நித்தி ஆயோக்

நிதி ஆயோக்கின் 8-வது ஆட்சிக்குழு கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்


மத்திய, மாநில அரசுகளும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒன்றுபட்ட இந்தியாவாக செயல்பட வேண்டும் மற்றும் 2047-ல் வளர்ந்த இந்தியாவுக்கான மக்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

அமிர்த காலத்துக்கான தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல நித்தி ஆயோக்குடன் இணைந்து செயல்படுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதமர் வலியுறுத்தினார்.

பல்வேறு வளர்ச்சிப் பிரச்சினைகள், நிதி ஒழுக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, நீர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் பேசினார்.

முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் பல்வேறு கொள்கை அளவிலான பரிந்துரைகளை வழங்கியதோடு மற்றும் மத்திய-மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு தேவைப்படும் மாநிலங்கள் தொடர்பான சிக்கல்களைக் குறிப்பிட்டனர்.

கூட்டத்தில் 19 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள் கலந்து கொண்டன

Posted On: 27 MAY 2023 7:33PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நிதி ஆயோக்கின் 8-வது ஆட்சிக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். புது தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் 19 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள்/துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.

 

மத்திய, மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், 2047-ம் ஆண்டுள் வளர்ந்த இந்தியாவுக்கான மக்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாநிலங்கள் தங்களுக்கான உத்திகளை உருவாக்கி, தேசிய வளர்ச்சி திட்டத்துடன் அதை இணைக்க நித்தி ஆயோக் உதவ வேண்டும் என்றார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நித்தி ஆயோக்குடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனால் நாடு அமிர்த காலத்தின் பார்வையை அடைய முடியும் என பிரதமர் கூறினார்.

 

ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம் (ADP) மற்றும் ஆர்வமுள்ள வட்டாரங்கள் திட்டம் (ABP) போன்ற திட்டங்கள் கூட்டுறவு மற்றும் ஆரோக்கியமான போட்டி நிறைந்த கூட்டாட்சியை வலுப்படுத்த நித்தி ஆயோக் பல முயற்சிகளை எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த இரண்டு திட்டங்களும் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் மாவட்டங்கள் இணைந்து செயல்படும் ஆற்றலையும், அடித்தட்டில் உள்ள சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தரவு சார்ந்த நிர்வாகத்தின் தாக்கத்தையும் காட்டுகின்றன.

 

சர்வதேச சிறுதானிய ஆண்டில் சிறுதானியங்களை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் நீர் பாதுகாப்பை நோக்கி செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் விவாதித்தார்.

 

மாநில அளவில் நிதி ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் பேசினார். விரைவு சக்தி தளத்தை உட்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களுக்கு மட்டுமின்றி, உள்ளூர் மேம்பாடு மற்றும் சமூக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

நாட்டில் நடைபெறும் ஜி-20 கூட்டங்கள் குறித்து பேசிய அவர், ஜி-20 உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அதே வேளையில், மாநிலங்களுக்கு சர்வதேச  வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார்.

 

உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரித்தல், நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல், ஏக்தா மால்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் பேசினார். பெண் சக்தியைப் பற்றிப் பேசுகையில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 2025-ம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் பேசினார்.

 

முதலமைச்சர்/துணைநிலை ஆளுநர்கள் பல்வேறு கொள்கை அளவிலான ஆலோசனைகளை வழங்கினர். மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவைப்படும் மாநிலங்கள் தொடர்பான குறிப்பிட்ட விசயங்களை அவர்கள் குறிப்பிட்டனர். பசுமை உத்திகளைத் தேர்ந்தெடுப்பது, மண்டல வாரியாக திட்டமிடல், சுற்றுலா, நகர்ப்புற திட்டமிடல், விவசாயம், வேலைத் தரம், தளவாடங்கள் போன்றவற்றில் சில முக்கிய பரிந்துரைகளை அளித்தனர்.

 

கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்காக முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். மாநிலங்களின் கவலைகள், சவால்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை நித்தி ஆயோக் ஆய்வு செய்து முன்னேற்றத்திற்கான வழியை திட்டமிடும் என பிரதமர் தெரிவித்தார்.

***

AP/CR/DL



(Release ID: 1927775) Visitor Counter : 256