குடியரசுத் தலைவர் செயலகம்

மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் குந்த்தியில் ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் குடியரசுத்தலைவர் கலந்துகொண்டார்

Posted On: 25 MAY 2023 2:14PM by PIB Chennai

ஜார்கண்ட் மாநிலம் குந்த்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் இன்று (25.05.2023) ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்துகொண்டு உரையாற்றினார்.

மாநாட்டில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர் ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்தது குறைபாடல்ல என்றார். நமது நாட்டில் பெண்களின் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும் எண்ணற்ற உதாரணங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், சமூக சீர்திருத்தம், அரசியல், பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வணிகம், விளையாட்டு, ராணுவம் மற்றும் இதர துறைகளில் மதிப்புமிகு பங்களிப்பு செய்த பெண்களை பற்றியும் எடுத்துரைத்தார். எந்தத்துறையிலும் வெற்றி பெறுவதற்கு தங்களின் திறனை தாங்களே அங்கீகரிப்பது மிகவும் முக்கியம் என்றும், மற்றவர்களின் மதிப்பீட்டை வைத்து தங்களின் செயல்பாட்டை தீர்மானிக்கக்  கூடாது என்றும் அவர் கூறினார். பெண்களிடம் உள்ள அளவிட முடியாத ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலில் சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்கள் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குடியரசுத்தலைவர் கூறினார். ஜார்கண்ட் மாநில சகோதர, சகோதரிகளின் கடின உழைப்பு மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும், அதேபோல் நாட்டின் பொருளாதார கிளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க  பங்களிப்பை செய்திருப்பதாக அவர் கூறினார். நம்பிக்கையோடு முன்னேறுங்கள் என்று அவர் அறிவுறுத்தினார். இந்த மாநாட்டின் மூலம் பெண்கள் தங்களின் உரிமைகள் பற்றியும், பெண்களின் நலனுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பழங்குடி சமூகத்தினர் பல துறைகளில் சிறந்த உதாரணங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பழங்குடி சமூகத்தின் வரதட்சணை முறை இல்லை என்பது இவற்றில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.  நமது சமூகத்தில் பலர், நன்கு படித்தவர்கள் கூட, இந்த வரதட்சணை முறையைக் கைவிடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

******

AD/SMB/AG/KPG



(Release ID: 1927191) Visitor Counter : 147