பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மாலத்தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் அரசு ஊழியர்களுக்காக என்சிஜிஜி மூன்று திறன் மேம்பாட்டு திட்டங்களைத் தொடங்கியது

Posted On: 09 MAY 2023 1:23PM by PIB Chennai

நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (NCGG) சார்பில், வங்கதேசம் (45 அதிகாரிகள்) மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த (50 ஊழியர்கள்) அரசு ஊழியர்களுக்காக மூன்று திறன் மேம்பாட்டு திட்டங்கள் (CBPs) முசோரி வளாகத்தில் தொடங்கப்பட்டன. உள்நாட்டு மற்றும் பிற வளரும் நாடுகளின் அரசு ஊழியர்களுக்கான என்சிஜிஜி-யின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மக்களை மையமாகக் கொண்ட பொதுக் கொள்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் வசுதைவ குடும்பகம்தத்துவத்திற்கு இணங்க, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளின் அரசு ஊழியர்களிடையே ஒத்துழைப்பையும், கற்றலையும் மேம்படுத்துவதை என்சிஜிஜி நோக்கமாகக் கொண்டுள்ளது. சிக்கலான மற்றும் சவாலான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான திறன்களை அரசு ஊழியர்களிடையே வளர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்த 2-வாரப் பயிற்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் கருவிகளின் உதவியுடன் அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தவும் உதவும்.

இந்தப்  பயிற்சியின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய என்சிஜிஜி இயக்குநர் திரு.பாரத் லால், அரசு ஊழியர்கள் துரிதமாக பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அடிப்படை சேவைகளை வழங்கும் அதே வேளையில், மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் அரசு ஊழியர்கள் விரைந்து செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் மக்களுக்கு அரசுகளின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், அவர்களது எதிர்பார்ப்பைக் கண்டறிய ஒரு அமைப்பை உருவாக்குவதும், மக்களின் குறைகளை தீர்க்கும் முறையை நடைமுறைப்படுத்துவது மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார். பொதுமக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் 12 கோடிக்கும் அதிகமான இந்திய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மானியங்கள் மாற்றப்பட்டது குறித்தும் அவர் பேசினார்.

தடையற்ற நிர்வாக முறையைப் பற்றி பேசுகையில், ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் சுத்தமான குழாய் நீரை வழங்குவதற்காக 2019-ம் ஆண்டில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை அவர் மேற்கோள் காட்டினார். இதேபோல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உஜ்வாலா திட்டத்தின்  கீழ் 96 மில்லியன் வீடுகளுக்கு சமையல் எரிவாயுவும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 115 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கழிப்பறைகள் வழங்கப்பட்டதாகவும், இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்ததாகவும் அவர் கூறினார். மக்களுக்கு திறம்பட சேவை செய்ய இரு நாட்டு அரசு ஊழியர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பாரத் லால் வலியுறுத்தினார்.

2014-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட  என்சிஜிஜி, 2024-ம் ஆண்டுக்குள் மாலத்தீவின் 1,000 அரசு ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், 2025-ம் ஆண்டுக்குள் 1,800 அரசு ஊழியர்களுக்கு பயிற்சியளிக்க வங்கதேச அரசுடனுன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை, மாலத்தீவின் 685 அதிகாரிகளுக்கு என்சிஜிஜி பயிற்சி அளித்துள்ளது. இதுவரை வங்கதேசம், கென்யா, தான்சானியா, துனிசியா, மாலத்தீவு என 15 நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு  என்சிஜிஜி பயிற்சி அளித்துள்ளது

***

SM/CR/KPG



(Release ID: 1922833) Visitor Counter : 133