பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது மாலத்தீவு பயணத்தின் 2-வது நாளில் விரைவு ரோந்து கப்பல் மற்றும் தாக்குதல் கப்பலை மாலத்தீவுக்கு வழங்கினார்

Posted On: 02 MAY 2023 3:06PM by PIB Chennai

3 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் இரண்டாவது நாளில்,  2023 மே 2-ம் தேதியன்று மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளிடம் (MNDF) ஒரு விரைவு ரோந்து கப்பல் மற்றும் தாக்குதல் கப்பலை ஒப்படைத்தார். மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் திருமதி மரியா அகமது தீதி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக, இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையேயுள்ள உறுதியின் அடையாளமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்கள், மாலத்தீவுகளிடம் ஒப்படைக்கப்பட்டதை விவரித்தார். “கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. நமது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், ஏற்றுமதிக்காகவும் உலகத்தரம் வாய்ந்த உபகரணங்களை உற்பத்தி செய்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், ஒன்றாக வளரவும் மற்றும் அனைவருக்கும் வெற்றி-வெற்றி சூழ்நிலையை உருவாக்கவும் கூடிய ஒன்றிணைந்த உறவுகளை உருவாக்க விரும்புகிறோம். மாலத்தீவு - இந்தியா இடையேயான உறவு காலப்போக்கில் மேலும் வலுவடையும், ” என்று மத்திய அமைச்சர் கூறினார்.

வளங்கள் சுரண்டப்படுதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இந்தியப் பெருங்கடல் பகுதி எதிர்கொள்ளும் மிக முக்கியமான பொதுவான சவால்களெனக் குறிப்பிட்ட திரு.ராஜ்நாத் சிங், இந்தியப் பெருங்கடல் பரப்பு அமைதியாக இருக்கவும், அதன் வளங்கள் உகந்த முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும்,  கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். காலநிலை மாற்றம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர், இது கடல்சார் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால் தேசிய மற்றும் பிராந்திய வளர்ச்சியில் சவால்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தினால் மாலத்தீவுகளில் பல்வேறு மாறுபாடுகள்  ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதனை சரிசெய்ய இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

முன்னதாக, மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலியை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். தற்போதைய திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்தனர். திரு.ராஜ்நாத் சிங் 2023 மே ஒன்றாம் தேதி மாலே சென்றடைந்தார். அவரது பயணத்தின் முதல் நாளில், மாலத்தீவுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.அப்துல்லா ஷாஹித்துடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

***

AD/CR/KPG


(Release ID: 1921410) Visitor Counter : 186