மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இந்தியாவின் மீன் உற்பத்தி 2021-22ம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்துள்ளது: திரு பர்ஷோத்தம் ரூபாலா
Posted On:
19 MAY 2023 4:36PM by PIB Chennai
இந்தியாவின் மீன் உற்பத்தி 2021-22ம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்திருப்பதாக, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். சாகர் பரிக்கிராமா திட்டத்தின் 5-வது கட்ட யாத்திரை கடந்த 17ம் தேதி மும்பையில் தொடங்கி இன்று (மே 19, 2023) கோவாவில் முடிவடைந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திரு ரூபாலா, பல்வேறு விதமான மீன் வகைகளை உற்பத்தி செய்யும் தொன்மை வாய்ந்த இயற்கை வளங்கள், இந்தியாவில் உள்ளன என்றார். உணவு, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு, வருமானம் என பல வகைகளில் நமக்கு உறுதுணையாக இருக்கும் மீனில், உடல் ஆரோக்கியத்திற்கும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கும் துணைபுரியும் ஒமேகா -3 ஃபேட்டி அமிலம் அதிகளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த மீன்வளத்துறை 2.8 கோடி பேருக்கு வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கியிருப்பதுடன், பலரை தொழில்முனைவோராகவும் மாற்றியிருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த 75 ஆண்டுகளில் மீன்வளத்துறை, 22 மடங்கு மீன் உற்பத்தியை அதிகரித்து வர்த்தகம் குவிக்கும் துறையாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 1950-51ம் நிதியாண்டில் 7.5 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி, கடந்த 2021-22ம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னாக அதிகரித்து சாதனை படைத்து இருப்பதாகவும், இது கடந்த 2020-21ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 10.34 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். உலக நாடுகளில் மீன் உற்பத்தியில் 8 சதவீதத்தை பூர்த்தி செய்து இந்திய மிகப்பெரிய மூன்றாவது மீன் உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய திரு ரூபாலா, மீன்வளர்ப்பில் உலகின் இரண்டாவது முன்னணி நாடாகத் திகழ்வதாகவும் கூறினார்.
மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், சலுகைகள், மீன் இனப்பெருக்க தொழில்நுட்பம் உள்ளிட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை, உள்நாட்டு மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
******
AD/ES/RS/KRS
(Release ID: 1925625)
Visitor Counter : 141