குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 06 MAY 2023 2:04PM by PIB Chennai

ஒடிசாவின் பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில்  குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார்.

மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகம் தனது வரலாற்றின் குறுகிய காலத்திலேயே உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் தனித்துவ அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார மரபுகளின் அடித்தளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் 'புனித தோப்பு' நிறுவியதற்காக குடியரசுத்தலைவர்  பாராட்டினார். சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் பல்லுயிர் பாதுகாப்பிற்கு 'புனித தோப்பு' முக்கியமானது என்று அவர் கூறினார். சமூகம் சார்ந்த இயற்கை வள நிர்வாகத்திற்கு  சிறந்த எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற  சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்று அழைக்கப்படும் இயற்கைக்கு ஏற்ற வாழ்க்கை முறையை உலகிற்கு இந்தியா காட்டியுள்ளது.  மரங்கள், செடிகள், மலைகள், ஆறுகள் அனைத்திற்கும் உயிர் இருப்பதாகவும், மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களும் இயற்கையின் குழந்தைகள் என்றும் நம் பாரம்பரியத்தில் நம்பப்படுகிறது. எனவே, இயற்கையோடு இயைந்து வாழ்வது அனைத்து மனிதர்களின் கடமையாகும். இந்தப் பகுதியில் அமைந்துள்ள சிமிலிபால் தேசியப் பூங்கா பல்லுயிர் பெருக்கத்தில் உலக அளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பட்டம் பெறுவதுடன்  கல்விச் செயற்பாடுகள் நிறைவடைந்ததாக அர்த்தமல்ல. கல்வி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.  உயர்கல்வி பெற்ற பிறகு  சிலர் வேலை செய்வார்கள், சிலர் வணிகம் செய்வார்கள், சிலர் ஆராய்ச்சி செய்வார்கள், ஆனால் ஒரு வேலையைச் செய்ய நினைப்பதை விட வேலை கொடுக்க நினைப்பது நல்லது என்று அவர் கூறினார்.  இப்பல்கலைக்கழகம் தொழில் காப்பக மையத்தை அமைத்து, மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு ஸ்டார்ட் அப்களை அமைப்பதில் உதவிகளை வழங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மாணவர்கள் எப்போதும் போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும், அதற்காக அவர்கள் உயர் திறன்களைப் பெற்று அதிக செயல்திறனை நோக்கி செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

போட்டி என்பது வாழ்க்கையின் இயல்பான பக்கம், ஆனால் ஒத்துழைப்பு என்பது வாழ்க்கையின் அழகான பக்கமாகும் என்று குடியரசுத்தலைவர்  கூறினார். சமுதாயத்தில்  நலிந்தவர்களையும் அடித்தட்டு மக்களையும் அவர்களின் கைகளைப் பிடித்து முன்னேற்ற வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்பு மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்றார் அவர். மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சி மற்றும் ஆர்வத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் சமூகம் மற்றும் நாட்டின் நலனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

***

AD/PKV/DL


(Release ID: 1922289) Visitor Counter : 140