சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஒருங்கிணைந்த மருத்துவத் துறையில் இணைந்து ஆராய்ச்சி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஆயுஷ் அமைச்சகமும் கையெழுத்திட்டன

Posted On: 11 MAY 2023 2:47PM by PIB Chennai

நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும் நோக்கிலும், பாரம்பரிய மருத்துவத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையே ஒருங்கிணைந்த மருத்துவத் துறையில் இணைந்து ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால், மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், நிதி ஆயோக் உறுப்பினர்  டாக்டர் வி.கே பால் ஆகியோர் முன்னிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ஸ்ரீ ராஜேஷ் கோடேச்சா மற்றும் ஐசிஎம்ஆர் செயலாளர் டாக்டர் ராஜீவ் பால் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கவேண்டிய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில், பொது சுகாதார ஆராய்ச்சி முயற்சிகளில் ஆயுஷ் அமைச்சகமும், ஐசிஎம்ஆரும் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர்  இடையே ஒரு குழு உருவாக்கப்படும். இக்குழு காலாண்டுக்கு ஒருமுறை கூடி ஆராய்ச்சித் திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்த வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் மாநாடுகள், பட்டறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

மத்திய ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்ட இந்த முயற்சியைப் பாராட்டிய டாக்டர் மாண்டவியா, "பாரம்பரிய அறிவை நவீன ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுடன் இணைத்து கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் ஆயுர்வேதம் தனக்கான அடையாளத்தை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கும்" என்றார். மேலும் அவர், “நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நோய்களுக்கான சிகிச்சை குறித்த ஆதாரங்களை உருவாக்குவதற்காக ஒருங்கிணைந்த ஆராய்ச்சியை இந்த  ஒப்பந்தம் ஊக்குவிக்கும்” எனக் கூறினார்.

 

மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால் பேசுகையில், "இந்த ஒப்பந்தம் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியை வலுப்படுத்த உதவும்" என்றார். இரு வேறு நிறுவனங்களின் பலம், வளங்கள் மற்றும் திறன்களை ஒருங்கிணைப்பது நல்ல முடிவுகளைத் தரும் என்றும் அவர் கூறினார்.

**  

SMB/CR/KPG



(Release ID: 1923498) Visitor Counter : 142