பிரதமர் அலுவலகம்

அசாம் மாநிலம் குவாஹத்தியில் ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்


குவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
‘உங்கள் வீடுதேடி மருத்துவம்’ இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்

அசாம் நவீன சுகாதார நலன்சார்ந்த புதிய கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்

"கடந்த ஒன்பது ஆண்டுகளில் வடகிழக்கில் சமூக உள்கட்டமைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது"

"நாங்கள் மக்களுக்கு 'சேவை மனப்பான்மை' யுடன் பணியாற்றுகிறோம்"

"வடகிழக்கின் வளர்ச்சி மூலம் இந்தியாவின் வளர்ச்சி என்ற மந்திரத்துடன் நாம் முன்னேறி வருகிறோம்"

"அரசின் கொள்கை, நோக்கங்கள், அர்ப்பணிப்பு ஆகியவை சுயநலத்தால் இயக்கப்படவில்லை, மாறாக 'தேசமே முதலில் - மக்களே முதலில்' என்ற உணர்வால் இயக்கப்படுகிறது"

"வாரிசு அரசியல், பிராந்தியவாதம், ஊழல் மற்றும் உறுதியற்ற தன்மை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்போது வளர்ச்சி சாத்தியமற்றது"

"எங்கள் அரசால் தொடங்கப்பட்ட திட்டங்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் பயனளிக்கின்றன"

"எங்கள் அரசு 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப இந்தியாவின் சுகாதாரத் துறையை நவீனமயமாக்குகிறது"

"அனைவரின் முயற்சி என்பது இந்திய சுகாதார அமைப்பில் மாற்றத்திற்கான மிகப்பெரிய அடிப்படை"

Posted On: 14 APR 2023 2:07PM by PIB Chennai

அசாம் மாநிலம் குவாஹத்தியில் இன்று  ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  அடிக்கல் நாட்டி,நாட்டுக்கு அர்ப்பணித்தார். குவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அசாம் நவீன சுகாதார நலன்சார்ந்த  புதிய கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்ட அட்டைகளை வழங்கி  ‘உங்கள் வீடு தேடி மருத்துவம்’ இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், புனிதமான ரோங்காலி பிஹு விழாவையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளதால், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சுகாதார உள்கட்டமைப்பு புதிய பலத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஐஐடி குவாஹத்தியுடன் இணைந்து மேம்பட்ட ஆராய்ச்சிக்காக 500 படுக்கைகள் கொண்ட உயர் சிறப்பு  மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதையும்  அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.  அசாமின் லட்சக்கணக்கான குடிமக்களுக்கு ஆயுஷ்மான் அட்டைகள்  விநியோகிக்கும் பணி இயக்க முறையில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்த குடிமக்களும் இன்றைய வளர்ச்சித் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள் என்று பிரதமர் கூறினார். இன்றைய திட்டங்களுக்காக அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

வடகிழக்கில் போக்குவரத்துத் தொடர்பை  மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் கடந்த 8-9 ஆண்டுகளில் சாலை, ரயில் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பில் காணப்படும் முன்னேற்றம் குறித்துப்  பிரதமர் குறிப்பிட்டார். கல்வி மற்றும் சுகாதார வசதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதியில் கட்டுமான உட்கட்டமைப்புடன், சமூக உட்கட்டமைப்பும் மாபெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளதாகப்  பிரதமர் கூறினார். பிரதமர் தமது முந்தைய பயணத்தின் போது பல மருத்துவக் கல்லூரிகளை வழங்கினார், இன்று அவர் எய்ம்ஸ் மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை வழங்கினார். இப்பகுதியில் மருத்துவ வசதிகளுக்கான ஆதரவையும், தொடர்ந்து மேம்பட்டு வரும் ரயில்-சாலை இணைப்பிலிருந்து நோயாளிகளுக்கான ஆதரவையும்  பிரதமர் கோடிட்டுக் காட்டினார்.

