சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா தொழிலில் ஸ்டார்ட்அப்களுக்கும், கூட்டு நிறுவனங்களுக்கும் பெருமளவிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன: திரு.ஜி.கிஷன் ரெட்டி

Posted On: 28 APR 2023 3:09PM by PIB Chennai

எதிர்வரும் முதலாவது உலக சுற்றுலா முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டையொட்டி, சம்பந்தப்பட்டவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய சுற்றுலா அமைச்சகம் இதற்காக புதுதில்லியில் 26-ந் தேதியும், மும்பையில் 27-ந் தேதியும் சாலையோர நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன. மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், இந்திய சுற்றுலாத் துறையில் கிடைத்துள்ள ஏராளமான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கூறினார். ஆரோக்கிய சுற்றுலா, சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ஊரக சுற்றுலா. ஆன்மீக சுற்றுலா போன்ற பல்வேறு வகையான சுற்றுலாக்களின் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த உள்கட்டமைப்புகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில். பல்வேறு முன்னணி ஓட்டல்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சரோவர் ஓட்டல்ஸ் மேலாண்மை இயக்குனர் திரு.அஜய் பாகையா, லெமன் ட்ரீ ஓட்டல்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு.பட்டு கேஸ்வானி, மேக்மை ட்டிரிப் தலைவரும், சிஐஐ தேசியக் குழுவின் இணைத் தலைவருமான திரு.தீபக் கல்ரா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மும்பை நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநிலத்தின் சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் திரு.சவ்ரவ் விஜய், குஜராத் மாநிலத்தின் சுற்றுலாத்துறை செயலாளர் திரு.ஹரித் சுக்லா, மத்தியப்பிரதேச சுற்றுலா வாரியத்தின் கூடுதல் மேலாண்மை இயக்குனர் திரு.விவேக் ஷ்ரோடோரியா, ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை இணை இயக்குனர் திரு.பவன் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலாவது உலக சுற்றுலா முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023, புதுதில்லியில் அடுத்த மாதம் 17 –ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்வெஸ்ட் இந்தியா, இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவற்றுடன் இணைந்து இந்த உச்சிமாநாடு நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் இந்திய சுற்றுலாத் துறையில் ஜி20 நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் தளமாக இந்த உச்சிமாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* * *

 (Release ID: 1920507)

AD/PKV/RR/KRS



(Release ID: 1920546) Visitor Counter : 129