உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன்" விருதை டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்
Posted On:
16 APR 2023 5:08PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன்" விருதை டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எந்தப் புகழுக்கும் ஆசைப்படாமல் பொது வாழ்வில் சமூக சேவை செய்த சமூக சேவகர் அப்பாசாகேப் மீது மக்கள் ஆழ்ந்த மரியாதையும் பக்தியும் கொண்டுள்ளனர் என்று திரு அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார். அப்பாசாகேப் செய்த தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மூலமாகவே இத்தகைய மரியாதை மற்றும் பக்தியை அடைய முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார். அப்பாசாகேப் மீதான மக்களின் அன்பும், நம்பிக்கையும், மரியாதையும் அவரது பணி மற்றும் மாண்புக்கும் நானாசாகேபின் போதனைகளுக்குமான பரிசாகும். மக்களைப் பின்பற்றுவதற்கு பதிலாக, அப்பாசாகேப் போன்று, மக்கள் பின்பற்றும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்று திரு ஷா கூறினார்.
சமூக சேவை எனும் கலாசாரம் ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக நீடிப்பது வரலாற்றில் அரிதாகக் காணப்படுவது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். முதலில் நானாசாகேப், பிறகு அப்பாசாகேப், இப்போது சச்சின் பாவ் மற்றும் அவரது சகோதரர்கள் சமூக சேவையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். அவருக்கு மகாராஷ்டிர பூஷன் விருது வழங்கியதன் மூலம் மகாராஷ்டிரா அரசு அப்பாசாகேபை கௌரவித்தது மட்டுமின்றி, அவரைப் போல் வாழ கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிர பூஷன் விருது 1995ல் நிறுவப்பட்டது என்றும், அதன் பின்னர் மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் சமூக வாழ்க்கைக்குப் பங்களித்த பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் திரு அமித் ஷா கூறினார். இப்போது நானாசாகேபின் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாசாகேபுக்கு விருது கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். ஒரே குடும்பத்திற்கு இரண்டாவது முறையாக மகாராஷ்டிர பூஷன் விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். "நாம் முன்னேறுவோம்" என்ற முழக்கத்துடன் அப்பாசாகேப் தனது செயல்களின் மூலம் சமூகத்தை வழிநடத்தினார் என்று திரு ஷா கூறினார். குழந்தைகள் மேம்பாடு, இலவசமாகக் கல்விப் பொருட்கள் விநியோகம், மரம் வளர்ப்பு, தூய்மை செய்தல், ரத்த தானம், திருவிழாக் காலங்களில் குப்பைகளைச் சேகரிக்கும் தனித்துவ நடைமுறை, கிணறுகளை சுத்தம் செய்தல், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பழங்குடியினர் நலன், போதையில்லா சமுதாயம், மூடநம்பிக்கை ஒழிப்பு, எழுத்தறிவின்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டு இந்தப் பணிகளில் பல உதாரணங்களை ஏற்படுத்தினார்.
அப்பாசாகேபின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்த திரு அமித் ஷா, அவரது லட்சக்கணக்கான தொண்டர்கள் அப்பாசாகேப் வழிகாட்டுதல்படி பல ஆண்டுகள் சமூகத்தில் தொடர்ந்து பணியாற்ற வாழ்த்து தெரிவித்தார். அப்பாசாகேப் போன்ற தகுதியான ஆளுமைக்கு மகாராஷ்டிர பூஷண் விருது வழங்கியதற்காக மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
***
AD/SMB/DL
(Release ID: 1917123)
Visitor Counter : 201