கடந்தகால ஆட்சிகளின் புகழடையும் பசியும், மக்களின் மீதான ஆதிக்க உணர்வும் தேசத்தை எப்படி உதவியற்றதாக மாற்றியது என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், பொது மக்களும் கடவுளின் வடிவம் என்பதைச் சுட்டிக்காட்டினார். கடந்த அரசுகள் வடகிழக்கின் மீது அந்நிய உணர்வை ஏற்படுத்தியதாகவும், அது பிரதான நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகக் கருதச் செய்ததாகவும் அவர் கூறினார். ஆனால் தற்போதைய அரசு, சேவை சார்ந்த நம்பிக்கையுடன் அணுகுகிறது. இது வடகிழக்கை மிகவும் நெருங்கக்கூடியதாக ஆக்குகிறது. இந்த அருகமை உணர்வு ஒருபோதும் மாறாது என்று பிரதமர் விவரித்தார்.

வடகிழக்கு மக்கள் தங்கள் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும்  பொறுப்பானவர்கள் ஆகியிருப்பது குறித்துப்   பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். “வடகிழக்கு வளர்ச்சியின் மூலம் இந்தியாவின் வளர்ச்சி என்ற மந்திரத்துடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். இந்த வளர்ச்சி இயக்கத்தில், மத்திய அரசு நண்பனாகவும், சேவகனாகவும் துணை நிற்கிறது” என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்தப் பகுதியின்  நீண்டகால சவால்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், வாரிசு அரசியல், பிராந்தியவாதம், ஊழல் மற்றும் உறுதியற்ற தன்மை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் போது வளர்ச்சி  சாத்தியமற்றதாகிவிடும் என்றார். இது, நமது சுகாதார அமைப்பில் நடந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 50 களில் நிறுவப்பட்ட எய்ம்ஸ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் எய்ம்ஸ் திறக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதன் மூலம் இதை அவர் விளக்கினார். திரு  அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் இந்த செயல்முறை தொடங்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் முயற்சிகள் நகரவில்லை என்றும், 2014 க்குப் பிறகுதான், தற்போதைய அரசால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன என்றும் பிரதமர் கூறினார். அண்மை  ஆண்டுகளில் அரசு 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணியைத் தொடங்கியுள்ளது என்றும், அவற்றில் பெரும்பாலானவற்றில் சிகிச்சைகள் மற்றும் படிப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். “எங்கள் அரசு அனைத்துத் தீர்மானங்களையும் நிறைவேற்றுகிறது என்பதற்கு எய்ம்ஸ் குவாஹத்தியும் ஓர் எடுத்துக்காட்டு” என்று பிரதமர் கூறினார்.

