வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

உலகின் மிகப்பெரிய நகரத் தூய்மைக் குறித்தக் கணக்கெடுப்புப் பணியின் எட்டாவது அத்தியாயம் தொடக்கம்

Posted On: 27 JUN 2023 12:52PM by PIB Chennai

ஸ்வட்ச் சர்வேக்ஷன் 2023 என்ற உலகின் மிகப்பெரிய நகரத் தூய்மைக் கணக்கெடுப்பின் எட்டாவது அத்தியாயத்தைத் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த அமைச்சகம் சார்பில் கள மதிப்பீட்டுப் பணிகள் சுமார் 3,000 கள மதிப்பீட்டாளர்களுடன் 2023 ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது.   நாடு முழுவதும் 4,500 நகரங்களில் நடைபெறும் இந்த கள ஆய்வை ஒரு  மாதத்திற்குள் நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலையானத் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகளை அதிவேக அணுகுமுறையில் நிறைவேற்றும் இலக்கை எட்ட நகரங்களுக்கு உதவும் முயற்சியாக,  மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின சார்பில் கடந்த
2016-ம் ஆண்டு ஸ்வட்ச் சர்வேக்ஷன் எனப்படும் கண்காணிப்பு பணி அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்தக் கணக்கெடுப்பு பணி இந்த ஆண்டு பத்து கோடி மக்களிடம் நடத்தப்பட உள்ளது.

நான்கு காலாண்டுகளைக் கொண்ட ஸ்வட்ச் சர்வேக்ஷன் 2023-ல்  முதல் மூன்று கள ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் நான்காவது காலாண்டு கள ஆய்வு 2023 ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது.

ஸ்வட்ச் பாரத் இயக்கத்தின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்வட்ச் சர்வேக்ஷன் தற்போது இந்த ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.  நகரங்களில் மனிதர்கள் செய்து வந்த சாக்கடைக் கழிவுகளை அகற்றும் பணிகள், இனி இயந்திரங்கள் மூலம்  மேற்கொள்ளப்படும்.  மேலும் வீடுதோறும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளைச் சேகரித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த கழிப்பிட வசதி, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை ஆகியவையே ஸ்வட்ச் சர்வேக்ஷன்-னின் முக்கிய இலக்குகளாகும்.  கடந்த 2022 மே 24-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்வட்ச் சர்வேக்ஷன் 2023-ன் நகர்ப்புறத் தூய்மை குறித்த காரணிகளை பொதுமக்களிடமிருந்து தொலைபேசி மூலம் பெறும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்தத் தூய்மைப் பணிகளை மேலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டதாக மாற்றும் வகையில், வோட் ஃபார் மை சிட்டி ஆப், வோட் ஃபார் மை சிட்டி போர்டல், மைகவ் ஆப், ஸ்வட்சதா ஆப், க்யூஆர் கோட்ஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து குடிமக்கள் தங்களுடையக் கருத்துக்களை ஜூலை 1-ம் தேதி முதல் பதிவு செய்யலாம்.  கடந்த சில ஆண்டுகளிலும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு, நகர நிர்வாகத்தின் பங்களிப்புடன் இதே முறையில் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, இந்தக் கணக்கெடுப்பு பணியில் மக்களின் பங்களிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. 

***

AP/ES/RJ/KRS



(Release ID: 1935588) Visitor Counter : 306