வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஏராளமான வாய்ப்புகள் இந்தியாவை உலகின் மிகவும் நம்பகமான வணிக முதலீட்டு இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன: ரோமில் தலைமை நிர்வாக அதிகாரிகளின் வணிகக் கலந்தாய்வு அமர்வில் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
14 APR 2023 11:20AM by PIB Chennai
இத்தாலியின் ரோம் நகரில் நேற்று (13.04.2023) தலைமை நிர்வாக அதிகாரிகளின் வணிகக் கலந்துரையாடல் அமர்வில் பேசிய மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தியாவின் ஏராளமான வாய்ப்புகள் எவ்வாறு உலகின் நம்பகமான வணிகம் மற்றும் முதலீட்டு இடமாக அதனை மாற்றியிருக்கின்றன என்பதை விரிவாக எடுத்துரைத்தார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையற்ற வர்ததக சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதோடு இந்தியா உலகளாவிய தொடர்புகளைக் கொண்ட ஒரு திறந்த நாடு என்று அவர் கூறினார்.
அண்மையில் மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கு உத்தியில் ஏராளமான புதிய வாய்ப்புகள் இருப்பதால், இந்தியா-இத்தாலி பங்களிப்பில் அதிக இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இந்தியா 55% வளர்ச்சி கண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவில் சுமார் 700 இத்தாலிய நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், இந்தியாவில் இருப்பதற்கு இதுவே உகந்த நேரம் என்றும் அவர் தெரிவித்தார். எதிகாலத்திற்கேற்ற மாற்றங்களுடன் மிகவும் வலுவான மற்றும் முன்னோக்கிய கொள்கைக் கட்டமைப்பை இந்தியா வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தாலி துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான திரு. அன்டோனியோ தஜானியும் இந்தக் கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்று தொழிலதிபர்களிடையே உரையாற்றினார். குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் தொழில்துறையை ஆதரிப்பதன் மூலம் இரு நாடுகளிலும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த நிலையை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று திரு. தஜானி தெரிவித்தார்.
இந்த ஆழ்ந்த ஈடுபாட்டிற்காக திரு. தஜானியை திரு கோயல் பெரிதும் பாராட்டினார். மேலும் இந்தியா-இத்தாலி நட்புறவில் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இந்தப் பயணத்தின் மூலம் புதிய யோசனைகள் உருவாகியிருப்பதாகவும் அவர் கூறினார். பாரம்பரியம், கலாசாரம், பகிரப்பட்ட மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றால் இணைந்துள்ள நாடுகள் மேலும் பலவற்றை சாதித்து, ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியா-இத்தாலி ஒன்றாக வளரும், ஒன்றாக சாதிக்கும், ஒன்றாக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
இத்தாலியின் ரோமில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) , கான்ப்இண்டஸ்ட்ரியா ஆகியவற்றுடன் இணைந்து, தலைமை நிர்வாக அதிகாரிகளின் வணிகக் கலந்துரையாடும் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமர்வில் இந்திய மற்றும் இத்தாலிய நிறுவனங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
***
AD/SMB/DL
(रिलीज़ आईडी: 1916534)
आगंतुक पटल : 233