பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மே 1 முதல் 3 ஆம் தேதி வரை மாலத்தீவில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 30 APR 2023 10:09AM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023 மே 1முதல் 03ஆம் தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி மரியா அகமது திதி மற்றும் வெளியுறவு அமைச்சர் திரு அப்துல்லா ஷாஹித் ஆகியோருடன் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் . இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெறும். மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலியையும் அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

நட்பு நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் பங்குதாரர்களின் திறனை வளர்ப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப திரு ராஜ்நாத் சிங் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு விரைவு ரோந்து கப்பல் மற்றும் கடற்படை தரையிறங்கு கப்பல் ஒன்றையும் பரிசாக வழங்குவார்.  தற்போது அங்கு நடைபெற்று வரும் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு, புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடவுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப்பயணம் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான நட்புறவைக் கட்டியெழுப்புவதில் முக்கிய அடையாளமாக இருக்கும்.

கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதம், தீவிரவாதம், கடற்கொள்ளை, கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்ள இந்தியாவும் மாலத்தீவுகளும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) அதன் 'அண்டை நாடு முதன்மை' கொள்கை மற்றும் மாலத்தீவின் 'இந்தியா முதன்மை' கொள்கையுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைக் கூட்டாக மேம்படுத்த இணைந்து செயல்பட்டு வருகின்றன.

***

AP/CJL/DL(Release ID: 1920869) Visitor Counter : 106