பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் காந்திநகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர்
ரூ.2,450 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்
சுமார் ரூ.1950 கோடி மதிப்பிலான பிரதமரின் வீட்டுவசதி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்
சுமார் 19,000 வீடுகளின் கிரஹப்பிரவேச விழாவில் பங்கேற்றதுடன் பயனாளிகளுக்கு சாவிகளையும் வழங்கினார்
“வீட்டுவசதித் துறையை பிரதமரின் வீட்டுவசதி திட்டம் முன்னேற்றியிருக்கிறது. குறிப்பாக ஏழைகளும் நடுத்தரப் பிரிவினரும் பயனடைந்துள்ளனர்”
“குஜராத்தின் இரட்டைஎன்ஜின் அரசு இரட்டிப்பு வேகத்தில் பணியாற்றுகிறது”
”எங்களைப் பொறுத்தவரை நாட்டின் வளர்ச்சி என்பது நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு”
“எங்கும் பாகுபாடு இல்லை என்ற நிலையே மதச்சார்பின்மையின் உண்மையான அர்த்தம்”
“ஏழைகளுக்கான மரியாதை மற்றும் அதிகாரமளித்தல் என்ற ஆயுதத்தின் மூலம் ஏழ்மைக்கு எதிரான போரில் வீட்டிற்கு உறுதியான அஸ்திவாரத்தை போட்டுள்ளோம்”
“பல திட்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் வீடுகள்”
“நகர்ப்புறத்தை திட்டமிடுவதில் இன்றைக்கு எளிமையான வாழ்க்கை முறை மற்றும் தரமான வாழ்க்கை முறைக்கு சமமான மு
Posted On:
12 MAY 2023 2:22PM by PIB Chennai
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார். இதில் நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் விநியோகம், சாலை மற்றும் போக்குவரத்து, சுரங்கங்கள், கனிமங்கள் ஆகிய துறைகளில் ரூ.2450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். பிரதமரின் கிராமம் மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் ரூ.1950 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன், இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட19,000 வீடுகளின் கிரஹப்பிரவேசத்தில் பங்கேற்றதுடன், பயனாளிகளுக்கு சாவிகளையும் வழங்கினார் பிரதமர். மேலும் காணொலி காட்சி வாயிலாக பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
விழாவில் பேசிய பிரதமர், பயனாளிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாபெரும் தியாகத்தின் மூலம் இந்த தேசம் கட்டி எழுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு குஜராத்தில் அமைந்த புதிய அரசின் கீழ் மாநிலத்தின் வளர்ச்சி வேகம் எடுத்திருப்பது திருப்தி அளிப்பதாகவும் கூறினார். குஜராத்தின் மாநில பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒடுக்கப்பட்டவர்களை முன்னிறுத்தி நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
25 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம், 2 லட்சம் தாய்மார்களுக்கு பிரதமரின் மகப்பேறு நிதியுதவி, 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நவீன உள்கட்டமைப்பு வசதிக்கான பணிகள் ஆகிய முனைப்பான நடவடிக்கைகளை பட்டியலிட்ட பிரதமர், இவை இரட்டை என்ஜின் குஜராத் அரசின் பணிகள், இரட்டை வேகம் எடுத்திருப்பதை உறுதிசெய்வதாகக் கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில் எதிர்பாராத வளர்ச்சியை மக்கள் அனுபவித்து வருவதாகவும், ஒரு காலத்தில் அடிப்படை வசதிகளை பெறுவதற்கே பெரிதும் சிரமப்பட்ட குடிமக்கள், தற்போது அந்த சிக்கலில் இருந்து மீண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
அரசின் திட்டப்பலன்கள் நூறு சதவீதம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தப்படுவதாகவும், வளர்ச்சி என்பது எங்களைப் பொறுத்தவரை நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பாக பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். ஊழல் மற்றும் பாகுபாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அணுகுமுறை என்று குறிப்பிட்ட பிரதமர், எங்கும் பாகுபாடு இல்லை என்ற நிலையே மதச்சார்பின்மையின் உண்மையான அடையாளம் என நம்புவதாகவும் தெரிவித்தார். சமூக நீதி நிலைநாட்டப்படும் போது, அரசு திட்டங்களின் பயன்கள் சமுதாயத்தின் ஒவ்வொருவரையும் சென்றடையும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். கடந்த ஆண்டு 32,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், அடிப்படைத் தேவைகளுக்கான தேடல் குறைந்திருப்பதால், ஏழை மக்களின் தன்னம்பிக்கை உத்வேகமடைந்திருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய மற்றும் முந்தைய மத்திய அரசுகளின் பணி கலாச்சாரத்திற்கு இடையேயான வேறுபாட்டை பிரதமர் விளக்கினார். முந்தைய ஆட்சியில் வீட்டுவசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 75 சதவீத வீடுகள் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் துரிதமான நடவடிக்கைகளால் ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க பாடுபட்டதுடன், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு மத்திய அரசின் நி்தியுதவி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பல திட்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் வீடுகள் இருப்பதாக அவர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை, சௌபாக்யாத் திட்டத்தின் கீழ் மின் வசதி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு, ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் என அனைத்து அனைத்து வசதிகளும் இந்த வீடுகளில் உள்ளது. இதைத் தவிர ஏழை மக்களுக்கான பாதுகாப்பு கேடயமாக இலவச மருத்துவ சிகிச்சை, இலவச ரேஷன் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மகளிருக்கு அதிகாரமளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள் ஏழை மக்களுக்காக கட்டி தந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதில் 70 சதவீதம் வீடுகள் குடும்ப தலைவிகளின் பெயரில் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் பெண் பயனாளிகள் லட்சாதிபதிகளாக மாறியிருப்பதையும் எடுத்துரைத்தார். கோடிக்கணக்கான பெண்கள் முதல் முறையாக சொத்துக்கு அதிபதியாகும் வாய்ப்பை அளித்திருப்பதையும் குறிப்பிட்டார்.
