எரிசக்தி அமைச்சகம்
14ஆவது தூய்மை எரிசக்திக்கான அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் மற்றும் 8ஆவது புதுமை இயக்க கூட்டத்தை ஜி20 எரிசக்தி மாற்றத்திற்கான அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஜூலை 2023-ல் கோவாவில் இந்தியா நடத்த உள்ளது
Posted On:
26 MAY 2023 11:31AM by PIB Chennai
14ஆவது தூய்மை எரிசக்திக்கான அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் மற்றும் 8ஆவது புதுமை இயக்கக் கூட்டத்தை ஜி20 எரிசக்தி மாற்றத்திற்கான அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஜூலை 2023-ல் கோவாவில் இந்தியா நடத்த உள்ளது. ஜூலை மாதம் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
மேம்பட்ட தூய்மை எரிசக்திக்கு ஒருங்கிணைந்து செயல்படுதல் என்ற கருப்பொருளில் வட்டமேசை மாநாடுகளும், பல்வேறு அமர்வுகளும் நடைபெற உள்ளன. இது தொடர்பாக புதுதில்லியில் நேற்று (மே 25) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங்கும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்கும் இணைந்து இந்தக் கூட்டங்களுக்கான இணையதளம் மற்றும் சின்னத்தை அறிமுகம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஆர் கே சிங், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று கூறினார். கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தூய்மையான எரிசக்திக்கு மாறுவதில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும். பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நாடாக இந்தியா உள்ளதென்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், கார்பன் வெளியேற்றத்தை குறைத்து தூய எரிசக்தியை நோக்கிய மாற்றத்தை இந்தியா வேகமாக மேற்கொண்டு வருகிறது என்று கூறினார். பாதுகாப்பான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றம் என்பது எல்லைகளைத் தாண்டிய ஒரு சவால் என்று திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
தூய்மை எரிசக்தி அமைச்சரவை கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பாகும். இதில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 29 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
எம் ஐ எனப்படும் புதுமை இயக்கத்தின் முதற்கட்டம் 2015 ஆம் ஆண்டிலும், இரண்டாவது கட்டம் 2021 ஆம் ஆண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 23 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
******
AD/PLM/MA/KPG
(Release ID: 1927450)
Visitor Counter : 172