருக்கிறேன். இந்தியாவின் அழைப்பை ஏற்று இதுவரை இல்லாத அளவில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் திரண்டிருப்பது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச யோகா தினம் குறித்து முன்மொழியப்பட்ட போது ஏராளமான நாடுகள் ஆதரவளித்தன. அப்போது முதல், சர்வதேச யோகா தினம் வாயிலாக யோகா என்பது உலகளாவிய இயக்கமாகவும், சர்வதேச உணர்ச்சியின் வெளிப்பாடாகவும் மாறியுள்ளது.

நண்பர்களே,

‘யோகாவின் பெருங்கடல் வளையம்' என்ற முன்முயற்சியால் இந்த ஆண்டு யோகா தின விழாக்கள் கூடுதல் சிறப்பு பெறுகின்றன. யோகாவின் தார்ப்பரியம் மற்றும் பெருங்கடலின் நீட்சிக்கு இடையேயான பரஸ்பர  தொடர்பின் அடிப்படையில் இந்த சிந்தனை அமைந்துள்ளது. நீர் வளங்களைப் பயன்படுத்தி நமது ராணுவ வீரர்கள் யோக பாரத்மாலா மற்றும் யோக சாகர்மாலாவை உருவாக்கினார்கள். அதேபோல ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான இந்தியாவின் இரண்டு ஆராய்ச்சித் தளங்கள் அமைந்துள்ள பூமியின் இரண்டு துருவங்கள் கூட யோகாவினால் இணைக்கப்பட்டுள்ளன. நாடு மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இந்த தனித்தன்மை வாய்ந்த கொண்டாட்டங்களில் பெருமளவு கலந்து கொண்டிருப்பது, யோகாவின் புகழை எடுத்துரைக்கிறது.

சகோதர, சகோதரிகளே,

யோகா நம்மை இணைப்பதாக துறவிகள் கூறியுள்ளனர்.  ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற கருத்தின் விரிவாக்கம் தான் யோகா பற்றிய விழிப்புணர்வு. யோகா குறித்த பிரச்சாரம் என்பது, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணர்வை எடுத்துரைக்கிறது. அதனால்தான் இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்புக்கு ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘வசுதைவ குடும்பகத்திற்காக யோகா’ என்ற கருப்பொருளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.

ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் வாய்ந்த சமூகத்தை உருவாக்கும் யோகாவில், கூட்டு சக்தி அதிகமாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் முதல் ஸ்டார்ட் அப் இந்தியா பிரச்சாரம் வரையும், தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பது முதல் கலாச்சார இந்தியாவைப் புதுப்பிப்பது வரையும், அதிவிரைவான வேகத்தில் இன்று நாடு இயங்குகிறது; இதில் இளைஞர்கள் தான் ஆற்றல் சக்தியாக செயல்படுகிறார்கள். ஒன்றிணைக்கும், ஏற்றுக் கொள்ளும் மற்றும் அரவணைக்கும் பாரம்பரியங்களை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சமூக கட்டமைப்பு, அதன் ஆன்மீக உணர்வு மற்றும் கோட்பாடுகள் மற்றும் அதன் தத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை எப்போதும் வளர்த்து வந்துள்ளன. இதுபோன்ற உணர்வுகளை வலுப்படுத்தி, சக உயிரினம் மீதான அன்பின் அடிப்படையில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் உள்ளுணர்வுடன் நம்மை இணைத்து, உள்ளார்ந்த பார்வையை யோகா விரிவுபடுத்துகிறது. எனவே, யோகா மூலமாக நமது முரண்பாடுகள், தடைகள், எதிர்ப்புகளை நாம் நீக்க வேண்டும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உலகிற்கு எடுத்துக்காட்டாக நாம் முன் வைக்க வேண்டும்.

சகோதர, சகோதரிகளே,

ஒருவர் தமது பணிகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யும்போது யோகா முழுமை பெறுகிறது. யோகாவின் மூலம் தன்னலமற்ற செயலை நாம் அறிகிறோம், கர்மா முதல் கர்மயோகா வரையிலான பயணத்தை நாம் முடிவு செய்கிறோம். நமது உடல் வலிமையும், மன வளர்ச்சியும் தான் வளர்ந்த இந்தியாவின் அடித்தளமாக விளங்கும். இந்த உறுதிப்பாடுடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

***

 (Release ID: 1933796)

AP/BR/KRS



(Release ID: 1935611) Visitor Counter : 102