குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் தலைவர் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் நடந்து வரும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தார்
Posted On:
13 MAY 2023 4:53PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் 'தன்னிறைவு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்)' பிரச்சாரத்தை வடகிழக்கு மாநிலங்களின் தொலைதூர கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின்(கேவிஐசி) தலைவர் திரு.மனோஜ் குமார், மே 8 முதல் மே 13 வரை அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வதோடு, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் (பிஎம்இஜிபி) பயனாளிகளை அவர் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தவாங் நகரில் கேவிஐசியின் துணை அலுவலகம் திறக்கப்படுமென அறிவித்தார். இட்டாநகரில் உள்ள கேவிஐசி அலுவலகத்திலிருந்து தவாங்கை அடைய தோராயமாக 48 மணி நேரம் அதாவது 2 நாட்கள் ஆகும் என்பதால், தவாங்கில் துணை அலுவலகம் திறக்கப்பட்ட பிறகு அதிகபட்ச வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் அவர் கூறினார்.
கவுகாத்தியில் இருந்து தவாங்கிற்குச் செல்லும் வழியில், மே 9-ம் தேதியன்று மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள போம்டிலாவில் இளம் தொழில்முனைவோர் மத்தியில் உரையாற்றிய அவர், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். கேவிஐசியின் உள்நாட்டு தயாரிப்புகள் இப்போது உலகளவில் வேகமாக அங்கீகாரம் பெற்று வருவதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் இளம் தொழில் முனைவோர் தரமான உள்ளூர் தயாரிப்புகளைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தவாங்கில் உள்ள மொன்பா கைவினை காகிதத் தாயாரிப்பு அலகுக்குச் சென்று, அங்குள்ள கைவினைக் கலைஞர்களை மனோஜ் குமார் சந்தித்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் 1,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கலையான மொன்பா கைவினை காகிதத் தொழில் முற்றிலும் அழிந்த நிலையில், கேவிஐசியின் முயற்சியால் கடந்த 2020-ம் ஆண்டு மீட்டெடுக்கப்பட்டது. மே 12-ம் தேதி அருணாச்சலத்தில் உள்ள போம்டிலாவில் 20 பயனாளிகளுக்கு ஊறுகாய் தயாரிக்கும் இயந்திரத்தை மனோஜ் குமார் வழங்கினார். கிராமோத்யோக் விகாஸ் யோஜனாவின் கீழ் இந்திய பாரம்பரிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கருவிகள் மற்றும் இயந்திரங்களை கேவிஐசி விநியோகிக்கிறது. இதன் மூலம் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் வருமானம் அதிகரிப்பதோடு, இந்திய பாரம்பரிய தொழில்கள் பாதுகாக்கப்படுகின்றன.
****
AD/CR/DL
(Release ID: 1923915)
Visitor Counter : 151