கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரம்மபுத்ராவில் உள்ள ஏழு சமயத்தலங்களை இணைக்கும் ‘நதி அடிப்படையிலான சுற்றுவட்ட சமய சுற்றுலா’வுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 19 MAY 2023 1:01PM by PIB Chennai

அசாமின் குவாஹத்தியில், இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் ஆணையம், சாகர் மாலா மேம்பாட்டுக்கழகம், அசாம் சுற்றுலா மேம்பாட்டுக்கழகம், அசாம் மாநில உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் போக்குவரத்துத்துறை ஆகியவற்றுக்கிடையே நதி அடிப்படையிலான சுற்றுவட்ட சமய சுற்றுலாவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அசாமில் நதிநீர் சுற்றுலாத்துறையின் புதிய அத்தியாயத்தை திறப்பதற்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்த நிகழ்வில் அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஆகியோர் பங்கேற்றனர்.

குவாஹத்தியை சுற்றியுள்ள ஏழு வரலாற்றுச் சிறப்புமிக்க சமயத்தலங்களுக்கு இடையே விரும்பும் இடத்தில் ஏறி, விரும்பும் இடத்தில் இறங்கும் நவீன படகுச் சேவைக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. காமாக்யா, பாண்டுநாத், அஸ்வத்க்லந்தா, டோல் கோவிந்தா, உமானந்தா, சக்ரேஸ்வர்ஆனியாத்தி சத்ரா ஆகியவை இந்த ஏழு இடங்களாகும்.

இந்தத் திட்டம் 12 மாதங்களுக்குள் ரூ. 45 கோடி முதலீட்டில் பூர்த்தி செய்யப்படும். அனுமான் கட் என்ற இடத்தில் இருந்து உசன் பசார் வரையிலான இந்த சுற்றுவட்டப் படகுச்சேவை முழுவட்டத்தை இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் நிறைவு செய்யும்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், நதிநீர் அடிப்படையிலான சுற்றுவட்ட சுற்றுலா மேம்பாடு என்பது அசாம் சுற்றுலாத்துறைக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகும் என்றார்.  ஆற்றல்மிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் அசாமின் உள்நாட்டு நீர்வழிப்பாதைகளின்  வளமான திறனை மேம்படுத்தும் பயணத்தில் முன்னேறி வருகிறோம் என்றும் இது ஒட்டுமொத்த வடகிழக்கிற்கு சக்தியை அளித்து  புதிய இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக மாறும் என்றும் அவர் கூறினார்.

 அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், இன்றைய ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு அசாம் மாநில சுற்றுலாத்துறையின் புதிய அத்தியாயமாக இருக்கும் என்றார்.  மிகவும் அழகான நீர்வழி சுற்றுவட்ட சமயசுற்றுலா என்பது குவாஹத்தியின் ஆன்மிக பாரம்பரியத்தை சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

 ******

AD/SMB/AG/KRS


(Release ID: 1925486) Visitor Counter : 177