நகரமயமாக்கல், எதிர்காலத்தில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மத்திய அரசு பணியாற்றி வருவதாகக் கூறிய பிரதமர், ராஜ்காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார். குறைந்த செலவிலான வீடுகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 6 நகரங்களில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நவீன வீடுகள் கட்டப்பட்டு வருவதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த வீடுகள் விரைவில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ரியல் எஸ்டேட் துறையில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினரை ஏமாற்றும் மோசடியை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையும், அவ்வாறு வீடு வாங்கும் போது நடுத்தர வர்க்கத்தினருக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் ரெரா சட்டத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். குஜராத் அரசின் பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினர் வீட்டு கடனுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும், 5 லட்சம் குடும்பங்களுக்கு 11,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் அடுத்தடுத்த இலக்கை நோக்கி வேகமெடுக்கும் எனவும், எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டே குஜராத்தின் பல நகரங்கள் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும், அம்ருத் இயக்கத்தின் கீழ் 500 நகரங்களில் அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதையும், இதில் 100 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
நகரமயமாக்கலை பொறுத்தவரை எளிமையான வாழ்க்கை முறை மற்றும் தரமான வாழ்க்கை ஆகிய இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அதிக நேரம் செலவிடுவதைத் தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது 20 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு 250 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை, கடந்த 9 ஆண்டுகளில் 600 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இரட்டை நகரங்கள் என வர்ணிக்கப்படும் அகமதாபாத்-காந்தி நகர் ஆகிய நகரங்கள் இன்றைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், குஜராத்தில் பல்வேறு நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதையும் நினைவுகூர்ந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு 14 முதல் 15 சதவீதமாக இருந்த கழிவு மேலாண்மை, தற்போது 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நடைமுறைகள் முந்தைய அரசாங்கத்திலும் மேற்கொள்ளப்பட்டிருந்தால், நமது நகரங்களில் மலையளவுக்கு குப்பைகள் குவிந்திருக்காது என்றும் தெரிவித்தார். எனவே நமது நகரங்களில் இருந்து குப்பைகளை அகற்ற அரசு தீவிரமாக பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், பசுமையான சுற்றுச்சூழல், மாசில்லா காற்று ஆகியவற்றின் மூலமே நமது நகரங்களில் தரமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
குஜராத் அரசின் நீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோக முறையை பாராட்டிய பிரதமர், 250 நகரங்கள் மற்றும் 15,000 கிராமங்களில் 3000 கி.மீ. நீள குடிநீர் முக்கிய இணைப்புகளும் 1.25 லட்சம் கி.மீ. குடிநீர் விநியோக இணைப்புகளும் ஏற்படுத்தப் பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
எனவே வளர்ச்சியின் வேகத்தை அதே பாதையில் நிர்வகிக்க நம் அனைவரும் முன்வருவோம் என்று வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி நாம் அனைவரும் முயற்சி செய்தால் அமிர்த காலத்திற்கென உருவாக்கியுள்ள இலக்குகளை நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர் பாட்டீல், அம்மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னணி
பனஸ்கந்த் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டங்களை தொடங்கிவைத்தல், அகமதாபாத்தில் ஆற்று மேம்பாலம், நரோடாவில் கழிவுநீர் சேகரிப்பு கட்டமைப்பு, மெஹ்சனா மற்றும் அகமதாபாத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, தாஹேகாமில் அரங்கு உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஜூனாகத் மாவட்டத்தில் பெரிய குழாய் திட்டம், காந்திநகர் மாவட்டத்தில் நீர் விநியோகத் திட்டங்கள், மேம்பாலங்கள் கட்டுமானம், புதிய நீர் விநியோக நிலையம், பல்வேறு நகரத் திட்டச்சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், கட்டி முடிக்கப்பட்டுள்ள சுமார் 19,000 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் வீடுகளின் சாவியை பயனாளிகளிடம் அவர் வழங்கினார். சுமார் 1950 கோடி ரூபாய் செலவில் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
******
AD/ES/AG/KPG
(Release ID: 1923794)
Visitor Counter : 177
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam