வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த இந்தியா- கனடா அமைச்சர்கள் நிலையிலான 6-வது கட்ட பேச்சுகளில் பங்கேற்பதற்காக திரு பியூஷ் கோயல் கனடா செல்லவுள்ளார்
Posted On:
08 MAY 2023 9:49AM by PIB Chennai
கனடாவில் ஒட்டாவா நகரில் இன்று நடைபெறவுள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த இந்தியா-கனடா அமைச்சர்கள் நிலையிலான 6-வது கட்ட பேச்சுகளில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், கனடாவின் சர்வதேச வர்த்தகம், ஏற்றுமதி மேம்பாடு, சிறுவர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேரி என்ஜியுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார்.
இந்தியா- கனடா இடையே இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்துதல், முதலீட்டு மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு, பசுமை வழித்தடம் உள்ளிட்டவை குறித்து பேச்சுகளில் கவனம் செலுத்தப்படும்.
இந்தியா- கனடா இடையேயான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தப் பேச்சுகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 7 சுற்றுப்பேச்சுகள் நடைபெற்றுள்ளன.
டொரோன்டோ நகரில் மே, 09,10 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும் திரு பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் முதலீடு மேம்பாட்டிற்காக பல்வேறு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். கனடாவின் முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், இந்தியா- கனடா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கனடாவில் உள்ள கனடா மற்றும் இந்திய நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
***
SM/IR/AG/KPG
(Release ID: 1922517)
Visitor Counter : 191