புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
கடலோரக் காற்றாலை எரிசக்தித் திட்டம் குறித்து ஜி20 அமைப்பின் மூன்றாவது எரிசக்தி மாற்றப் பணிக்குழுக் கூட்டம்
Posted On:
17 MAY 2023 12:57PM by PIB Chennai
ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது எரிசக்தி மாற்ற பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக “எரிசக்தி மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக கடலோரக் காற்றாலையைப் பயன்படுத்துதல்: எதிர்காலத் திட்டம்” என்ற தலைப்பில் உயர்நிலைக் கூட்டம் மும்பையில் மே 16-ஆம் தேதி நடைபெற்றது. உலகளாவிய காற்றாலை எரிசக்திக் கவுன்சில் மற்றும் தேசிய காற்றாலை எரிசக்திக் கழகத்துடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அரசுப் பிரதிநிதிகளுடன், நிதி நிறுவனங்கள் மற்றும் முன்னணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைச் செயலாளர் திரு பூபேந்தர் சிங் பல்லா, காற்று மாசு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு கடலோரக் காற்றாலைத் திட்டம் தீர்வாக அமையும் என்று கூறினார். இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு பெருமடங்கு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். கடலோரக் காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்தும் நாடுகள், வர்த்தகங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை இணைந்து பணியாற்றவும், தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய கடலோரக் காற்றாலை திட்டத்திற்கு ஆதரவளித்து கட்டமைக்கவும், தூய்மையான எரிசக்தி மாற்ற இலக்கை அடையவும் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்படக்கூடிய நீர் மற்றும் அணு எரிசக்திகளின் திறன்களுடன் ஒப்பிடும் வகையில் கடலோரக் காற்றாலைத் திட்டத்தை உருவாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று பணிக்குழுவின் தலைவரும், மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளருமான திரு அலோக் குமார் கூறினார். எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தில் தொழில்துறையினர் அதிக ஈடுபாடுடன் பங்கேற்பார்கள் என்றும், மதிப்புச் சங்கிலியில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924695
******
AP/BR/KRS
(Release ID: 1924751)
Visitor Counter : 179