பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 புதிய பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 28 APR 2023 12:52PM by PIB Chennai

வணக்கம்!

நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை நண்பர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே,

பத்ம விருது பெற்ற ஏராளமான ஆளுமைகளும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர், அவர்களை நான் வரவேற்கிறேன். அகில இந்திய பண்பலையாக மாறும் முயற்சியில், அகில இந்திய வானொலியின் பண்பலை சேவை விரிவாக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. அகில இந்திய வானொலியின் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப்பட்டிருப்பது, 85 மாவட்டங்கள் மற்றும் நாட்டின் 2 கோடி மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு. ஒரு வகையில் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் வண்ணங்களின் கண்ணோட்டத்தை இவை முன்னிறுத்துகின்றன. முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களிலும் புதிய பண்பலை அமைக்கப்படுகின்றன.

நண்பர்களே,

வானொலி மற்றும் பண்பலை என்று வரும்போது, எங்களது தலைமுறை மிகுந்த ஆர்வமிக்க நேயர்கள் என்ற உறவு முறையைக் கொண்டுள்ளது. வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதில் நான் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் நாட்களில் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயத்தில் உரையாடவிருக்கிறேன். நாட்டு மக்களுடனான இத்தகைய உணர்வுபூர்வமான இணைப்பு வானொலியால் மட்டுமே சாத்தியமானது. வானொலி மற்றும் மனதின் குரல் வாயிலாக நாட்டின் ஆற்றலுடனும், நாட்டு மக்களிடையே கடமையின் கூட்டு சக்தியுடனும் என்னால் இணைய முடிந்தது. ஒரு வகையில், உங்களது அகில இந்திய வானொலி குழுவில் நானும் அங்கம் வகிக்கிறேன்.

நண்பர்களே,

முக்கியமான தகவல்களை உரிய நேரத்தில் தருவது, சமூக கட்டமைப்பு முயற்சிகள், வேளாண் நடைமுறைகளுடன் தொடர்புடைய வானிலை அறிவிப்புகள், விவசாயிகளுக்கு உணவு மற்றும் காய்கறிகளின் விலை குறித்த தகவல்களை தெரிவிப்பது, வேளாண்மையில் ரசாயனங்களின் பயன்பாட்டால் ஏற்படும் இழப்பு குறித்த விவாதங்கள், விவசாயத்திற்கான மேம்பட்ட இயந்திரங்களை சேர்த்தல், புதிய சந்தை நிலவரங்கள் பற்றி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தெரிவித்தல் மற்றும் இயற்கை பேரிடரின் போது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உதவுதல் போன்றவற்றில் பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கலுக்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்தியா தனது முழு திறனையும் வெளிப்படுத்தி வளர வேண்டும் என்றால், வாய்ப்பு குறைவாக உள்ளது என்று இந்தியர் ஒருவரும் கருதாமல் இருப்பது அவசியம். நவீன தொழில்நுட்பத்தை மலிவான விலையில், அணுகக் கூடியதாகச் செய்வது இதற்கு அவசியம்.

140 கோடி மக்களையும் நாட்டையும் இணைப்பது தான் ந்த வகையான இணைப்பின் நோக்கமாகவும் இருக்க வேண்டும். தொடர் உரையாடல்களின் வாயிலாக அனைத்து பல்குதாரர்களும் இந்த தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்ந்து முன்னோக்கி செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். அகில இந்திய வானொலிக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

                                                ***

(Release ID: 1920470)

AP/BR/RR


(Release ID: 1921554) Visitor Counter : 177