இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

விளையாட்டுகளில் நேர்மைக்கு வழிவகுத்தல் மற்றும் ஊட்டச்சத்து துணைப் பொருட்களில் உள்ள அபாயங்கள் தொடர்பான தேசிய மாநாடு புதுதில்லியில் இன்று நடைபெற்றது

Posted On: 13 APR 2023 5:23PM by PIB Chennai

"விளையாட்டில் நேர்மைக்கு வழிவகுத்தல், ஊட்டச்சத்து துணைப்பொருட்களின் பயன்பாட்டில் உள்ள அபாயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்" என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டிற்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை புதுதில்லியில் இன்று (13.04.2023) ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஊட்டச்சத்து துணைப்பொருட்களில் உள்ள அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கூட்டு பொறுப்பு என்று கூறினார். எனினும் தாங்கள் உட்கொள்ளும் பொருட்களுக்கு விளையாட்டு வீரர்களே இறுதியில் பொறுப்பாவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியிருந்தால் அதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ), ஐதராபாத்தில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐபிஇஆர்), தேசிய தடய அறிவியல் பல்கலைக் கழகம் (என்எப்எஸ்யு), ஆகியவற்றுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஊட்டச்சத்து துணைப் பொருட்களின் ஆய்வு மற்றும் திறன் கட்டமைப்பை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது உங்களது மருந்தை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Medicine) என்ற வலைதளத்தையும், மொபைல் செயலியையும் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த மொபைல் செயலி ஆங்கிலம் மற்றும் இந்தியில் தகவல்களை கொண்டுள்ளது. மருந்துகளின் பயன்பாடு தொடர்பாக விளையாட்டு வீரர்களுக்கு தகவல்களை இந்த செயலி வழங்கும். மருந்துகளின் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்தும் விளையாட்டு வீரர்கள் இச்செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட சில நாடுகளுடன் இணைந்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்த செயலியை வடிவமைத்துள்ளது.

மத்திய விளையாட்டுத் துறை செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் தலைமை இயக்குநர் திருமதி ரித்து செயின் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மத்திய விளையாட்டு அமைச்சகம், மாநிலங்களின் விளையாட்டுத்துறை பிரதிநிதிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.   

 

***

AP/PLM/MA/KPG

 



(Release ID: 1916327) Visitor Counter : 140