முந்தைய அரசுகளின் கொள்கைகள் நாட்டில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை உருவாக்கியது; தரமான சுகாதார சேவைக்கு முன் சுவர் எழுப்பப்பட்டது என்று பிரதமர் மீண்டும் உறுதிபட தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில், நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ நிபுணர்களை அதிகரிப்பதற்கு அரசு மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். மருத்துவ உள்கட்டமைப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்த பிரதமர், 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய தசாப்தத்தில்  150 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் என்பதுடன் ஒப்பிடும்போது, கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 300 மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன என்றார். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் இரு மடங்காகி 1 லட்சமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் முதுநிலை படிப்புக்கான இடங்கள் 110 சதவீதம் உயர்ந்துள்ளன என்றும் அவர் கூறினார். நாட்டில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதற்காக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளை நனவாக்கும் வகையில் இடஒதுக்கீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைப் பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் 150க்கும் அதிகமான செவிலியர் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். வடகிழக்கில், பல புதிய கல்லூரிகளுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் உறுதியான பணிக்கு மத்தியில் வலுவான மற்றும் நிலையான அரசு இருப்பதே காரணம் என்று பிரதமர் கூறினார். பிஜேபி அரசின் கொள்கை, நோக்கங்கள், அர்ப்பணிப்பு ஆகியவை சுயநலத்தால் இயக்கப்படுவதில்லை, மாறாக ‘தேசமே முதலில் - நாட்டு மக்களே முதலில்’ என்ற உணர்வால் இயக்கப்படுகிறது என்றார். அதனால்தான், அரசின் கவனம் வாக்கு வங்கியில் இல்லாமல் குடிமக்களின் பிரச்சினைகளைக் குறைப்பதில் உள்ளது என்றார். ஏழைக் குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சைக்கு நிதி ஆதாரம் இல்லாத அவல நிலையைத் தாம் புரிந்து கொண்டதாகக் கூறிய பிரதமர், 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் திட்டம் குறித்துப் பேசினார். இதேபோல், 9,000 மக்கள் மருந்தக மையங்கள் மலிவு விலையில் மருந்துகளை வழங்குகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டெண்டுகள், முழங்கால் மாற்று சிகிச்சை மற்றும் இலவச டயாலிசிஸ் மையங்களின் கட்டணத்திற்கு உச்சவரம்பு விதித்திருப்பது பற்றி அவர் குறிப்பிட்டார். 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஆரோக்கிய மையங்கள் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிறந்த சிகிச்சைக்கான முக்கியமான சோதனைகளை வழங்குகின்றன. பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டம்நாடு மற்றும் ஏழைகளின் முக்கிய மருத்துவ சவாலையும் எதிர்கொள்கிறது. சுகாதாரம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றின் மூலம் தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; நோய்களைத் தடுக்கும்.

"21ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப இந்தியாவின் சுகாதாரத் துறையையும் எமது அரசு நவீனப்படுத்துகிறது” என்று திரு மோடி கூறினார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஹெல்த் மிஷன் மற்றும் டிஜிட்டல் ஹெல்த் ஐடி ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார், இது குடிமக்களின் சுகாதார பதிவுகளை ஒரே கிளிக்கில் அறியச் செய்யும் மற்றும் மருத்துவமனை சேவைகளை மேம்படுத்தும். இதுவரை 38 கோடி சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதற்கும், 2 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருப்பதற்கும்  1.5 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் சரிபார்க்கப்பட்டிருப்பதற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இ-சஞ்சீவினி பிரபலமடைந்து வருவது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டத்தின் மூலம் 10 கோடி இ-ஆலோசனை செய்யப்பட்ட சாதனையைக் குறிப்பிட்டார்.

"இந்திய சுகாதார அமைப்பில் மாற்றத்திற்கான மிகப்பெரிய அடிப்படை அனைவரின் முயற்சி", என்று பிரதமர் கூறினார். கொரோனா வைரஸ்  நெருக்கடியின் போது அனைவரின் முயற்சி உணர்வை அவர் நினைவு கூர்ந்தார், மேலும் உலகின் மிகப்பெரிய, வேகமான, மிகவும் பயனுள்ள கொவிட் தடுப்பூசி இயக்கத்தை  முழு உலகமும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருந்துத் துறையினர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மிகக் குறுகிய காலத்திற்குள் தொலைதூர இடங்களுக்குக் கூட வழங்குவதில் செய்த பங்களிப்பை அவர் குறிப்பிட்டார்.  அனைவரின் முயற்சியும் அனைவரின் நம்பிக்கையும்  இருக்கும் போதுதான் இவ்வளவு பெரிய யாகம் வெற்றியடைகிறது” என்று பிரதமர் கூறினார். அனைவரின் முயற்சி என்ற  உணர்வோடு அனைவரும் முன்னேறி, ஆரோக்கியமான இந்தியா, வளமான இந்தியா என்ற பணியை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லுமாறு அனைவரையும் வலியுறுத்தி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார் .

அசாம் ஆளுநர் திரு  குலாப் சந்த் கட்டாரியா, அசாம் முதலமைச்சர், திரு  ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர், டாக்டர் பாரதி பவார் மற்றும் அசாம் மாநில அமைச்சர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

***

AD/SMB/DL



(Release ID: 1916647) Visitor Counter : 176